• Sitemap
  • Advance Search
Others

உள்ளூர் நறுமணங்களிலிருந்து உணவுப் புத்தாக்கம் வரை: அஹார் 2026 கண்காட்சி கூறும் தொழில்முனைவோர் கதைகள்

Posted On: 12 MAR 2026 3:09PM

உணவு & விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் 40-வது அஹார்’ (AAHAR 2026) சர்வதேசக் கண்காட்சி புது தில்லியில் நடைபெற்று வருகிறது. மார்ச் 10 முதல் 14 வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேசக் கண்காட்சி, உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விருந்தோம்பல் துறை சார்ந்த நிறுவனங்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆகியோர் தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது.

சமீப காலங்களில், உணவு & விருந்தோம்பல் துறையில் ஆசியாவின் முன்னணி வர்த்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ‘அஹார்’ உருவெடுத்துள்ளது. பாரத் மண்டபத்தின் பல்வேறு அரங்குகளில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில், இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள், பால் பொருட்கள், பேக்கரி பொருட்கள், வேளாண் விளைபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாரம்பரிய சுவைகளையும், நவீன உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களையும் முன்னிலைப்படுத்தும் இக்கண்காட்சி, உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நுகர்வோர், விருந்தோம்பல் துறை சார் நிறுவனங்களுக்கு இடையே நேரடி வணிகத் தொடர்புகளை (B2B) எளிதாக்குகிறது. இது வெறும் பொருட்களின் கண்காட்சியாக மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ந்து வரும் உணவுப் பதப்படுத்துதல் துறையை வடிவமைக்கும் தொழில்முனைவோர், நிறுவனங்களின் வெற்றிக் கதைகளையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது.

சிக்கிமிலிருந்து தேசிய அளவிலான அரங்கு வரை

'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (ODOP) திட்டத்தின் துடிப்பு மிக்க அரங்குகளில், சிக்கிம் மாநில அரங்கு, அம்மாநிலத்தின் தனித்துவமான சுவைகளை காட்சிப்படுத்தி, பார்வையாளர்களையும் வாங்குபவர்களையும் ஈர்த்து வருகிறது.

ந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒருவரான சிக்கிம் மாநிலம் கேங்டாக்கைச் சேர்ந்த தொழில்முனைவோரான சாங்கிடோமா பூட்டியாவின் பயணம், சிறிய அளவிலான உணவுத் தொழில்கள் வளர்ச்சிக்கு அரசு வழங்கி வரும் ஆதரவை எடுத்துரைக்கிறது. சாங்கிடோமா சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு, சிக்கிமின் பாரம்பரிய உணவுப் பொருட்களைச் சிறிய அளவில் தயாரிக்கும் பணியின் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலங்களில், வணிக நடவடிக்கைகளுக்கு அவர் தனது  சேமிப்பை மட்டுமே முழுமையாக சார்ந்திருந்தார். தற்போது, அவர் பாரம்பரிய ஊறுகாய்களுக்குப் பெயர் பெற்ற "டேஸ்ட் ஆஃப் சிக்கிம்" (Taste of Sikkim) என்ற பிராண்டை நடத்தி வருகிறார். ஊறுகாய் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு முதன்மைப் பயிற்சியாளராக (Master Trainer), கிராமப்புற பெண்களுக்கு உணவுப் பதப்படுத்தும் திறன்கள் தொடர்பான பயிற்சியளித்து, அவர்கள் வருமானம் ஈட்டவும் தற்சார்பு அடையவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.

சிறு உணவுப் பதப்படுத்தும் வணிகங்களை ஆதரிக்கும் மத்திய அரசின் முன்னோடித் திட்டமான 'பிரதமரின் சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்' (PMFME), அவரது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இத்திட்டத்தின் மூலம் அவர் பெற்ற ₹10 லட்சம் கடன் , Text Box: தனது பயணத்தைப் பற்றி நினைவு கூர்ந்த செல்வி சாங்கிடோமா, "ஆரம்பத்தில் எனது வணிகம் மிகச் சிறிய அளவிலேயே இருந்தது. கடன் பெற்ற பிறகு, நான் இயந்திரங்களில் முதலீடு செய்து உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது. இத்திட்டம் என்னைப் போன்ற தொழில்முனைவோருக்கு, குறிப்பாகக் குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்ட பெண்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது" என்றார்.

