Rural Prosperity
மாதவிடாய் கால சுகாதாரத்தை மறுவரையறை செய்யும் மக்கள் மருந்தகங்கள்: மலிவு விலையிலிருந்து அதிகாரமளித்தல் வரை
நம்பிக்கை & மாற்றத்தின் அடையாளமாக மாறிய
1 ரூபாய் சானிட்டரி நாப்கின்கள்
Posted On:
03 MAR 2026 4:32PM
மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்களை பாதுகாப்பான, மலிவு விலையில் பெறுவது என்பது வெறும் உடல்நலம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது ஒரு பெண்ணின் கண்ணியம் சார்ந்த விஷயமாகும். மத்திய அரசின் முன்னோடித் திட்டமான பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் (PMBJP) கீழ், நாடு முழுவதும் உள்ள மக்கள் மருந்தகங்களில் ஒரு சானிட்டரி நாப்கின் 1 ரூபாய் (ஒரு பாக்கெட் 10 முதல் 12 ரூபாய்) என்ற விலையில் கிடைக்கின்றன.
பல பெண்களுக்கும், வளரிளம் பெண்களுக்கும், இந்த 'சிறிய இளஞ்சிவப்பு பாக்கெட்' (Small Pink Packet) என்பது தயக்கங்கள், நிதிச் சுமை, பல காலமாக் கடைபிடிக்கப்பட்டு வரும் கபாதுகாப்பற்ற, சிரமமான பழக்கங்களிலிருந்து விடுதலை அடைவதைக் குறிக்கிறது. ஒரு காலத்தில் பெண்கள் மாதந்தோறும் மாதவிடாய் காலங்களில் தங்களின் சுகாதாரத்தில் சமரசம் செய்து வந்த நிலை மாறி, இன்று மலிவான விலையில் எளிதில் பெறக்கூடிய அடிப்படை வசதியாக மாறியுள்ளது.

‘ஒரு சிறிய இளஞ்சிவப்பு பாக்கெட், ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்’

மேலோட்டமாகப் பார்த்தால், இவை மக்கள் மருந்தகங்களின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சாதாரண இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டுகளாகத் தோன்றலாம். ஆனால் பல பெண்களுக்கு, இது கட்டுப்படியாகக்கூடிய விலை, கண்ணியம், வசதி ஆகியவற்றுடன் கூடிய அடையாளமாகும். ஒரு காலத்தில் 60 முதல் 70 ரூபாய் வரை விலையுள்ள ஒரு பாக்கெட் நாப்கினை வாங்குவதற்கு முன் இருமுறை யோசிக்க (அதிக விலையின் காரணமாக) வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இன்று அதே தரத்திலான ஒரு பாக்கெட் 10 முதல் 12 ரூபாயில் கிடைப்பதை நம்ப முடியாத ஒரு பெரிய மாற்றமாக பெண்கள் உணர்கின்றனர்.
'பள்ளி செல்வதற்கு மாதவிடாய் ஒரு தடையல்ல'

பதினான்கு வயது சிறுமி சாந்தினி, தனது வகுப்பில் உள்ள மற்ற மாணவிகளைப் போலவே இந்த நாப்கின்களைத் தானும் தவறாமல் பயன்படுத்துவதாக கூறுகிறார். இவை மிகவும் மலிவானவை, வசதியானவை என்று தன்னம்பிக்கையுடன் அவர் கூறுகிறார். சாந்தினி போன்ற பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு, குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பது என்பது, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமமும், பள்ளி செல்லாமல் விடுப்பு எடுப்பதும் குறைத்துள்ளதுடன், வகுப்பறையில் அவர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ஒரு காலத்தில் தயக்கத்துடன் பார்க்கப்பட்ட இந்த விஷயம், இப்போது அவரது தோழிகளிடையே ஒரு வெளிப்படையான உரையாடலாக மாறியுள்ளது.

ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சகோதரி மேமி, முதலில் மருந்துகள் வாங்குவதற்காகவே மக்கள் மருந்தகத்திற்குச் சென்றார். ஒருநாள், அங்கிருந்த மேசையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டுகள் அவரது பார்வையில் தென்பட்டன. இதன் விலை வெறும் 12 ரூபாய் தான் என்று கடைக்காரர் சொன்னபோது தான் அதிர்ச்சியடைந்ததை அவர் நினைவு கூர்கிறார். அதனைப் பயன்படுத்த முடிவு செய்த மேமி, அன்று முதல் தொடர்ந்து அதையே பயன்படுத்தி வருகிறார். இதற்கு முன்பு, ஒரு பாக்கெட்டிற்கு 40 முதல் 50 ரூபாய் வரை செலவு செய்து வந்த அவர் இப்போது, தனக்காக வாங்குவதோடு மட்டுமல்லாமல், தனது அண்டை வீட்டாரையும் பள்ளியில் உள்ள பெண்களையும் தங்களது மாதவிடாய் கால சுகாதாரப் பழக்கங்களை மாற்றிக்கொள்ள அவர் ஊக்குவித்து வருகிறார். ‘விழிப்புணர்வு’ தனிநபர்களைத் தங்களது சமூகத்திற்குள் மாற்றத்தை உருவாக்குபவர்களாக உயர்த்தும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
'சமரசங்களிலிருந்து விடுபடுதல்’

சானிட்டரி நாப்கின்களின் அதிக விலை காரணமாக முன்பு பல பெண்கள் அவற்றை வாங்கத் தயங்கியதாகவும் துணிகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் சகோதரி ஜோதி குறிப்பிடுகிறார். “ஒரு நாப்கினின் விலை வெறும் 1 ரூபாய் தான் என்று எங்களுக்குத் தெரியவந்தபோது, அனைத்தும் மிகவும் எளிதாகிவிட்டது” என்று கூறும் அவர், "இப்போது, வெறும் 10 ரூபாய் செலவில் எங்களுக்குப் பாதுகாப்பான, வசதியான மாற்று வழிமுறை கிடைத்துள்ளது" என்கிறார்.
எண்ணற்ற பெண்களுக்கு, இத்திட்டம் நிதிச் சுமையைக் குறைத்துள்ளதுடன், மாதவிடாய் கால சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் மேம்படுத்தியுள்ளது. மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பது, தயக்கங்களை விடுத்து தன்னம்பிக்கையையும், சமரசங்களை விடுத்து வசதியையும் வழங்கியுள்ளது.
'கண்ணியத்தையும் ஆரோக்கியத்தையும் நோக்கிய ஒரு படி'
இந்த முயற்சியானது வெறும் மலிவு விலை அடிப்படையில் மட்டுமல்லாமல், சுகாதார வசதிகளை எளிதில் பெறுதல், விழிப்புணர்வு, கண்ணியம் சார்ந்ததுமாகும். தரமான சானிட்டரி நாப்கின்கள் தலா 1 ரூபாய் என்ற விலையில் கிடைப்பதை உறுதி செய்து, குறிப்பாகக் குறைந்த, நடுத்தர வருமானப் பிரிவினரிடையே பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அரசு ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சாந்தினி, மேமி, ஜோதி போன்ற பலருக்கும் இது வெறும் அரசுத் திட்டம் மட்டுமல்லாது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகாரம் பெற்றதற்கான (Empowerment) அடையாளமாகும். பெண்களுக்குத் தேவையான மாதவிடாய் கால சுகாதாரச் சேவைகளை மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கச் செய்வது பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் (PMBJP) பல்வேறு சேவைகளில் ஒன்றாகும். 2026 ஜனவரி 31 வரை, மக்கள் மருந்தகங்கள் வாயிலாக 100 கோடிக்கும் அதிகமான ‘சுவிதா சானிட்டரி நாப்கின்கள்’ விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 2025-26-ம் நிதியாண்டில் மட்டும் ஜனவரி 31 வரை, 22.50 கோடிக்கும் அதிகமான நாப்கின்கள் விற்பனையாகியுள்ளன.
****
PD/KR
(Features ID: 158054)
आगंतुक पटल : 61
Provide suggestions / comments