• Sitemap
  • Advance Search
Social Welfare

எதிர்காலத்தின் காட்சிகள்

Posted On: 09 MAR 2026 9:58AM

புது தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதங்கள் வெறும் அல்காரிதம்கள் அல்லது கணக்கீட்டுத் திறனுடன் நின்றுவிடாமல் கலைத் துறை குறித்தும் மேற்கொள்ளப்பட்டன. திரைப்படத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தனர்: காட்சிகள், பிரேம்கள் ஆகியவற்றை வடிவமைக்கவும், ரசிகர்களின் உணர்வுகளைக் கணிக்கவும் எந்திரங்களால் முடியும் என்றால், சினிமாவில் மனிதர்களால் மட்டுமே செய்யமுடியும் தனித்துவமான விஷயம் எது? என்ற கேள்வியே அது.

இந்த விவாதம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. இருப்பினும், உற்பத்தித் திறனைத் தாண்டி சினிமா என்பது ஒரு ஞாபகம், அடையாளம், வாழ்வியல் அனுபவம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இந்தச் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு நுழையும்போது, அது வெறும் தானியங்கி முறை குறித்ததாக இல்லாமல் படைப்புரிமை குறித்ததாக மாறுகிறது.

இது மனிதனின் படைப்பாற்றலுக்கும் இயந்திர நுண்ணறிவுக்கும் இடையிலான போட்டி அல்ல. மாறாக, சினிமா உருவாக்கப்படும் முறையில் ஏற்படும் ஒரு மாற்றம் ஆகும். காட்சிப்படுத்துதல், படத்தொகுப்பு, தரவு சார்ந்த நுண்ணறிவுகளைக் கையாளுதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு தற்போது உதவி வருகிறது. இது தயாரிப்புப் பணிகளின் வேகத்தையும் கட்டமைப்பையும் மாற்றுகிறது. இருப்பினும் கதை சொல்லுதல் என்பது இன்னும் மனிதர்களின் கலாச்சாரம், அனுபவங்களிலிருந்தே பிறக்கிறது. இத்தகைய பண்புகளுக்குத் தொழில்நுட்பம் உதவ முடியுமே தவிர அவற்றை உருவாக்க முடியாது. இனிவரும் ஆண்டுகளில் படைப்புரிமை, படைப்பு சார்ந்த பொறுப்புணர்வு ஆகியவற்றை மாற்றியமைப்பதற்கான ஆர்வம் இந்த உச்சிமாநாட்டில் வெளிப்பட்டது.

தடைகளிலிருந்து மறுசீரமைப்பு வரை

சினிமா எப்போதும் தொழில்நுட்பத்துடன் இணைந்தே வளர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு புதிய பாய்ச்சலும் சில சந்தேகங்களுடனேயே தொடங்கின. பேசும் படங்கள் வந்தபோது மௌனப் படக் கலை அழியும் எனக் கருதப்பட்டது. வண்ணப் படங்கள் காட்சிக்கு கவர்ச்சியாக மட்டுமே பார்க்கப்பட்டன. டிஜிட்டல் கேமராக்கள், ஓடிடி தளங்கள் வந்தபோதும் இதே போன்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஒவ்வொரு மாற்றமும் கதை சொல்லும் முறையை விரிவுபடுத்தவும், படைப்பாளிகள் தங்களை மாற்றிக் கொள்ளவும் ஊடகம் பரிணாம வளர்ச்சி அடையவும் உதவியது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. வடிவம் அல்லது விநியோகத்தை மாற்றிய முந்தைய நடவடிக்கைகளைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவு நேரடியாகப் படைப்புப் பணிகளிலேயே நுழைகிறது. அதிக நேரம் எடுக்கும், தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான பணிகளில் இதன் தாக்கம் இன்று அதிகமாக உள்ளது. தயாரிப்புக்கு முந்தைய நடவடிக்கைகள் (Pre-production), தயாரிப்புக்கு பிந்தைய நடவடிக்கைகள் (Post-production) சார்ந்த பணிகளின் செயல்திறனை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிகரிப்பதோடு படைப்ப்பாற்றல் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளவும் உதவுகிறது எனத் தொழில்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நடைமுறையில் இது எவ்வாறு செயல்படுகிறது?

திரைக்கதையில் உதவி, கதை முன்மாதிரியை உருவாக்குதல்: பல்வேறு திரைக்கதைகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட இயந்திரக் கற்றல் அமைப்புகள், கதையின் கட்டமைப்பு, வேகம், வகை சார்ந்த போக்குகளை ஆய்வு செய்ய முடியும். திரைக்கதை ஆய்வின் மூலம் ரசிகர்களின் விருப்பங்களை மதிப்பிடவும், கிடைக்கப்போகும் வருவாயைக் கணிக்கவும் இத்தகைய கருவிகளைத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் முன்கூட்டியே காட்சிகளை உருவாக்கிப் பார்ப்பது (Pre-visualisation), தயாரிப்பு தொடங்கும் முன்பே கருத்துக்களைச் சோதிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் உதவுகிறது.

தயாரிப்புக்கு முந்தைய நிலையில் செயற்கை நுண்ணறிவு: படப்பிடிப்பு அட்டவணை, இடங்களைத் திட்டமிடுதல், தளவாட ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இது தயாரிப்புப் பணிகளில் வளங்களை மிகவும் திறமையாக மேலாண்மை செய்ய வழிவகுக்கிறது.

நடிகர்களை தேர்வுசெய்தல்: வரையறுக்கப்பட்ட அளவுகோல்கள், எழுத்துப்பூர்வ உள்ளீடுகளைப் பயன்படுத்தி பொருத்தமான நடிகர்களுக்கான தரவுத்தளங்களைச் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் ஆய்வு செய்ய முடியும். இது நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துகிறது. இறுதி முடிவுகள் மனிதர்களால் எடுக்கப்பட்டாலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தேடல் செயல்முறையை வேகப்படுத்தி முறைப்படுத்துகிறது.

விஎஃப்எக்ஸ் (VFX), தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை துரிதப்படுத்துதல்: செயற்கை நுண்ணறிவு சிறிய அளவிலான படத்தொகுப்புகளைத் தானியமயமாக்குகிறது. வண்ணத் திருத்தத்திற்கு உதவுவதோடு டிஜிட்டல் முறையில் சுத்திகரிப்புப் பணிகளை எளிதாக்குகிறது. உலகளாவிய சினிமாவில் நடிகர்களை டிஜிட்டல் முறையில் மறுஉருவாக்கம் செய்வதையும் சாத்தியமாக்கியுள்ளது. இது தொழில்நுட்பத் திறனையும் அறநெறி சார்ந்த சிக்கல்களையும் ஒருசேர கொண்டுள்ளது.

பன்மொழியில் டப்பிங், உள்ளூர்மயமாக்கல்: மொழிபெயர்க்கப்பட்ட ஆடியோவை உதட்டு அசைவுகளுடன் இணைக்கும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தடையற்ற பன்மொழி மாற்றத்தை உருவாக்குகின்றன. இந்திய ஆராய்ச்சி சூழலில் இருந்து உருவாகும் கண்டுபிடிப்புகள் பன்மொழி வெளியீடுகளை மேம்படுத்தி, பிராந்திய சினிமாவின் எல்லையை விரிவுபடுத்துகின்றன.

பரிந்துரை, உள்ளடக்கத்தைக் கண்டறிதல்: ஓடிடி தளங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பரிந்துரை அமைப்புகளைப் பெரிதும் நம்பியுள்ளன. முக்கியத் தளங்களில் உள்ளடக்க நுகர்வின் பெரும் பகுதி பரிந்துரைக்கப்பட்ட அல்காரிதம்களால் இயக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து முன்னோட்டங்களை உருவாக்குகிறது. இயல்பான மொழி செயலாக்கம் தேடல் வசதியை மேம்படுத்தி உள்ளடக்கம் கண்டறியப்படும், நுகரப்படும் முறையை மாற்றுகிறது.

இவை அனைத்திலும் ஒரு பொதுவான நடைமுறையை காணலாம். செயற்கை நுண்ணறிவு பல்வேறு செயல்பாடுகளை விரைவுபடுத்தி திறனை மேம்படுத்துகிறது. இது வடிவங்களை ஆய்வு செய்கிறது, பலமுறை செய்யப்படும் பணிகளைத் தானியமயமாக்கி, விநியோகத்தை மேம்படுத்துகிறது.

இருப்பினும், இது வாழ்வியல் அனுபவம், கலாச்சார நுணுக்கங்கள் அல்லது உணர்ச்சிகரமான நினைவுகளை உருவாக்க முடிவதில்லை.

ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றம் தற்போது நிகழ்ந்து வருகிறது. உயர் ரக கேமராக்கள், உள்ளடக்க மென்பொருள்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் பரவலாகக் கிடைப்பதால், மேம்பட்ட தயாரிப்புத் திறன்கள் இனி பெரிய ஸ்டுடியோக்களுடன் மட்டும் நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய திட்டமிடல், காட்சிப்படுத்தும் கருவிகள் இத்துறையில் நுழைவதற்கான தடைகளைக் குறைக்கின்றன. இது தனிப்பட்ட படைப்பாளிகள் உயர்வுக்கு வழிவகுப்பதோடு, போட்டித்தன்மையையும் மேம்படுத்துகிறது. எனவே, இந்த மறுசீரமைப்பு என்பது கதை சொல்பவரை மாற்றுவது குறித்ததாக இல்லாமல் கதை சொல்லலைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

செயற்கை நுண்ணறிவும் பாரம்பரியமும்: மகாபாரதம் ஒரு புதிய பரிமாணம்

இந்தியாவின் மிகச்சிறப்பு வாய்ந்த இதிகாசமான மகாபாரதம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியுடன் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. பிரசார் பாரதி, கலெக்டிவ் மீடியா நெட்வொர்க் இடையிலான இந்தத் திட்டத்தில், கதையின் ஆன்மாவைச் சிதைக்காமல் காட்சிகளை மேம்படுத்தவும், பிரம்மாண்டமான போர்க்காட்சிகளை உருவாக்கவும், கதாபாத்திரங்களுக்கு கூடுதல் மெருகூட்டவும் அறிவுசார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்தத் தொடர் முதலில் வேவ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, பின்னர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. பாரம்பரியத்தை மாற்றுவதற்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வடிவில் அதனை வழங்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரமும் செயற்கை நுண்ணறிவும்

இந்தியாவைப் பொறுத்தவரை, சினிமாவில் செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதம் தனிப்பட்டதாக மட்டும் இல்லாமல், நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மிகப்பெரிய மாற்றத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. பிராந்திய மொழிகள், ஓடிடி தளங்கள், உலகளாவிய ரசிகர்கள் எனப் பரந்து விரிந்த பன்மொழிச் சூழல் அமைப்பைக் கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்புச் சூழல் அமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பல்வேறு மொழிகளிலும், வடிவங்களிலும் கதை சொல்லாடல் விரிவடையும் போது, தொழில்நுட்பம் என்பது வெறும் உதவியாளராக மட்டும் இல்லாமல் ஒரு உள்கட்டமைப்பு அம்சமாகவே மாறுகிறது.

இதன் வாயிலாக செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் தயாரிப்புக் கருவியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பதையும் உணர முடிகிறது. தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு ஊடகத் துறையில் வேலைவாய்ப்புச் சூழலை மாற்றுமா என்ற கேள்வியுடன் மட்டும் நின்றுவிடாமல், வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்குச் சூழல் அமைப்பில் படைப்பாற்றலை வலுப்படுத்தவும், அணுகலை விரிவுபடுத்தவும், பொறுப்பான பயன்பாட்டை உறுதி செய்யும் வகையிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியா எவ்வாறு வடிவமைக்கப் போகிறது என்பதே முக்கிய விவாதமாகும்.

அடிப்படை உள்கட்டமைப்பு: இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் (IndiaAI Mission), தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு அணுகுமுறை ஒரு வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு என்ற தொலைநோக்குப் பார்வையை முன்வைத்த தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி, இதனை உள்ளடக்கிய வளர்ச்சி, புத்தாக்கம், உலகளாவிய போட்டித்திறனுக்கான உந்துசக்தியாக மாற்றியுள்ளது. இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் அந்தத் தொலைநோக்குப் பார்வையை உள்கட்டமைப்பாக மாற்றுகிறது. கணக்கீட்டுத் திறனை விரிவுபடுத்துதல், அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய தரவுத் தொகுப்புகளை உருவாக்குதல், புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த செயற்கை நுண்ணறிவு உத்தியும் இயக்கமும் இணைந்து இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பின் முதுகெலும்பாக அமைகின்றன. படைப்பாற்றல் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, சினிமாவிலும் ஊடகத் துறையிலும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்குத் தேசிய கணக்கீட்டு உள்கட்டமைப்பு, புத்தாக்க நிதி, நிர்வாகக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் ஆதரவு கிடைக்கிறது. எனவே, திரைப்படத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு தனிப்பட்ட கருவியாக மட்டுமல்லாமல், பொறுப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பிற்குள் உருவாகிறது.

 

ஏவிஜிசி (AVGC), கேமிங் துறைகளை ஊக்குவித்தல்

சினிமா துறையில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இலக்குகள் அனிமேஷன், காட்சி விளைவுகள், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகிய துறைகள் விரிவடைவதன் மூலம் வலுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1,900-க்கும் மேற்பட்ட இணைய விளையாட்டு மேம்பாட்டு நிறுவனங்களில் சுமார் 66,000 வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர். 488 மில்லியன் ஆன்லைன் கேமர்கள் இந்தத் துறைக்கு வலுவான அடித்தளமாக உள்ளனர்.

இந்திய ஸ்டுடியோக்கள் உலகளாவிய விஎஃப்எக்ஸ் (VFX), அனிமேஷன் பணிகளில் 40 முதல் 60 சதவீத குறைந்த செலவில் சேவைகளை வழங்கி வருகின்றன. 2,60,000 படைப்பாளிகளும், பொறியாளர்களும் இதற்கு பக்கபலமாக உள்ளனர். 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் ஏவிஜிசி உள்ளடக்க உருவாக்குநர் ஆய்வகங்கள் அமைக்கப்படுவது ஒரு கட்டமைக்கப்பட்ட மாற்றத்தின் அறிகுறியாகும். இது டிஜிட்டல் கதை சொல்லாடலையும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த படைப்புக் கருவிகளையும் கல்வி முறையில் இணைக்கிறது.

வளர்ந்து வரும் ஊடகத் தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாட்டு முயற்சிகள்:

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், கதைகள் உருவாக்கப்படும் முறையை மாற்றுகிறது என்றால், அதனை யார் உருவாக்குகிறார்கள் என்பதைத் திறன் மேம்பாடு தீர்மானிக்கிறது. இந்தியாவின் படைப்பாற்றல்-தொழில்நுட்பத் திறன் கட்டமைப்பில் 37-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் நிறுவனங்களும், 16-க்கும் மேற்பட்ட கேமிங் கல்லூரிகளும், 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்ஆர் (XR) சார்ந்த கல்வித் திட்டங்களும் உள்ளன.