நவீனப் பதப்படுத்தும் உபகரணங்களில் முதலீடு செய்யவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவியது. மேலும், அவருக்கு கிடைத்த ₹3.5 லட்சம் மானியம், கடனைத் திருப்பிச் செலுத்த உதவியதுடன், தனது நிறுவனத்தை நம்பிக்கையுடன் நிர்வகிக்கவும் வழிவகுத்தது.

Text Box: இது குறித்து அவர் கூறும்போது, “எங்களது தயாரிப்புகள் சிக்கிமுக்கே உரிய தனித்துவம் வாய்ந்தவை. பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் இவற்றை ருசிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு, அதன் அசல் சுவையைப் பாராட்டுகிறார்கள்,” என்றார்.

சிக்கிமின் புவிசார் குறியீடு (GI tag) பெற்ற ஆர்கானிக் 'டல்லே குர்சானி' (Dalle Khursani) எனும் மிளகாயிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் அவரது நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இந்த மிளகாய்கள் நேரடியாக உள்ளூர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, புளித்த மிளகாய் ஊறுகாய், மசாலா கலவைகள், சுவையூட்டிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களாக மாற்றப்படுகின்றன. அத்துடன், 'லாப்சி' (பிளம்) போன்ற உள்ளூர் பழங்களுடன் 'டல்லே' மிளகாயின் தனித்துவமான சுவையைச் சேர்த்து, அந்தப் பிராந்தியத்தின் விசேஷமான உணவுப் பண்டங்களையும் அவர் தயாரித்து வருகிறார்.

 

அரசின் கொள்கை ரீதியான ஆதரவுடன், தில்லி, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களுக்கு அவர் தனது தயாரிப்புகளைக் கொண்டு சென்றுள்ளார். 'அஹார் 2026' (AAHAR 2026) கண்காட்சியில் முதல்முறையாகப் பங்கேற்றுள்ள சாங்கிடோமா, அடுத்த ஆண்டும் இதில் பங்கேற்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்தியத் தேயிலை மதிப்புச் சங்கிலியில் வெளிப்படைத்தன்மை & புத்தாக்கம்:

தேயிலை விநியோகச் சங்கிலியின் வெளிப்படைத்தன்மையையும், அதன் பயணத்தையும் அறிந்துகொள்ளும் வசதி (Traceability), தரமான கொள்முதல் ஆகியவற்றில் தங்கள் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்த விரிவான தகவல்களை, கர்நாடகாவைச் சேர்ந்த 'அயர்ன் கெட்டில்' (Iron Kettle) தேயிலை பிராண்டின் பிரதிநிதி திரு தீரஜ் அர்ஜுன் கே. எஸ். பகிர்ந்து கொண்டார்.

அயர்ன் கெட்டில் நிறுவனம் மூன்று முக்கிய பிரிவுகளில் தேயிலையை வழங்குகிறது: அசாமில் இருந்து பெறப்படும் சிடிசி (CTC - Crush, Tear, Curl) தேநீர், விதவிதமான சுவையூட்டப்பட்ட பசுமைத் தேநீர் (Green Tea) வகைகள், பிரத்யேக 'சஞ்சீவனி' பசுமைத் தேநீர் ஆகியவை இதில் அடங்கும். தரமான கொள்முதலை தனது கொள்கையாகக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது. அதேவேளையில், தேயிலை விளையும் பகுதிகளுக்கு அருகிலேயே, அதாவது அசாம், தமிழ்நாட்டின் நீலகிரி ஆகிய இடங்களில் இதன் பதப்படுத்தும் ஆலைகள் அமைந்துள்ளன. இந்நிறுவனம் ரெய்ன்போரெஸ்ட் அலையன்ஸ் (Rainforest Alliance), HACCP (Hazard Analysis and Critical Control Points), ஐஎஸ்ஓ (ISO) உள்ளிட்ட பல சர்வதேச தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

