• Sitemap
  • Advance Search
Social Welfare

இந்தியாவில் மாவட்ட அளவிலான வளர்ச்சித் திட்டங்களின் எழுச்சி

பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வது

Posted On: 19 MAY 2025 6:28PM

தரவு சார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாக நடைமுறைகளின் மூலம், 112 பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக,  மாவட்ட மேம்பாட்டுத் திட்டம் 2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

சிங்கப்பூர் அதிபர் திரு தர்மன் சண்முகரத்தினம், சமூகங்களுக்கு அதிகாரம் அளித்து, உள்ளூர் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் உலகளவிலான பொருத்தமான முன்மாதிரி வளர்ச்சிக்கான மாவட்ட அளவிலானத்  திட்டங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

ஆரோக்கியமான போட்டித் தன்மையை ஊக்குவிக்கும் வகையில், 'மாற்றத்தின் சாதனைகள் குறித்த தகவல்பலகை' ஒரு தனித்துவமிக்க  "டெல்டா தரவரிசை" முறையைப் பயன்படுத்தி 49 குறியீடுகளில்  நிகழ்நேர முன்னேற்றத்தைக் கண்காணிக்க வகை செய்கிறது.

திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், முடிவுகள் சார்ந்த திட்டமிடலுக்கும், இந்தத் திட்டம் "3சி" அடிப்படையிலான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் போட்டித் தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

மாவட்ட அளவிலான மேம்பாட்டுத் திட்டம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நடவடிக்கைகளில், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக  நிலைநிறுத்தும் வகையில், பிற வளரும் நாடுகளுக்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட 2018-ம் ஆண்டிலிருந்து, மாவட்ட மேம்பாட்டுத்  திட்டம், சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் போன்ற முக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன், வளர்ச்சி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

மாற்றத்தின் கதைகள்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டம், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இந்தியாவின் தொலைதூரப் பகுதிகள், உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை, குறைவான போக்குவரத்து வசதிகளுக்கான இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான அன்றாடப் போராட்டம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் பகுதிக்கான அடையாளமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஐந்து வீடுகளில் ஒரு வீட்டிற்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வசதி கிடைத்து வந்தது. பெரும்பாலான குடும்பங்கள், தண்ணீருக்காக மலைப்பாங்கானப் பகுதிகளில் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்தச் சுமை பெரும்பாலும் பெண்கள் மற்றும் இளம் சிறுமிகளின் மீது விழுந்தது. ஆனால் இன்று, சம்பா மாவட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது.

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாவட்ட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், "இல்லந்தோறும் குடிநீர்" என்ற வசதியைப் பெற்றுள்ள இந்தியாவின் 100-வது மாவட்டமாக சம்பா உருவெடுத்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்பு மூலம் தூய்மையான குடிநீர் கிடைக்கிறது. இது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். பெண்கள் தண்ணீர் சேகரிக்கும் கடினமான பணியிலிருந்து  விடுபட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் குடும்பங்களுக்குக் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக வாழ்வில் முதலீடு செய்வதற்கான கூடுதல்  நேரமும், வல்லமையும் கிடைத்துள்ளது.

இந்தச் சாதனை, சம்பா மாவட்டத்தின் எழுச்சியூட்டும் மாற்றத்தின் தொடக்கமாக மட்டுமே உள்ளது. பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்குத் திட்டத்தின் கீழ், இந்த மாவட்டம் தற்போது 100% குடும்பங்களுக்கும் வங்கி மற்றும் நிதிசார் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. கோடிக்கணக்கான மதிப்புள்ள உத்திசார் ஊக்கத்தொகைத் திட்டங்கள்  மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த முதலீடுகளின் கலவையால் உந்தப்பட்டு, சம்பா மாவட்டம் உள்கட்டமைப்பு வசதிகளில் மட்டுமின்றி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற குறியீடுகளிலும் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, மாவட்டத்தின் வளர்ச்சி வெளிப்படையாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் வலுவான, மீள்திறன் மிக்க சமூகத்திற்கு வழிவகுத்துள்ளன. ஒரு காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த பின்தங்கிய மாவட்டமாக இருந்த சம்பா மாவட்டம், ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள், சமூகப் பங்கேற்பு மற்றும் தரவு சார்ந்த திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளால் சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு முன்மாதிரி மாவட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக 2018-ம் ஆண்டில் நிதி ஆயோக் தொடங்கிய ஒரு முன்முயற்சியான, மாவட்ட மேம்பாட்டுத் திட்டத்தில், இது இணைக்கப்பட்டதன் காரணமாக இத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான பெரும் வினையூக்கியாக அமைந்துள்ளது. “அனைவரும் இணைவோம் , அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை” என்ற தாரக மந்திரத்தின் வழிகாட்டுதலுடன், அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதிலும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு தனிநபரின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வரும் வகையில், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் மக்கள் தீவிரமாகப் பங்கேற்கச் செய்து, அதன் வாயிலாக பயனடைவதற்கானத் திறனை மேம்படுத்துவதில், இந்தத் திட்டம் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

உலகளவில் மாவட்ட மேம்பாட்டுத் திட்டத்திற்கான அங்கீகாரம்

இது ஒரு கதை மட்டுமே என்பதில்லாமல், சர்வதேச அளவில் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் ஏராளமான வளர்ச்சிக் கதைகள், மாவட்ட மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாவட்டங்களின் வீதிகளில் மறைந்துள்ளன. அண்மையில்  நடைபெற்ற தத்துவ ஆசிய உச்சி மாநாடு 2025-ன் போது, சிங்கப்பூர் அதிபர் திரு தர்மன் சண்முகரத்தினம், இத்திட்டத்தை வெகுவாகப் பாராட்டியதுடன், இது “இந்தியாவுக்கு அப்பால், உலகின் பிற வளரும் நாடுகளிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய புதுமைகளின்  சிறந்த உதாரணமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தால், அதிகம் விவாதிக்கப்படாத வெற்றிகளில் ஒன்றாக, 'மாவட்ட மேம்பாட்டுத் திட்டம்' அமைந்துள்ளது. இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு, இது ஒரு பொருத்தமான பெயராக உள்ளது. இது பிரதமர் மோடியின் முன்முயற்சியால் உருப்பெற்றுள்ளது. இதற்கு நிதியுதவி செய்வதில் பிரமல் மற்றும் டாடா அறக்கட்டளை நிறுவனங்களுடன் கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்துள்ளதாக நான் நம்புகிறேன். இது சமூகத்திற்கு உரிமை சார்ந்த அம்சங்களை அளிப்பதுடன், மத்திய அரசின் ஆதரவுடன் சமூக சுகாதாரப் பணியாளர்கள், துணைச் செவிலியர்கள் மற்றும் தரவு அமைப்புகளை உருவாக்குகிறது. இது குறிப்பாக, தாய்மார்களின் உடல் ஆரோக்கியம், குழந்தையின் தொடக்ககால ஆரோக்கியத்தை இலக்காகக் கொண்டது. மாதந்தோறும் முன்னேற்றம் அடைந்து வருவதற்கான காரணிகளைக் கண்காணிப்பது, ஊட்டச்சத்து உணவுகள் உண்பதைக் கண்காணிப்பது, மற்றும் உள்ளூரில் இதற்கான செயல்பாடுகள் மற்றும் தீர்வுகள் முழுமையடைவதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும். நான் அந்த மாவட்டங்களில் சிலவற்றிற்குச் சென்றுள்ளேன். கிராம மக்களுக்கே களத்தில் உரிமையுணர்வையும், செயல் திறனையும் நேரிடையாக வழங்குவதால், அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன்.

- திரு தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் அதிபர்

சமச்சீரான வளர்ச்சிக்குத் தேவையான துணிச்சல் மிகுந்த  தொலைநோக்குப் பார்வை

2018-ம் ஆண்டில், நாட்டின் சமூக-பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய 112 மாவட்டங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் உந்துசக்திகளாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு துணிச்சல்மிக்க முன்முயற்சியாக, மாவட்டங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் முக்கிய  கொள்கை எளிமையானதாக இருப்பதுடன், வலுவானதாக உள்ளது. "பின்தங்கிய நிலை" என்ற கண்ணோட்டத்தை மாற்றியமைத்து, "முன்னேற்றம்" என்ற கண்ணோட்டத்திற்கு உயர்த்துவதுடன், தரவு சார்ந்த நிர்வாக நடைமுறை, ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றின் மூலம் மாவட்டங்கள் தங்களின் உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்துகொள்ளச் செய்வதே ஆகும்.

மாவட்ட மேம்பாட்டுத் திட்டம், நிதி ஆயோக் அமைப்பால்  வழிநடத்தப்படுவதுடன், ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் போட்டி ஆகிய மூன்று கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க மாதிரி அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

  

மாற்றத்தின் சாதனையாளர்களுக்கான தகவல்பலகை

உள்ளீடுகளை விட விளைவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதே  மாவட்டங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தனித்துவமாக்குகிறது. ஐந்து முக்கியப் பகுதிகளில் உள்ள 49 குறியீடுகளின் அடிப்படையில், மாவட்டங்களுக்கு அதன் வளர்ச்சி குறித்த மதிப்பெண் வழங்கும் ஒரு நிகழ்நேர, பொதுத் தளமான, மாவட்டங்கள் மேம்பாட்டிற்கான தகவல்பலகை மூலம், வளர்ச்சி நடவடிக்கைகளின் செயல்பாடுகள்  கண்காணிக்கப்படுகிறது. இந்தக் குறியீடுகள் வெறும் கற்பனையான அளவீடுகளாக இல்லாமல், அவை மக்களை அன்றாடம் பாதிக்கும் உண்மையான முக்கிய விவகாரங்களை உள்ளடக்கியதாகும். பச்சிளங்குழந்தை உயிரிழப்பு விகிதங்கள், பள்ளி இடைநிற்றல் நிலைகள், மின்சாரம் மற்றும் சுகாதார சேவைகள் கிடைப்பது, பயிர் உற்பத்தித்திறன் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும்.

'மாற்றத்திற்கான சாதனையாளர்களின் தகவல்பலகை' என்ற பிரத்யேக இணையதளம், முழுமையான செயல்திறனைக் காட்டிலும் முன்னேற்றத்தின் வேகத்தை எடுத்துக்காட்டும் அளவீடான 'டெல்டா தரவரிசையை' பயன்படுத்துகிறது. இது, சிறந்த நிலையில் உள்ள சக மாவட்டங்களை அடையாளம் கண்டு மனம் தளராமல், மாவட்டங்கள் தங்களின் கடந்த காலத்துடன் போட்டியிட ஊக்குவிக்கிறது.

மாவட்டங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றியும் சாதனைகளும்

2018-ம் ஆண்டு ஜனவரியில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மிகவும் பின்தங்கிய சில பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பல்வேறு முக்கிய முடிவுகளை எட்டியுள்ளது. இத்திட்டத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் தெளிவான முன்னேற்றம் அடைந்து வருவதை காண முடியும். மேலும் வளர்ச்சித் திட்டங்கள் முன்பைக் காட்டிலும் விரைவாக நடைபெற்று வருகிறது. தூய்மை இந்தியா, சௌபாக்யா போன்ற திட்டங்களின் உதவியுடன், சுகாதாரம், ஊட்டச்சத்து, மின்சாரம், தூய்மையான குடிநீர் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

2019-ம் ஆண்டின் இறுதியில், இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 8 மாவட்டங்கள் நான்காம் நிலையிலிருந்து முதலாவது நிலைக்கு முன்னேறியுள்ளன. அவை பீகார், அசாம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவையாகும். விவசாயம் மற்றும் நீர்வளத் துறையில்,அதிக முன்னேற்றம் அடைந்து வரும் முதல் பத்து மாவட்டங்களில், இரண்டிற்கு மட்டுமே வளர்ச்சிக்கான கூட்டமைப்பு ஆதரவளித்துள்ளது. பல்வேறு மாவட்டங்கள் தாமாகவே முன்னேற்றம் அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்தப் பகுப்பாய்வில் ஆந்திரப் பிரதேச மாநிலம் தனித்து நிற்கிறது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இரண்டு, முதல் பத்து இடங்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது இத்துறையில் அம்மாநிலம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

வளர்ச்சி மாற்றத்திற்கான ஒரு முன்மாதிரி

"அனைவரும் இணைவோம், அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கை" - அதாவது அனைவரின் நம்பிக்கை மற்றும் பங்களிப்புடன் அனைவருக்கும் வளர்ச்சி என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டிற்கு மாவட்டங்கள் மேம்பாட்டுத் திட்டம் ஒரு சான்றாக திகழ்கிறது. மிகவும் பின்தங்கிய பகுதிகளின் ஆற்றலை வெளிக்கொண்டுவருவதன் மூலம், நாட்டில் உள்ள பிளவுகளைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய, தரவு சார்ந்த வளர்ச்சிக்கு ஒரு உலகளாவிய முன்மாதிரியையும் அமைக்கிறது. மாவட்டங்கள் மேம்பாட்டுத் திட்டம் முன்னேற்றம் அடையும் போது, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட எதிர்காலக் கொள்கைகளை வடிவமைப்பதற்கும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் சிறந்த படிப்பினைகளாக இருக்கும்

***

PKV/SV/KR

 

(Features ID: 158066) आगंतुक पटल : 34
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी