Culture & Tourism
கேலோ இந்தியா நீர் விளையாட்டுத் திருவிழாவால் ஜொலிக்கப்போகும் தால் ஏரி
Posted On:
19 AUG 2025 2:51PM
சபர்வான் மலைகள் வானத்தைத் தொட்டு நிற்க, ஷிகாராப் படகுகள் மின்னும் நீரின் மீது மென்மையாக மிதந்து செல்லும் காஷ்மீரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள தால் ஏரி, பல நூற்றாண்டுகளாக ஸ்ரீநகரின் ஆன்மாவாகத் திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இதன் அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ரசிக்க வருகின்றனர். இப்போது, தால் ஏரி ஒரு புதிய பாத்திரத்தை ஏற்கத் தயாராக உள்ளது; இளைஞர்களின் ஆற்றலும், விளையாட்டுத் திறனும் அதன் நீர் பரப்பில் அலைகளாகப் பரவப்போகும் ஒரு விளையாட்டு அரங்கமாக இது மாறப்போகிறது.
ஆகஸ்ட் 21 முதல் 23 வரை, தால் ஏரி தனது முதலாவது கேலோ இந்தியா நீர் விளையாட்டுத் திருவிழாவை நடத்தவுள்ளது. காஷ்மீரின் இந்த ஆபரணம் ஒரு தேசிய விளையாட்டு இடமாக உருவெடுக்கும் ஒரு வரலாற்றுத் தருணத்தை இது குறிக்கிறது.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள், இந்த ஏரியில் ஒன்றிணைந்து துடுப்புப் படகுப் போட்டி, கனோயிங் மற்றும் கயாக்கிங் ஆகிய மூன்று பதக்கப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவற்றுடன் வாட்டர் ஸ்கீயிங், டிராகன் படகுப் பந்தயம் மற்றும் ஷிகாரா ஸ்பிரிண்ட் போன்ற உற்சாகமான நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இந்த நீர் விளையாட்டுத் திருவிழாவானது, விளையாட்டுத் திறனையும் கலாச்சார பாரம்பரியத்தையும் ஒன்றிணைத்து, பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்க உள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் விளையாட்டுத் துறையில் ஒரு புதிய யுகம்
ஜம்மு & காஷ்மீரை இந்தியாவின் முதன்மையான விளையாட்டு மையங்களில் ஒன்றாக மாற்ற அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஏற்கனவே குல்மார்க் பகுதி, ஐந்து முறை வெற்றிகரமாக 'கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை' நடத்தி, நாட்டின் குளிர்கால விளையாட்டு மையமாகப் பெருமையுடன் திகழ்கிறது. இப்போது, தால் ஏரி வெளிச்சத்திற்கு வருவதன் மூலம், ஜம்மு & காஷ்மீர் நீர் விளையாட்டுகளுக்கான ஒரு முக்கியமான மையமாக மாறத் தயாராகிவிட்டது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் ஆகியவற்றால் கூட்டாக இணைந்து நடத்தப்படும் இந்தத் திருவிழா, அரசின் 'விளையாடு இந்தியா’ கொள்கையின் நேரடி விளைவாகும். இது அடிமட்ட அளவிலான விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், வாழ்வாதாரத்தை உருவாக்கவும் மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பைப் புதுப்பிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திருவிழா விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ஷிகாரா படகு உரிமையாளர்கள், படகு இல்லம் நடத்துநர்கள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுலாத் துறைக்கும் பொருளாதார நன்மைகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல ஒலிம்பிக் வீராங்கனையும், சர்வதேச 'கனோயிங்' நடுவருமான பில்கிஸ் மிர் பெருமையுடன் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"இது வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல, நம் நாட்டில் நீர் விளையாட்டுகளுக்கான ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாகும். அனைத்து தடக வீரர்களின் சார்பாக, நீர் விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றின் முக்கியத்துவத்தை உண்மையாக அங்கீகரித்ததற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் ஒட்டுமொத்த 'கேலோ இந்தியா' குழுவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1990-களில் எனது 10 வயதில் நான் இங்கு படகு துடுப்புப் பயிற்சியைத் தொடங்கியபோது, ஒரு நாள் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்க வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றபோது அந்தக் கனவு நனவானது. இந்த நிகழ்வு மிகவும் உற்சாகமானதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும், மிகப்பெரிய மேடைகளில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்க வேண்டும் என்று கனவு காணும் நமது இளம் வீரர்களுக்கு இது ஒரு சிறந்த ஊக்கமாக அமையும்." என்றார்.
நீர் விளையாட்டுப் பயிற்சியாளர் முகமது இம்தியாஸ் கூறுகையில், “'கேலோ இந்தியா' குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்தான் குல்மார்க்கை நாட்டின் குளிர்கால விளையாட்டு மையமாக மாற்றியது. அதேபோல், இந்த 'கேலோ இந்தியா நீர் விளையாட்டுத் திருவிழா' ஜம்மு-காஷ்மீரை நாடு முழுவதும் உள்ள நீர் விளையாட்டு வீரர்களிடையே புகழ்பெற்ற இடமாக மாற்றும்," என்றார்.
