• Sitemap
  • Advance Search
Infrastructure

தொலைவை நெருக்கமாக்கி, பீகாரை இணைத்தல்

6 வழித்தடம் கொண்ட அவுண்டா–சிமரியா கங்கா பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்

Posted On: 20 AUG 2025 4:01PM

கம்பீரமான கங்கை நதியின் மீது அமையவிருக்கும் 1.865 கி.மீ. நீளமுள்ள ஆறு வழிப் பாலம் உள்ளிட்ட அவுண்டா-சிமரியா திட்டத்தை, 2025 ஆகஸ்ட் 22 அன்று பிரதமர் திறந்து வைக்கவிருப்பதால், பீகாரின் உள்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. பாட்னா மாவட்டத்தில் உள்ள மோகாமாவை பேகுசராயுடன் இணைக்கும் இத்திட்டம், வடக்கு மற்றும் தெற்கு பீகாருக்கு இடையேயான ஒரு முக்கிய இணைப்பாகும். மேலும், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானதும், தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதுமான ராஜேந்திர சேது பாலத்திற்கு இது ஒரு மாற்று வழியாகவும் அமையும்.

கங்கையைக் கடந்து: ஒரு பிராந்திய கனவை நிறைவேற்றுதல்

முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை -31 வழித்தடத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், 4/6 வழி அவுண்டா (மொகாமா)–சிமரியா (பெகுசராய்) வழித்தடத்தின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது. இதன் முக்கியத்துவம், அதன் பொறியியல் வலிமையில் மட்டுமல்லாமல், அது பீகாருக்கு வழங்கும் இணைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாக்குறுதியிலும் அடங்கியுள்ளது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, இருவழி ரயில் மற்றும் சாலைப் பாலமான, மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜேந்திர சேது, நீண்ட காலமாக இப்பகுதிக்கு உயிர்நாடியாக இருந்து வருகிறது. இருப்பினும், காலப்போக்கில் ஏற்பட்ட பழுதுகளால், இது கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவானதாக இல்லை. இதனால், அவை நீண்ட மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றன.

புதிய ஆறு வழிப் பாலம், பழைய ராஜேந்திர சேதுவுக்கு இணையாகக் கட்டப்பட்டுள்ளது. இது பாட்னா மற்றும் முசாஃபர்பூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நேரடியான மற்றும் நவீன மாற்று வழியை வழங்குவதுடன், போக்குவரத்து இயக்கத்தை சீர்படுத்தி, ஆற்றின் இருபுறமும் உள்ள சமூகங்களின் நம்பிக்கையையும் லட்சியத்தையும் மீட்டெடுக்கிறது.

இணைப்பையும் வளர்ச்சியையும் வெளிக்கொணர்தல்:

பாட்னா மாவட்டத்தின் மொகாமா மற்றும் பேகுசராய் பகுதி மக்களுக்கு, இந்தப் புதிய பாலம் வெறும் ஒரு பாதை என்பதைத் தாண்டி, அது அவர்களின் லட்சியங்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தைகளை இணைக்கிறது. முன்பு நீண்ட தூரம் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்ட கனரக வாகனங்கள், இனி தடையற்ற போக்குவரத்தை அனுபவிக்கும். இந்த இணைப்பு, பீகாரின் வடக்கு (பேகுசராய், சுபௌல், மதுபனி மற்றும் அராரியா போன்றவை) மற்றும் தெற்கு (பாட்னா, ஷேக்ஸ்புரா, நவாடா மற்றும் லக்கிசராய் உட்பட) பகுதிகளுக்கு இடையேயான பயண தூரத்தை 100 கி.மீ. வரை குறைக்கும்.

பயண தூரத்தில் ஏற்படும் இந்த வியத்தகு குறைப்பு, நேரம், எரிபொருள் மற்றும் வாகன இயக்கச் செலவுகள் ஆகியவற்றில் நேரடிச் சேமிப்பாக மாறுகிறது. பயணம் எளிதாகவும் வேகமாகவும் மாறுவதால், இந்தப் புதிய பாலம் வர்த்தகத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கவும், உள்ளூர் தொழில்களை ஆதரிக்கவும், பொருட்கள் மற்றும் மக்களின் விரைவான போக்குவரத்தைச் சார்ந்துள்ள சமூகங்களின் பொருளாதார மீள்திறனை மேம்படுத்தவும் தயாராக உள்ளது.

இந்தத் திட்டத்தில், கங்கை நதியின் மீது 34 மீட்டர் அகலமுள்ள தளத்தைக் கொண்ட ஒற்றைப் பகுதி கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் மிக அகலமான சிறப்பு வாய்ந்த பாலம் இடம்பெற்றுள்ளது. 57 மீ முதல் 115 மீ வரையிலான இடைவெளி நீளங்களும், ஒரு முனையில் தாங்கி இல்லாத 70 மீ அமைப்பும் , இந்தக் கட்டமைப்பு பொறியியல் சிறப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் குறித்துப் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரி எம். எல். யோத்கர், “கட்டுமானப் பணியின்போது எங்கள் குழுவினர் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது, ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ள ஒரு தாழ்வான பகுதியாகும். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 8 மாதங்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், இந்த வெள்ளப்பெருக்குகள் அப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கடினமாக்குவதுடன், அவர்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கின்றன” என்றார். இந்தப் பாலம் இப்பகுதி மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம்:

நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கி விரிவுபடுத்துவதில் அரசின் அர்ப்பணிப்புக்கு அவுண்டா-சிமரியா பாலம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இது, மாநிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் முன்னேற்றம் சென்றடைவதை உறுதிசெய்து, இணைப்பை மேம்படுத்தவும் பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் ஒரு மாற்றத்திற்கான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

மேலும், இந்தப் பாலம், புகழ்பெற்ற கவிஞர் மறைந்த திரு ராம்தாரி சிங் தின்கரின் பூர்வீகமும், புகழ்பெற்ற புனித யாத்திரைத் தலமுமான சிமரியா தாமுக்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

எதிர்கால சூழல்கள்: வாழ்க்கையை மாற்றுதல்

அவுண்டா-சிமரியா பாலத்தின் திறப்பு விழா, பீகாரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. கங்கையின் மீது நம்பகமான மற்றும் திறன் வாய்ந்த ஒரு வழித்தடம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதால், பீகார் மக்கள் விரைவான போக்குவரத்து இணைப்பு, குறைந்த பொருளாதாரச் சுமைகள் மற்றும் மேம்பட்ட வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். இந்தத் திட்டத்தின் தாக்கம், வாகனங்களின் மேம்பட்ட போக்குவரத்தில் மட்டுமின்றி, பயணத்தின் எளிமையால் பயனடையும் ஒவ்வொரு இல்லம், வணிகம் மற்றும் சமூகத்திலும் உணரப்படும்.

மாண்புமிகு பிரதமர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டமைப்பைத் திறந்து வைக்கும் வேளையில், தூரங்களை இணைத்து, வாழ்க்கையை மேம்படுத்தி, ஒரு பிரகாசமான, மேலும் பிணைக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கி நாட்டை இயக்கும் நவீன இந்தியாவின் உணர்விற்கு ஒரு வலிமையான சான்றாக அவுண்டா-சிமரியா பாலம் விளங்குகிறது.

***

BR/PD/KR

(Features ID: 158067) आगंतुक पटल : 22
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी