Rural Prosperity

சரஸ் திருவிழா 2026

Posted On: 21 FEB 2026 12:33PM

குருகிராமின் வானளாவிய கண்ணாடி கோபுரங்களின் மீது குளிர்காலச் சூரியனின் கதிர்கள் மென்மையாகப் படரத் தொடங்கிய வேளையில், செக்டர் 29-ல் உள்ள லெஷர் பள்ளத்தாக்கு பூங்காவின் நுழைவுவாயில்கள் ஒரு மாறுபட்ட உலகத்தைத் திறந்து வைத்தன. இந்த உலகம் இரும்பாலும் கண்ணாடியாலும் ஆனதல்ல. மாறாக, கைத்தறி பட்டு, மூங்கிலாலான கைவினைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், நாட்டுப்புறப் பாடல்களின் கதைகள் ஆகியவற்றால் ஒரு உருவானது. சைபர் சிட்டியான குருகிராமின் வழக்கமான கார்ப்பரேட் வேகத்தை நாட்டுப்புற இசையின் ரீங்காரமாகவும், நறுமணம் மிக்கப் பாரம்பரிய உணவுகளின் வாசனையாகவும் மாற்றிய சரஸ் வாழ்வாதாரத் திருவிழா 2026 (SARAS Aajeevika Mela 2026), நகர்ப்புறச் சூழலை இந்தியாவின் கிராமிய வாழ்வியலைச் சித்தரிக்கும் ஒரு ஓவியமாக மாற்றியுள்ளது. பிப்ரவரி 10 முதல் 26 வரை நடைபெறும் சரஸ் (SARAS- Sale of Articles of Rural Artisans Society)  விற்பனைத் திருவிழா, ஒரு வர்த்தக நிகழ்வாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தேசத்தையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்துவதாக  உள்ளது. நாட்டின் 28 மாநிலங்களைச் சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரரும் சுய உதவிக் குழு (SHG) உறுப்பினர்களும் இதில் தங்களது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் உள்ள கிராமப்புறக் கைவினைக்கலைஞர்களின் உழைப்பும், கலைநயமும் இந்த திருவிழாவின் வாயிலாக நகர்ப்புற மக்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தக் கண்காட்சி, நவீன இந்தியாவோடு கிராமப்புற இந்தியாவின் ஆன்மாவை இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது.

மாநில வாரியான அரங்குகளில் 450-க்கும் மேற்பட்ட விற்பனை அங்காடிகளுடன் கூடிய இந்த கண்காட்சி, அந்தந்தப் பகுதிகளின் பாரம்பரியத்திலும் கைவினைத் திறன்களிலும் வேரூன்றிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் ஒரு ‘சிறிய இந்தியா’ (Mini India) என்று வர்ணிக்கப்படுகிறது. காஷ்மீரின் பசுமினா சால்வைகள், தமிழ்நாட்டின் பட்டு ஜவுளிகள், ராஜஸ்தானின் வேலைப்பாடுகள் நிறைந்த போஷாக் (Poshaks) ஆடைகள், அசாமின் மூங்கில் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றுடன், பிராந்திய உணவு வகைகளை ருசித்தும், கலை நிகழ்ச்சிகளைக் கண்டும் பார்வையாளர்கள் மகிழ்கின்றனர்.

இந்தத் திருவிழா, அதன் கலாச்சாரத் துடிப்பையும் தாண்டி, வாழ்வாதார மேம்பாட்டுக் கட்டமைப்பிற்குள் ஒரு முறைப்படுத்தப்பட்ட சந்தை இணைப்பு மாதிரியை (Structured Market Linkage Model) விளக்குகிறது. முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட இத்தகைய நகர்ப்புறக் கண்காட்சிகள், வருமான வாய்ப்புகளை அதிகரிப்பதோடு நுகர்வோருக்கான நேரடி விற்பனைக்கு உதவுவதையும் இது எடுத்துக் காட்டுகின்றன. மேலும், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்கான பிராண்ட் அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, முறைப்படுத்தப்பட்ட சந்தை அமைப்பில் பெண்கள் தலைமையிலான சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான சிறந்த தளமாகவும் இது உள்ளது.

கைவினைப் பொருட்கள், ஜவுளிப் பொருட்களின் ஈர்ப்பையும் தாண்டி, இந்தத் திருவிழா நிறுவன ஆதரவையும் சமூக-பொருளாதார மாற்றத்தின் கதைகளையும் முன்னிலைப்படுத்துகிறது. ஒரு விற்பனை அரங்கில், அசாமின் 'முகா பட்டு' (Muga silk) ரகத்தின் தனித்துவமான பொன்னிறம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. புவிசார் குறியீடு (GI) அங்கீகாரம் பெற்ற தயாரிப்பான முகா பட்டு, அசாமில் மட்டுமே பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுவதுடன், நீண்டகால கைத்தறிப் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது. லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த  சகோதரி நஜித்ரா, 'ஹரியானி மிசிங் கௌன் மோஹிலா' சுய உதவிக் குழுவின் (Hariyani Mising Gaon Mohila SHG) சார்பில் இந்த விற்பனை அரங்கை நிர்வகிக்கிறார். 1984-ம் ஆண்டு முதல், அவர் 25,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதுடன், அவர்கள் கைவினைக்கலைஞர்களுக்கான அடையாள அட்டைகளையும் முறையான சந்தை இணைப்புகளையும் பெறுவதற்கும் உதவியுள்ளார். அவர், கிராமப்புற பெண் கைவினைக்கலைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும், அவர்களுக்கு நெசவுத் திறன்களுடன், விலை நிர்ணய உத்திகள், நுகர்வோர் விருப்பங்கள், சந்தை நிலவரங்கள் ஆகியவை குறித்த கல்வியறிவூட்டுவதிலும் ஒரு வினையூக்கியாகவும் செயல்பட்டுள்ளார். அவர் வழிகாட்டும் பல கைவினைக்கலைஞர்களுக்குத் தங்களது கிராமங்களைத் தாண்டி வெளி உலகத் தொடர்போ அல்லது மொழிப் புலமையோ பெரிதாக இல்லை. எனவே, அவர்களையும் தன்னுடன் அழைத்து வருவதன் மூலம், அவர்களுக்கான தகவல் தொடர்பு, வணிகப் பேச்சுவார்த்தை, சந்தை வாய்ப்புகளை அவர் எளிதாக்குகிறார்.

₹30,000 முதல் ₹70,000 வரை விலையுள்ள கைத்தறி முகா பட்டுப் புடவைகளைக் காட்சிப்படுத்தியுள்ள அவர், இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட பிற தயாரிப்புகளை விட, கைத்தறி தயாரிப்புகளுக்கான நுகர்வோர் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என்கிறார். இந்த விற்பனைத் திருவிழா தொடங்கிய சில நாட்களிலேயே, அவரது அரங்கில் ₹3 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முகா பட்டு வெறும் ஜவுளித் தயாரிப்பு மட்டுமல்ல; அது முறையான வழிகாட்டுதல், கூட்டு முயற்சி, பாரம்பரிய கைவினைப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றின் ஒட்டுமொத்த பலனாகும்.

சில வரிசைகளுக்கு அப்பால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சகோதரி சுபர்ணா நிர்வகிக்கும் உணவு அரங்கில் வைக்கப்பட்டிருந்த புதிதாகத் தயாரிக்கப்பட்ட பாரம்பரியப் பலகாரங்களின் நறுமணத்தால் கவரப்பட்ட பார்வையாளர்கள் குழுமியுள்ளனர். வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டே, காப்பீட்டுப் பணிகள் செய்து வருமானம் ஈட்டி வந்த அவர், கூடுதல் பணத் தேவையையும் தற்சார்பையும் விரும்பினார். 2011-ம் ஆண்டு, பத்து பெண்களை ஒருங்கிணைத்து ஒரு சுய உதவிக் குழுவை (SHG) உருவாக்கிய அவர், வீட்டு சமையலறைகளிலேயே அப்பளங்கள், பிராந்திய உணவுப் பொருட்களைச் சிறிய அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கினார். காலப்போக்கில் அவரது நிறுவனம் விரிவடைந்து, தற்போது தனது கிராம ஊராட்சியில் உள்ள பல சுய உதவிக் குழுக்களை அவர் ஒருங்கிணைத்து வருகிறார். இந்தத் திருவிழாவின் முதல் வாரத்தில் மட்டும், உற்பத்திச் செலவை விட 60 முதல் 70 சதவீத லாபத்துடன் ₹50,000-க்கும் அதிகமாக பொருட்களை அவர் விற்பனை செய்துள்ளார். இவர்களது உற்பத்தி முறை பரவலாக்கப்பட்ட ஒன்றாகும்; பெண்கள் தங்கள் வீடுகளிலேயே பொருட்களைத் தயாரித்து, பின்னர் அவற்றை ஒன்றாகத் திரட்டி, சிப்பமிடுதல் (Packaging) பணியை செய்து, கூட்டாகச் சந்தைப்படுத்துகின்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சிப் பிரிவின் (District Rural Development Cell) திறன் மேம்பாடு & நிதி உதவியைப் பெற்று இந்த அமைப்பு வலுப்படுத்தி தில்லி, நொய்டா, பஞ்சாப், டார்ஜிலிங் போன்ற இடங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்று, ஒரு நிகழ்விற்குச் சராசரியாக ₹1 லட்சம் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.

