• Sitemap
  • Advance Search
Technology

செயற்கை நுண்ணறிவு உலகம் சங்கமிக்கும் இடமாகத் திகழும் இந்தியா

பாரத் மண்டபத்தில் அரங்கேறிய உலகளாவிய ஒத்துழைப்பு

Posted On: 20 FEB 2026 7:08PM

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 'செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சி மாநாடு 2026' (India AI Impact Summit 2026),  செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டு அரங்கம் என 13 நாடுகளின் அரங்குகள் இந்த மாநாட்டில் தங்களின் புத்தாக்கச் சிந்தனைகள், முதலீடுகள், எதிர்காலத் திட்டங்களுடன் பங்கேற்றுள்ளன. உலகம் இந்த மாநாட்டிற்கு வெறும் பார்வையாளராக மட்டும் வருகைத் தராமல் ஒரு கூட்டாளியாக இணைந்து செயல்பட வந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

பிப்ரவரி 16 முதல் 21 வரை 70,000 சதுர மீட்டர் பரப்பளவில், பத்து அரங்குகளில் நடைபெற்று வரும் இந்த செயற்கை நுண்ணறிவு கண்காட்சிக்குக் கிடைத்துள்ள அமோக வரவேற்பை அடுத்து, மத்திய அரசு இந்த உச்சிமாநாட்டை மேலும் ஒரு நாளுக்கு நீட்டித்துள்ளது. சனிக்கிழமையான இன்று (பிப்ரவரி 21) பொதுமக்களின் வசதிக்காக மாநாட்டு அரங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது மூடிய அறையில் நடைபெரும் விவாதமாக அல்லாமல் பொதுமக்களுக்கான ஒரு வரலாற்றுத் தருணம் என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.

அனைவரது நலன், அனைவரின் மகிழ்ச்சி’ (சர்வஜன் ஹிதய, சர்வஜன் சுகய) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, இதனை செயற்கை நுண்ணறிவுக்கான இந்தியாவின் அளவுகோல் என்று குறிப்பிட்டார். பன்முகத்தன்மை, மக்கள் தொகை, ஜனநாயகம் ஆகியவையே இந்தியாவின் பலம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் வெற்றியடையும் எந்தவொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியும் உலகளவில் செயல்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும், இந்தியாவில் வடிவமைத்து உருவாக்கி, உலகுக்கும் மனிதகுலத்திற்கும் அர்ப்பணியுங்கள் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த உச்சி மாநாட்டில் பிரான்ஸ் நாட்டின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை அந்நாட்டு அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியுடன் இணைந்து பார்வையிட்டார். 1.4 பில்லியன் மக்களுக்கான டிஜிட்டல் அடையாளம், மாதந்தோறும் 20 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்ற அமைப்பு (UPI), 500 மில்லியன் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'இந்தியா ஸ்டாக்' (India Stack) கட்டமைப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

டிஜிட்டல் நிர்வாகத்தில் முன்னோடியாகத் திகழும் எஸ்டோனியாவின் அதிபர் திரு அலார் காரிஸ், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு என்பது இனி வெறும் தொழில்நுட்ப முதுகெலும்பாக மட்டுமல்லாமல், நவீன காலத்தில் உலக நாடுகளின் செயல்பாட்டிற்கு அடிப்படை ஆதாரமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். இவ்வாறு கட்டமைப்பு ரீதியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இணைக்கப்படும்போது, அல்காரிதம்களின் வெளிப்படைத்தன்மை, மனித கண்காணிப்பு ஆகியவை பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான இன்றியமையாத தேவைகளாகின்றன. அறநெறி, பொறுப்புணர்வு குறித்த விவாதங்களில் அதிபர் திரு அலார் காரிஸ்-ன் சிந்தனைகள் எதிரொலிக்கின்றன. இங்கு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பது வெறும் கருத்துருவாக மட்டும் இல்லாமல், ஒரு வலுவான கட்டமைப்பாக உருவாகியுள்ளது.

ஸ்லோவேக்கியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி ஒரு நடைமுறை எதார்த்தத்தை முன்வைக்கிறார். தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் உருவாக்க முடியும் என்பதும், அது சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்பதுமான ஒரு முக்கியமான உண்மையை இந்தியா உலகிற்கு உணர்த்தியுள்ளதாக அவர் கூறுகிறார். ஸ்லோவேக்கியா சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் மிக விரைவாகச் செயல்படும் திறன் கொண்டது. அது நடைமுறை முடிவுகளையே எதிர்பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ, இந்த உச்சி மாநாட்டைச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிடுகிறார். பொறுப்பான செயற்கை நுண்ணறிவை உருவாக்க உலக நாடுகளுக்கு இடையே பொதுவான புரிதல், பொதுவான விதிகள், அரசியல் உறுதிப்பாடு ஆகியவை உடனடியாகத் தேவைப்படுவதாக அவர் கூறுகிறார். சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை, சர்வதேச கூட்டுறவு குறித்துப் பேசினார். பொறுப்பான செயற்கை நுண்ணறிவு என்பது புத்தாக்கத்திற்கு இடையூறாக இல்லாமல், அதை ஊக்குவிக்கும் என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார். இந்தியா, சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளும் தங்களது இலட்சியத்திற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்கி வருவதாக அவர் மேலும் சேர்த்துக் கூறினார்.