ஏவிஜிசி, எக்ஸ்ஆர் துறைகளுக்கான தேசிய சிறப்பு மையமாக ஐஐசிடி (IICT) விளங்குகிறது. இது மேம்பட்ட ஆராய்ச்சி, தொழில்துறை ஒத்துழைப்பு, உலகளாவிய தரத்திலான சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது. இந்த நிறுவனம், வெறும் பணியாளர் விரிவாக்கத்தோடு திறன் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கிறது. படத்தொகுப்பு, தரவிறக்கம், உள்ளூர்மயமாக்கல் போன்ற பணிகளைச் செயற்கை நுண்ணறிவு விரைவுபடுத்தும் போது, அறிவுசார் தயாரிப்புச் சங்கிலிக்குள் புத்தாக்கப் படைப்பாளிகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு: வளர்ச்சிக்கான உந்துசக்தி

செயற்கை நுண்ணறிவு கருவிகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் போது மட்டுமே முழுமையான மதிப்பைப் பெறுகின்றன. இந்தியாவின் டிஜிட்டல் முதுகெலும்பு இதற்கு ஒரு உந்துசக்தியாக செயல்படுகிறது. 900 மில்லியனுக்கும் அதிகமான பிராட்பேண்ட் இணைப்புகள், 562 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்களைக் கொண்டுள்ள இந்தியா, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உள்ளடக்கச் சூழல் அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. 2024-ம் ஆண்டில், ஊடகம் & பொழுதுபோக்குத் துறையின் வருவாயில் டிஜிட்டல் ஊடகங்கள் 32 சதவீதம் பங்களித்துள்ளன. இத்தகைய பெரிய அளவிலான கட்டமைப்பு, சிறு ஸ்டுடியோக்கள், தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள், பிராந்திய படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை எளிதாக விநியோகம் செய்யவும், வருவாய் ஈட்டவும் உதவுகிறது. இத்தகைய சூழலில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் ஒரு தனிப்பட்ட மேம்பாடு அல்லாமல், வேகமான படைப்பாற்றல் சந்தையின் ஒரு பகுதியாகவே மாறுகின்றன.

புத்தாக்க நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்களின் பங்கு

இந்தியாவின் படைப்பாற்றல் மாற்றம் பெருநிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஊடகம், உள்ளடக்கத் திறனை உள்ளடக்கிய 1,580-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் இந்தியாவில் உள்ளன. ஸ்டுடியோக்கள் & புத்தாக்க நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தயாரிப்புப் பணிகளைத் தங்களின் அன்றாடச் நடவடிக்கைகளில் இணைத்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சிமாநாட்டில் பல புத்தாக்க நிறுவனங்கள் அனிமேஷன், உள்ளூர்மயமாக்கல், டிஜிட்டல் கதை சொல்லாடல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைக் காட்சிப்படுத்தின.

மனிதநேயத்தின் முக்கியத்துவம்

செயற்கை நுண்ணறிவால் சில நொடிகளில் ஒரு காட்சியை எழுதவும் பின்னணி இசையமைக்கவும், முகங்களை உருவாக்கவும், குரல்களை மீண்டும் கொண்டு வரவும் முழுமையான காட்சிகளை உருவாக்கவும் முடியும். ஆயிரக்கணக்கான திரைக்கதைகளை ஆய்வு செய்து எது சிறப்பாகச் செயல்படும் என்பதை அது சொல்ல முடியும்.

ஆனால் சினிமா என்பது எப்போதும் பொதுவாக மேற்கொள்ளப்படும் விஷயங்களைப் பற்றியது மட்டுமல்ல. எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஒரு இயக்குநர் ஒரு முடிவைத் தேர்ந்தெடுப்பதும், ஒரு நடிகர் வசனங்களை விட மௌனத்தின் மூலம் அதிக உணர்வுகளைக் கடத்துவதும் மனிதர்களுக்கு மட்டுமே செய்யக்கூடியவை. ஒரு எழுத்தாளர் வெறும் வடிவங்களை மட்டும் கவனிக்காமல், தனது நினைவுகள், உணர்வுகள், அனுபவங்களிலிருந்து கதையை உருவாக்குகிறார். செயற்கை நுண்ணறிவு சாத்தியக்கூறுகளை மட்டுமே உருவாக்க முடியும். எவற்றை வைத்திருக்க வேண்டும் என்பதை மனிதர்களே தீர்மானிக்கிறார்கள்.