இருப்பினும், இந்த மாற்றம் வருமானம் ஈட்டுவதையும் தாண்டியது. பரஸ்பர ஆதரவு மையங்களாகவும்  செயல்படும் சுய உதவிக் குழு கூட்டங்களில், பெண்கள் தங்களது குடும்பப் பிரச்சனைகளையும், சமூகக் கட்டுப்பாடுகள் தொடர்பான கருத்துக்களையும், தனிப்பட்ட விருப்பங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். சகோதரி சுபர்ணா தனது மகள் மட்பாண்டத் தொழிலில் அடைந்து வரும் வளர்ச்சியைப் பற்றியும் பெருமையுடன் குறிப்பிடுகிறார்; அவரது மகளின் தயாரிப்புகள் உள்நாட்டு & சர்வதேசத் திருவிழாக்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. நிதி சுதந்திரத்திற்கான ஒரு முயற்சியாகத் தொடங்கிய இத்தொழில், தற்போது தலைமுறைகளைக் கடந்து அதிகாரமளித்தலுக்கான வாய்ப்பாக உருவெடுத்துள்ளது. கூட்டுத் தொழில்முயற்சி கிராமப்புறப் பெண்களின் மேம்பாட்டிலும் அவர்களது குடும்பங்களின் சமூக, பொருளாதாரப் பாதைகளை மாற்றியமைப்பதிலும் பங்களிக்க முடியும் என்பதை இந்தப்பயணம் விளக்குகிறது.

மற்றொரு விற்பனை அரங்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சகோதரி ஷோபிதா மேற்பார்வையில் சணல் பாய்கள், மரத்தாலான சமையலறை உபகரணங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவை முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2006-ம் ஆண்டு பத்து உறுப்பினர்களுடன் தனது சுய உதவிக் குழுவைத் தொடங்கிய அவர்,  தனது சிறப்பான தலைமைத்துவத்தின் மூலம் தற்போது மாவட்டம் முழுவதும் 374 சுய உதவிக் குழுக்களாக விரிவுபடுத்தியுள்ளார். அவரது தொழில்முனைவோர் பயணத்திற்கு வினையூக்கியாக அமைந்த தீனதயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) கீழ் பெற்ற பயிற்சி, சணல் கைவினைத் தொழிலில் தொழில்நுட்பரீதியாக தேர்ச்சி பெற உதவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உள்ளூர் பெண் கைவினைக்கலைஞர்களைப் பணியமர்த்தி ஒரு உற்பத்திப் பட்டறையை அவர் நிறுவினார். அருகிலுள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக மூலப்பொருளான சணலைப் பெற்று, உள்ளூர் தேவையின் அடிப்படையில் விநியோகச் சங்கிலியை உருவாக்கி, கிராமப்புறப் பொருளாதார இணைப்புகளை அவர் வலுப்படுத்தினார். 2023-ம் ஆண்டில், மரத்தாலான கைவினைப் பொருட்கள் தயாரிப்பிலும் அவர் தடம் பதித்தார்; சீப்புகள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுக்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். கடன் வசதியும் அரசு மானியங்களும் அவரது வணிக விரிவாக்கத்தை எளிதாக்கியதோடு, யுபிஐ (UPI) உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிமாற்ற அமைப்புகள் நிதிச் செயல்பாடுகளை முறைப்படுத்தின. அரசு நடத்தும் திருவிழாக்களில் பங்கேற்பதுடன், ஜெய்ப்பூர், தில்லி போன்ற நகர்ப்புறச் சந்தைகளில் தனது பொருட்களை விநியோகிக்கும் அரசு சாரா நிறுவனங்களுடனும் அவர் இணைந்து செயல்படுகிறார். அவரது இந்த வளர்ச்சி, திறன் அடிப்படையிலான பயிற்சியானது கூட்டு உற்பத்தி, உள்ளூர் மதிப்புச் சங்கிலிகள், டிஜிட்டல் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட கிராமப்புறத் தொழில்முனைவோர் சூழலாக (Decentralised Rural Enterprise Ecosystem) பரிணமிக்கிறது என்பதற்கு சான்றாக விளக்குகிறது.

செய்முறை விளக்கப் பகுதிக்கு அருகில், தங்க நிற நெற்பயிர் வைக்கோலால் வடிவமைக்கப்பட்ட நுணுக்கமான கலைப்படைப்புகளைக் காண பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஜோத்ஸ்னா, இயற்கையான நெற்பயிர்க் வைக்கோல் ஓவியக் கலையில் இந்தியாவின் முதல் பெண் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 2013-ல் ஒரு சுய உதவிக் குழுவில் (SHG) இணைந்து, முறையான கைவினைத்திறன் பயிற்சி பெற்ற பிறகு,  2015-ம் ஆண்டு முதல் இந்த வைக்கோல் கலை பயிற்சியை அவர் தொடங்கினார். தற்போது அவர் 15 முதல் 16 பெண் கைவினைக்கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்; இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே உருவாக்கும் நுணுக்கமான வடிவமைப்புகளைத் திரட்டி, நாடு முழுவதும் நடைபெறும் கண்காட்சிகளில் சகோதரி ஜோத்ஸ்னா சந்தைப்படுத்துகிறார். இவரது இந்த முயற்சி, விவசாயக் கழிவுகளை மதிப்புக்கூட்டப்பட்ட கலைப் பொருட்களாக மாற்றுவதில் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்வதுடன், ஏற்கனவே உள்ள வளங்களை ஆக்கப்பூர்வமாக மறுசீரமைத்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாகலாம் என்பதையும் விளக்குகிறது.

இந்தத் திருவிழாவின் செய்முறை விளக்கங்களும், நேரடிக் கற்றல் பகுதிகளும் (Live Learning Zone), திறன் வெளிப்பாடு, அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. குழந்தைகள் உட்படப் பார்வையாளர்கள் அனைவரும் மண்பாண்டங்கள் செய்யும் கலைஞர்கள், கண்ணாடி எம்பிராய்டரி வேலைப்பாடுகளில் ஈடுபடும் கைவினைக்கலைஞர்கள், மூங்கில் பின்னுபவர்களின் நேரடிச் செயல்பாடுகள் ஆகிய நிகழ்வுகளை ஆர்வத்துடன் உற்றுநோக்குகின்றனர். இறுதி வடிவம் பெற்ற பொருட்களை அவற்றின் தயாரிப்பு முறைகளுடன் சேர்த்து காட்சிப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு பொருளின் தயாரிப்பிற்கும் பின்னால் உள்ள உழைப்பையும், கைவினைத்திறனையும், கலாச்சார பாரம்பரியத்தையும் இந்தத் திருவிழா அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மகாராஷ்டிரா மாநில அரங்கிற்குள், நாக்பூரைச் சேர்ந்த 'சஞ்சீவனி மகிளா' சுய உதவிக் குழுவின் (Sanjeevani Mahila SHG) உறுப்பினர்கள், தங்களது கிராமப்புற உற்பத்தி அலகில் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட சட்டைகளையும் புடவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர். ஒரு சிறிய அளவிலான தையல் தொழிலாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (MSRLM), உள்ளூர் நிர்வாகத்தின் நிறுவன ரீதியான ஆதரவு ஆகியவற்றின் கீழ், இக்குழுவினர் திறன் பயிற்சியும், இயந்திரங்கள் &  சந்தை வசதிகளையும் பெற்றுள்ளனர். இந்த முயற்சி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருந்த பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம், கலப்புப் பயிர் சாகுபடி செய்யும் உள்ளூர் பண்ணைகளிலிருந்து பருத்தியைப் பெறுவதன்  மூலம் விவசாய நடவடிக்கைகளை கிராம அளவிலான மதிப்புக்கூட்டலுடன் (Value Addition) ஒருங்கிணைக்கிறது. இங்கு பருத்திச் சட்டைகள் சுமார் ₹600 என்ற விலையிலும், புடவைகள் ₹2,000 முதல் ₹5,000 வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. முக்கிய நகரங்களில் நடைபெறும் இத்தகைய கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம், ஒரு பருவத்தில் மட்டும் ₹8 முதல் ₹9 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடிகிறது. இக்குழுவின் உறுப்பினர்களுக்கு இந்த மேம்பாடு என்பது வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல், அது வருமானம், கூட்டு நிறுவன மேலாண்மை, நவீன இயந்திரங்களைக் கையாளுவதில் தொழில்நுட்பத் தேர்ச்சி, முறையான உற்பத்தி, சந்தைப் பங்களிப்பின் மூலம் கிடைத்த தன்னம்பிக்கை எனப் பல ஆக்கப்பூர்வமான வடிவங்களில் வெளிப்படுகிறது.