 

Text Box: "இரண்டு இலைகள், ஒரு மொட்டு' என்ற முறையில் தேயிலையைப் பறிப்பதற்கு கூடுதல் உழைப்பு தேவைப்படுவதோடு, விளைச்சலும் குறைவாகவே இருக்கும். ஆனால், இது மிகச்சிறந்த சுவையுடைய தேநீரை வழங்குகிறது," என்று திரு தீரஜ் அர்ஜுன் கே. எஸ். கூறுகிறார். "அதனால்தான், உயர்தரமான இலைகளைப் பறிக்கும் தரநிலைகளைப் பராமரிக்கும் விவசாயிகளுக்கு நாங்கள் கூடுதல் விலையை வழங்குகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

தரக் கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காக, இந்நிறுவனம் அசாமிலும் நீலகிரியிலும் வேளாண்மை அதிகாரிகளை (Agronomy Officers) நியமித்துள்ளது. இவர்கள் விவசாயிகளுடன் நேரடியாகப் பணியாற்றி, பயிர் சாகுபடி முறைகள், பூச்சிக்கொல்லி பயன்பாடு, இலைகளைப் பறிக்கும் நுட்பங்கள் குறித்துப் பயிற்சிகளை வழங்குகிறார்கள். இந்தக் கட்டமைப்பில் இணையும் புதிய விவசாயிகள், தரமான நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை வழிகாட்டுதல்களைப் பெறுவதோடு கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.

அயர்ன் கெட்டில் நிறுவனம் தேயிலை விநியோகச் சங்கிலியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, QR குறியீடு அடிப்படையிலான கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சில்லறை விற்பனையில் ஒவ்வொரு தேயிலை பாக்கெட்டிலும் ஒரு தனித்துவமான QR குறியீடு உள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தங்களது தேயிலை 'தோட்டத்திலிருந்து கோப்பை வரை' (From farm to cup) வந்த பயணத்தை அறிந்து கொள்ள முடியும். பார்வையாளர்கள் இந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்து பின்வருவன குறித்து விரிவான தகவல்களைப் பெறலாம்:

  • விவசாயியின் பெயர்
  • தோட்டத்தின் புவியியல் இருப்பிடம்  (Geo-tagged location)
  • தேயிலை பறிக்கப்பட்ட சரியான தேதி & நேரம்
  • தேயிலைகள் தொழிற்சாலைக்கு வந்தடைந்த நேரம்
  • பூச்சிக்கொல்லி பயன்பாடு உள்ளிட்ட சாகுபடி முறைகளின் விவரங்கள்

இந்த டிஜிட்டல் கண்காணிப்பு மாதிரி நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, மதிப்புச் சங்கிலியில் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது.

முதன்முறையாக 'அஹார் 2026' (AAHAR 2026) கண்காட்சியில் பங்கேற்றுள்ள இந்நிறுவனம், தனது இந்த வெளிப்படையான தேயிலை மாதிரியைப் பரந்த அளவிலான மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதைக் கருதுகிறது. டிஜிட்டல் கண்காணிப்பு, விவசாயிகளை மையப்படுத்திய கொள்முதல், தரம் சார்ந்த விலை நிர்ணயம் ஆகியவை நுகர்வோரின் நம்பிக்கையை மேம்படுத்துவதுடன், விவசாய மதிப்புச் சங்கிலிகளை மறுசீரமைக்க முடியும் என்பதை இந்த முயற்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

கான்பூர் மசாலா நிறுவனத்தின் வளர்ச்சி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மசாலா உற்பத்தி நிறுவனமான 'சுபாஷ் அக்ரோ இண்டஸ்ட்ரி பிரைவேட் லிமிடெட்' (Subash Agro Industry Pvt Ltd), இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களின் நிலையான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

1992-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இந்திய சமையலறைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மசாலாப் பொருட்களைத் தயாரிப்பதன் மூலம் தனது பணியைத் தொடங்கியது. கடந்த முப்பது ஆண்டுகளில், இது படிப்படியாகத் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, பல மாநிலங்களில் விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பணையாளர்கள் ஆகியோர் அடங்கிய வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இன்று, இந்நிறுவனம் மஞ்சள், மல்லி, மிளகாய், கலப்பு மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் பொருட்களைத் தயாரிக்கிறது. சுபாஷ் அக்ரோ நிறுவனத்தின் பிரதிநிதி திரு ஜிதேந்திர மோகன் திவாரி கூறுகையில், 'நம்கீன்' போன்ற தின்பண்டத் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான சுவையூட்டி கலவைகளையும் (Seasoning blends) இந்நிறுவனம் வழங்கி வருவதாகக் கூறினார். காலப்போக்கில், மசாலாப் பொருட்களைத் தாண்டி அப்பளம், ஊறுகாய், அகர்பத்தி, தூபக் குச்சிகள், பெருங்காயம், சோயா துண்டுகள் (Soya badi) எனத் தனது தயாரிப்பு வகைகளை பன்முகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் இவர்களது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அஹார் 2026 (AAHAR 2026) கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, இந்தியாவின் வளர்ந்து வரும் உணவுப் பதப்படுத்துதல் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பழங்கள் முதல் உறைவித்தலில் கண்டுபிடிப்புகள் வரை

அஹார் 2026 கண்காட்சியில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு நிறுவனமாக நாக்பூரைச் சேர்ந்த 'கணபதி புரோசன் வேர்ல்ட்' (Ganpati Frozen World) உள்ளது. உணவுப் பதப்படுத்துதல் & விருந்தோம்பல் துறைகளுக்கான மதிப்புக் கூட்டப்பட்ட பழ மூலப்பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தும் வளர்ந்து வரும் வணிகப் பிரிவாக இந்நிறுவனம் உள்ளதாக அதன் பிரதிநிதி திரு கௌரவ் தெரிவித்தார். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்பத்தில் அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களைப் பதப்படுத்தி, அவற்றை வணிகத்திற்கு ஏற்ற 'உடனடி பயன்பாட்டு' (Ready-to-use) மூலப்பொருட்களாக மாற்றுவதில் கவனம் செலுத்தியது.

காலப்போக்கில், உறைந்த பழக்கூழ் (Frozen fruit pulps), புரூட் ஷாட்ஸ், குல்பி ப்ரீமிக்ஸ்கள், உறைந்த பெர்ரி பழங்கள் எனப் பல்வேறு வகையான தயாரிப்புகளைக் கொண்ட பட்டியலை இது உருவாக்கியுள்ளது. இவை பானங்கள், இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. புதிய பழங்களை உறைந்த பழக்கூழ்களாக மாற்றி குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் உணவு உற்பத்தியாளர்களுக்குப் பழங்கள் கிடைப்பதை இந்நிறுவனம் உறுதி செய்கிறது.

குறிப்பாக அல்போன்சா மாம்பழக் கூழ், சீதாப்பழக் கூழ், நாவல்பழக் கூழ் ஆகியவை மில்க் ஷேக்குகள், ஐஸ்கிரீம்கள், இனிப்பு வகைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தயாரிப்புகள் சுமார் -18°C வெப்பநிலையில் பதப்படுத்தப்படுகின்றன. இது அவற்றின் புத்துணர்ச்சி, சுவை, நீண்ட ஆயுட்காலத்தைப் பராமரிக்க உதவுவதோடு, வணிகர்களின் சேமிப்பை ஊக்குவித்து, போக்குவரத்தை எளிதாக்குகிறது.

வணிகத் தொடர்புகள் (B2B - Business-to-Business) மூலம் இயங்கும் கணபதி புரோசன் வேர்ல்ட், பானங்கள் & இனிப்புத் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான பழ மூலப்பொருட்களை வழங்குவதோடு, ஹோட்டல்கள், உணவகங்கள், கேட்டரிங் துறைக்கும் பெரும் அளவிலான உணவுத் தயாரிப்பிற்குத் தேவையான பொருட்களையும் வழங்குகிறது. 2023-ம் ஆண்டு தொடங்கி மூன்று முறை இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ள இந்நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள விநியோகஸ்தர்களுடனும் விருந்தோம்பல் துறையினருடன் தொடர்புகொள்ள அஹார் 2026-ஐ ஒரு தளமாகப் Text Box: "எங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், நாடு முழுவதுமிருந்து வரும் விற்பனையாளர்களை தொடர்பு கொள்ளவும், 'அஹார்' எங்களுக்கு ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், புதிய வாய்ப்புகளும் கூட்டுறவும் இங்கே உருவாவதை நாங்கள் காண்கிறோம்," என்று திரு கௌரவ் கூறினார்.

பயன்படுத்துகிறது.

 

குஜராத்தின் புதுமையான உலர் உணவு தயாரிப்புகள்

இந்தியாவின் வளர்ந்து வரும் உணவுப் பதப்படுத்துதல் துறையில், விவசாயப் பொருட்களைப் பதப்படுத்துவதில், புதுமையான முறைகளைப் பின்பற்றும் புத்தொழில் நிறுவனங்களின் எழுச்சியை நாம் கண்டு வருகிறோம். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக, அஹார் (AAHAR) 2026 கண்காட்சியில் தனது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ள குஜராத்தின் ஆரம்ப் உணவு ஏற்றுமதி (Aarambh Food Export) நிறுவனம் திகழ்கிறது.

குஜராத்தின் பாவ்நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், வீடுகள், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய உலர் உணவுப் பொருட்களை (Dehydrated ingredients) உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு துருவ் பலாரியா, நிறுவனத்தின் பிரதிநிதியாக  தயாரிப்புகளை காட்சிப்படுத்தினார்.

இந்தக் கண்காட்சியில் அந்நிறுவனம் தக்காளி, எலுமிச்சை, பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயத் தாள்கள் (Flakes) ஆகியவற்றையும் ஆப்பிள், எலுமிச்சை உள்ளிட்டவற்றின் பழப் பொடிகளையும் புதினா, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை போன்ற உலர்ந்த மூலிகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது. இவை சுவையூட்டிகள், உடனடி உணவுகள் (Instant foods), பேக்கரி பொருட்கள், பானங்கள், ஸ்மூத்திகள் (Smoothies) ஆகியவற்றின் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

உணவுப் பதப்படுத்துதலில் உலரவைக்கும் தொழில்நுட்பத்தின் (Dehydration technology) வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த நிறுவனத்தின் அணுகுமுறை பறைசாற்றுகிறது. புதிய விளைபொருட்களை நீண்ட நாட்களுக்கு கெடாத வகையில் பொடிகளாகவும், தாள்களாகவும் மாற்றி இத்தகைய நிறுவனங்கள் விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டலுக்கு உட்படுத்துவதுடன் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் கணிசமாகக் குறைக்கின்றன.

பரிணமித்து வரும் உணவுப் பதப்படுத்துதலை காட்சிப்படுத்துதல்:

அஹார் (AAHAR) 2026 கண்காட்சியில் காணப்பெறும் பல்வேறு வெற்றிக் கதைகள், இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. பிராந்திய சுவைகளை ஊக்குவிக்கும் சிறு குறு தொழில்முனைவோர் முதல், நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் புத்தொழில் நிறுவனங்கள் வரை, நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து வருவதை இந்தத் தளம் எடுத்துக்காட்டுகிறது. தொழில்முனைவோர், தொழில்துறை பங்குதாரர்கள், வாங்குபவர்களை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து, உணவு மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தி, இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் கட்டமைப்பில் உள்ள சிறப்புகளையும், புதுமைகளையும் அஹார் (AAHAR) கண்காட்சி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

****

PD/KR

(Features ID: 158062) आगंतुक पटल : 66
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Kannada , Malayalam