மனித வளம்; சமூக மேம்பாட்டிற்கான உள்ளடக்கம்; பாதுகாப்பான & நம்பகமான செயற்கை நுண்ணறிவு; மீள்திறன், புத்தாக்கம் & செயல்திறன்; அறிவியல்; செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி & சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு ஆகிய ஏழு முக்கியக் கருப்பொருள் சக்கரங்களாக இந்தக் கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்கரங்கள் மக்கள், பூமி, முன்னேற்றம் ஆகியவற்றை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுகின்றன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தச் சக்கரங்களுக்கு இடையே பயணித்து, ஆராய்ச்சி ஆய்வகங்கள், புத்தொழில் நிறுவனங்கள், பொது நிறுவனங்களுக்கு இடையிலான பரஸ்பர இணைப்புகளைக் கண்டறிகின்றனர். எனவே உரையாடல்கள் கணக்கீட்டுத் திறனிலிருந்து (Compute Capacity) வகுப்பறைத் திறன் மேம்பாட்டிற்கும், தரவு நிர்வாகத்திலிருந்து பசுமை எரிசக்தி கட்டமைப்பை (Green Energy Grids) நோக்கியும் விரிவடைகின்றன.

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் (International Solar Alliance) அரங்கு மற்றொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தளங்கள், புவிசார் கருவிகள் (Geospatial tools) ஆகியவற்றைக் கொண்டு பொதுப் பயன்பாட்டுச் சேவைகளை நவீனப்படுத்துவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை துரிதப்படுத்துவது தொடர்பான நடைமுறை மாதிரிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 'எரிசக்திக்கான உலகளாவிய செயற்கை நுண்ணறிவு இயக்கம்' (Global Mission on AI for Energy) ஒரு முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது. சூரியசக்தி எரிசக்தி விரிவாக்கம், டிஜிட்டல் அறிவுத்திறனுடன் திறன்மிக்க மின்விநியோகக் கட்டமைப்பு மேலாண்மையுடன் இணைகிறது. இந்த ஒத்துழைப்பு தொழில்நுட்பம் சார்ந்தது என்றாலும், அதன் தாக்கம் சமூக ரீதியிலானனது. உறுப்பு நாடுகளிடையே எரிசக்தி மீள்திறனை உருவாக்குவது ஒரு பொதுப்படையான இலக்காக மாறியுள்ளது.

பத்துத் திடல்களிலும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வித்துறையினர், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து ஒரு மாபெரும் திறன்மிக்கக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் பிரம்மாண்டம் ஒரு போட்டித்தன்மை கொண்ட நிகழ்வாக இல்லாமல், ஒத்துழைப்பை மையப்படுத்தியதாகவே அமைந்தது. பன்னாட்டு நிறுவனங்கள், அரசியல் தலைவர்களின் வருகை இந்த உச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது வெறும் வர்த்தகக் கண்காட்சி மட்டுமல்லாது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் செயற்கை நுண்ணறிவு நிர்வகிக்கப்படும், பயன்படுத்தப்படும் விதத்தை தீர்மானிக்கும் ஒரு தளமாகும்.

மாநாட்டுத் திடலில் செல்ல செல்ல, நாடுகளின் அரங்குகள் தனித்தனிப் பகுதிகளாகத் தெரியாமல், திறந்தவெளி ஆய்வகங்களாகவே மாறின. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தரவுத் தரநிலைகள் தொடர்பான குறிப்புகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் அறநெறி சார்ந்த கட்டமைப்புகள் தொடர்பாகவும், தொழில்முனைவோர் கூட்டுப்பங்களிப்புகள் குறித்தும் விவாதித்தனர். பொதுமக்களுக்காக ஒரு நாள் நீட்டிக்கப்பட்ட மாநாட்டில் குடும்பங்கள், மாணவர்கள், இளைய புத்தாக்க சிந்தனையாளர்கள் எனப் பலரும் இதில் இணைந்தது செயற்கை நுண்ணறிவு மீதான ஆர்வம் மேலோங்கி இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. மேலும் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு இந்தியாவின் முக்கியத்துவத்தைக் குறைக்காமல் அதை மேலும் பலப்படுத்தியது.

டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பில் ம்பிக்கை கொண்ட நாடாகவும், பிறரிடம் இருந்து கற்றுக் கொள்ளவும், தனது தொழில்நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்பும் ஒரு வலிமைமிக்க நாடாகவும் இந்தியா விளங்குவதை இம்மாநாடு எடுத்துரைக்கிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஒத்துழைப்பு என்பது இனியும் விருப்பத்திற்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அது அடிப்படைத் தேவை என்பதை இம்மாநாட்டில் அமைக்கப்பட்ட 13 நாடுகளின் அரங்குகளும் உணர்த்துகின்றன.

மாலை நேர வெளிச்சத்தில் பாரத் மண்டபம் மூழ்கியபோது, அதன் கண்ணாடி முகப்பு ஒரு புதிய ஒளியைப் பிரதிபலித்தது. அது உரையாடல்களின் ஒளியாகவும், இங்கு மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகளின் ஒளியாகவும், இனி கையொப்பமிட உள்ள கூட்டு ஒப்பந்தங்களுக்கான ஒளியாகவும் இருந்தது. 'செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சி மாநாடு 2026' ஒரு முடிவாக அமையாமல், ஒரு தொடக்கப் புள்ளியாகவே நிறைவடைந்தது. இந்த உரையாடல்களின் வாயிலாக, உலகம் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டும் பார்க்கவில்லை மாறாக, செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு கூட்டாளியாகவே காண்கிறது என்கிற உண்மை செய்தி தெளிவாகப் புலப்படுகிறது

****

PD/KR

 

(Features ID: 158052) आगंतुक पटल : 22
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Bengali