அசாம் மாநிலத்தின் மற்றொரு அரங்கில், பாரம்பரியத் திறனையும் நவீன வடிவமைப்பு நுணுக்கங்களையும் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மூங்கில் பைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு ஒரு சுய உதவிக் குழுவில் (SHG) இணைந்த சகோதரி விசாகா, தனது மாமனாரின் மூங்கில் கைவினைத் தொழிலைப் புதிய தயாரிப்பு முறைகளாலும் விரிவுபடுத்தப்பட்ட சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் மறுசீரமைத்தார். அரசின் நிதி உதவியாலும், தில்லியில் நடைபெற்ற 2025 இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகளின் மூலம் கிடைத்த அனுபவத்தாலும், ₹2 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை எட்டும் வகையில் தனது வணிகத்தை அவர் மேம்படுத்தினார். முறையான கல்வி, நிறுவன ரீதியான வசதிகள், சந்தை வாய்ப்புகள் ஆகியவை பாரம்பரியத் தொழில்களை நவீனமயமாக்கி, அவற்றை வளர்ச்சி சார்ந்த நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பதற்கு அவரது பயணம் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இந்தச் சாரஸ் திருவிழா, அதன் வணிகப் பரிமாணத்தைத் தாண்டி, ஒரு முறைப்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டுத் தளமாகச் செயல்படுகிறது. இங்குள்ள 'அறிவு & கற்றல்' (Knowledge and Learning) அரங்கில், பொருட்கள் சிப்பமிடுதல் (Packaging), பிராண்டிங், திட்டமிடுதல், டிஜிட்டல் முறையிலான சந்தைப்படுத்தல் உத்திகள் ஆகியவை குறித்த பயிற்சிப் பட்டறைகளில் பெண்கள் பங்கேற்கின்றனர். தளவாடங்கள் (Logistics), போக்குவரத்து மேலாண்மை குறித்த பிரத்யேக அமர்வுகள், உள்நாட்டு & சர்வதேச சந்தைகளில் தங்களது தயாரிப்புகளைத் திறம்பட விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகின்றன. இ-காமர்ஸ் தளங்களுடனான ஒத்துழைப்பும்,         'இ-சரஸ்' (E-SARAS) இணையதளம் குறித்த விழிப்புணர்வும், திருவிழா காலம் முடிந்த பிறகும் தொடர்ச்சியான விற்பனையையும் வணிக நிலைத்தன்மையையும் உறுதி செய்கின்றன.

மாலை வேளை நெருங்கி, திருவிழாவின் விளக்குகள் பூங்காவை ஒளியூட்டும்போது, இந்தத் திருவிழா கிராமப்புறத் தொழில்முனைவோர் & கூட்டு விருப்பங்கள் நிறைந்த ஒரு சிறு பிரபஞ்சமாக திகழ்கிறது. பார்வையாளர்கள் கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள், பிரந்திய உணவுகளோடு, பாரம்பரியம், பகிரப்பட்ட செழுமையில் வேரூன்றிய வழிகாட்டுதல், தொழில்முனைவு, சமூகம் சார்ந்த கண்டுபிடிப்புகளின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றுடன் அங்கிருந்து புறப்படுகின்றனர். வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகர்ப்புறச் சூழலில், சரஸ் வாழ்வாதார திருவிழாவானது ஒவ்வொரு விற்பனை அரங்கிலும் நிறைந்துள்ள உழைப்பு, விடாமுயற்சி, வாழ்வாதாரங்களை அங்கீகரிப்பதற்கான ஒரு உன்னத இடத்தை உருவாக்கியுள்ளது.

****

PD/KR

(Features ID: 158053) आगंतुक पटल : 103
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , हिन्दी , Bengali , Malayalam