பல இளைஞர்கள் இந்த நிகழ்வின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கயாக்கிங் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வரும் இளம் வீரர் மொஹ்சின் அலி, ஜம்மு-காஷ்மீரின் மாநில சாம்பியன் ஆவார். இவர் தேசிய அளவிலான போட்டிகளில் மூன்று தங்கம் உட்பட 15 பதக்கங்களை வென்றுள்ளார். மற்ற வீரர்களைப் போலவே, மொஹ்சினும் தனது சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றும் நம்பிக்கையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தால் ஏரி: கலாச்சாரம் மற்றும் போட்டியின் சங்கமம்
விளையாட்டையும் தாண்டி, இந்த நிகழ்வு காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைக் கொண்டாடும் ஒரு விழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் இயற்கை அழகைப் பாதுகாப்பதற்காகத் தூய்மைப் பணிகள் மற்றும் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே வேளையில், இந்தத் திருவிழாவின் அதிகாரப்பூர்வச் சின்னமாக இமாலய மீன்கொத்தி' பறவையும், ஏரியின் அடையாளமான 'ஷிகாரா' படகைக் கொண்ட இலச்சினையும் அதன் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுகின்றன.

நீர் விளையாட்டு வீரரும், ஷிகாரா படகு ஓட்டுநருமான முகமது ரஃபிக் மல்லா, இதனை ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதுகிறார்:
“இந்தத் திருவிழா விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல், தால் ஏரிப் பகுதியில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். நாடு முழுவதிலுமிருந்து இளம் வீரர்கள் தால் ஏரியில் விளையாடுவதைக் காண நான் விரும்புகிறேன். அதே நேரத்தில், அவர்கள் ஜம்மு-காஷ்மீரை ரசிக்க வேண்டும் என்றும், தால் ஏரிப் பகுதியில் பரபரப்பான வாழ்க்கையை நேரில் காண வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். தால் ஏரிப் பகுதி மக்கள் நீந்துவதையும், மிதக்கும் தோட்டங்களிலிருந்து தாமரை மலர்கள் மற்றும் காய்கறிகளைத் தங்கள் கூடைகளில் பறிப்பதையும் அவர்கள் பார்க்க வேண்டும்; அதோடு சபர்வான் மலைகளின் அழகையும் ரசிக்க வேண்டும்.” என்றார்.
அன்போடு "மலர்களின் ஏரி" என்று அழைக்கப்படும் இந்த ஏரி, மீன்பிடித் தொழில் மற்றும் நீர்வாழ் தாவரங்களைச் சேகரித்தல் போன்ற தொழில்களைத் தாங்கிப் பிடிப்பதன் மூலம் உள்ளூர் வர்த்தகத்திற்கு மிக முக்கியமானதாகத் திகழ்கிறது.
ஏரியின் கரையானது பூங்காக்கள், முகலாய காலத் தோட்டங்கள், படகு இல்லம் மற்றும் ஹோட்டல்கள் நிறைந்த ஒரு அழகான நெடுஞ்சாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாலிமார் பாக் மற்றும் நிஷாத் பாக் போன்ற முகலாயத் தோட்டங்களிலிருந்து பயணிகள் தால் ஏரியின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை ரசிக்க முடியும். வரலாற்று ரீதியாக, பயணிகளும் கவிஞர்களும் இதன் அழகையும் துடிப்பான வாழ்க்கையையும் போற்றியுள்ளனர்; இதுவே இப்பகுதியின் அடையாளமாக இந்த ஏரி மாறுவதற்குக் காரணமாக அமைந்தது.
இந்தியாவின் விளையாட்டுச் சூழலில் ஒரு மைல்கல்
தால் ஏரி என்பது வெறும் ஒரு விளையாட்டு மைதானம் மட்டுமல்ல; விளையாட்டுகளை வெறும் மைதானங்களுக்குள் முடக்காமல், இயற்கையான நிலப்பரப்புகளுக்குக் கொண்டு செல்லும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் அடையாளமாகும். குல்மார்க்கின் பனிச் சரிவுகள் முதல் டையூ-வின் கடற்கரை மணல் பகுதிகள் வரை, இப்போது ஸ்ரீநகரின் மின்னும் நீர்நிலைகள் என கேலோ இந்தியா நாட்டின் விளையாட்டுச் சூழலை மறுவரையறை செய்து வருகிறது.
இந்தத் திருவிழாவின் போது தால் ஏரியின் குறுக்கே எழும் துடுப்புகளின் அலைகள், வெறும் போட்டியை மட்டுமல்லாமல் நமது பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் செய்திகளையும் சுமந்து செல்லும். இதன் மூலம், 'கேலோ இந்தியா நீர் விளையாட்டுத் திருவிழா 2025' தால் ஏரியின் தலையெழுத்தை மாற்றுவதுடன், ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் விளையாட்டு வரைபடத்தில் ஒரு அழியாத முத்திரையுடன் உயர்த்தத் தயாராகிவிட்டது.

துடுப்புகளின் ஓசையும், வீரர்களின் உற்சாகக் குரல்களும் தால் ஏரியில் எதிரொலிக்கத் தயாராகியுள்ள நிலையில், இது வெறும் ஒரு விழாவை மட்டும் நடத்தவில்லை; கலாச்சாரமும் போட்டியும் அதன் காலத்தால் அழியாத நீரோட்டத்தைப் போலவே ஒன்றாக இணைந்து காஷ்மீரின் விளையாட்டுப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது.
****
VK/PD/KR
(Features ID: 158069)
आगंतुक पटल : 29
Provide suggestions / comments