இயந்திரங்கள் கடந்த கால வடிவங்களை மீண்டும் இணைக்கின்றன. கலைஞர்கள் எதிர்காலத்திற்காகப் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கதை சொல்லலின் படைப்பாற்றல் மறைந்துவிடும் என்பது கவலை அல்ல; ஆனால் அது கணிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடுமோ என்பதே அச்சமாகும். கடந்த கால வெற்றிகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட அல்காரிதம்களால் கதைகள் உருவாக்கப்பட்டால், அவை உணர்வுப்பூர்வமாக வலுவற்றதாக இருக்கக்கூடும். சினிமா நம்மை வியப்படையச் செய்வதாலும், நம்மைச் சிந்திக்க வைப்பதாலுமே நிலைத்து நிற்கிறது.

அதே சமயம், இந்த வாய்ப்பு மறுக்க முடியாதது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் படைப்புச் செயல்பாட்டில் உள்ள சிக்கல்களைக் குறைத்து, தயாரிப்புக்கான நேரத்தைக் குறைத்து, தனிப்பட்ட படைப்பாளிகளுக்கும் நவீன கருவிகள் கிடைப்பதை இது சாத்தியமாக்கும். ஒரு பெரிய ஸ்டுடியோ வசதி இல்லாத திரைப்படத் தயாரிப்பாளர் கூடத் தனது பிரம்மாண்டமான காட்சிகளை இப்போது காட்சிப்படுத்த முடியும். ஒரு பிராந்திய கதை, அறிவுசார் உள்ளூர்மயமாக்கல் மூலம் புதிய ரசிகர்களை அடைய முடியும். இது மாற்றீடு அல்ல; இது ஒரு மேம்பாடு.

எனவே, இந்தியா செயற்கை நுண்ணறிவை எதிர்க்க வேண்டுமா என்பது கேள்வியல்ல. இந்திய சினிமா அதனை எவ்வாறு வடிவமைக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வி. கதை சொல்லிகள் எவ்வாறு அறிவுசார் அமைப்புகளுக்குள் தங்களின் நோக்கத்தைப் உள்ளீடு செய்கிறார்கள் என்பது முக்கியமானது. தொழில்நுட்பம் படைப்புத் திறனைத் தரப்படுத்துவதற்குப் பதிலாக, அதனை வலுப்படுத்துவதை இயக்குநர்களும் எழுத்தாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சிமாநாட்டில் ஒரு விவாதம் தொடங்கியது: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது படைப்புச் சார்ந்த வேலைகளைப் பறிக்குமா? என்பதே அந்த சந்தேகம். இதற்கான உண்மையான பதில் – பொறுப்புணர்வானது புதுமையை ஏற்கத் தயங்காமல் அதனைச் சரியான பாதையில் வழிநடத்துவதிலேயே உள்ளது.

இந்திய சினிமாவின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவை எதிர்ப்பதில் இல்லை; மாறாக, அறிவுசார் அமைப்புகளுக்குள் மனிதப் பார்வையை உட்பொதிப்பதிலேயே உள்ளது. திரையில் முதல் காட்சி தோன்றும் போது ரசிகர்களை நெகிழ வைப்பது வெறும் கணக்கீடு அல்ல; அது மனிதர்களுக்கிடையிலான உணர்வுப்பூர்வமான பிணைப்பாகும்.

****

PD/KR

(Features ID: 158061) आगंतुक पटल : 60
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Kannada , Malayalam