Rural Prosperity
சரஸ் ஆஜீவிகா மேளா 2025
தில்லியின் மையப் பகுதியில், கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவு முயற்சிகளால், அவர்களது, லட்சாதிபதி கனவுகள் தற்போது நனவாகின்றன
Posted On:
20 SEP 2025 12:37PM
பாரம்பரியமும் லட்சியமும் சங்கமிக்கும் இடத்திலும், கிராமப்புறக் கனவுகள் செழிப்பான தொழில்களாக மலரும் இடத்திலும், தில்லியின் மையப் பகுதியில் சரஸ் ஆஜீவிகா மேளா 2025 கண்காட்சியின் வண்ணங்கள், ஒலிகள் மற்றும் உணர்வால் கலை கட்டுகிறது. “லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குதல்” என்ற எழுச்சியூட்டும் முழக்கத்துடன் நடைபெறும் இந்த மேளா, வெறும் கண்காட்சி மட்டுமின்றி, தங்களது எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் பெண்களின் கொண்டாட்ட நிகழ்வாகவும் அமைந்துள்ளது..
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால், தீன் தயாள் அந்த்யோதயா திட்டத்தின், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சேர்ந்த கிராமப்புறப் பெண்களின் அசாதாரணமான தொழில்முனைவு முன்முயற்சிகளை ஒன்றிணைக்கிறது. இதில் பங்கேற்பதற்கான செயல்முறையில், சுய உதவிக் குழுக்களை, இணையவழியில் பதிவு செய்தல் / பரிந்துரைத்தல் போன்ற செயல்பாடுகளும் அடங்கும்.
1999-ம் ஆண்டு முதல், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் 'சரஸ் ஆஜீவிகா மேளா' கண்காட்சி மூலம், கிராமப்புற தொழில்முனைவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. சிப்பம் கட்டுதல் (பேக்கேஜிங்), வடிவமைப்பு குறித்த பயிலரங்குகளையும், தகவல் தொடர்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கிடையேயான சந்தைப்படுத்தல் பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம், இந்த மேளா பெண்களுக்குப் முக்கிய சந்தைகளில் போட்டியிடுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வகை செய்கிறது.

2025 செப்டம்பர் 5 முதல் 22 வரை, மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம், உறுதி, திறமை மற்றும் தொழில்முனைவின் எழுச்சிமிக்கக் காட்சிக்கூடமாக உருவெடுக்கிறது. இந்த கண்காட்சியில் இடம்பெறும் ஒவ்வொரு விற்பனை அரங்கும், ஒரு கதையைச் சொல்கிறது, ஒவ்வொரு தயாரிப்பும் அதிகாரமளிக்கும் உணர்வைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு புன்னகையும் லட்சியம் மற்றும் மீள்திறனின் சான்றாக அமைகிறது.
தில்லி அரசு, இந்த கண்காட்சியை, முழுப் பொலிவுடன் முதன்முறையாக நடத்துகிறது. உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும், ஒரே இடத்தில் ஒன்றிணைகின்றன. சுவைகள் மற்றும் பாரம்பரியங்களின் புதையலாகத் திகழும் 200 பரபரப்பான கடைகளுக்கு இடையே, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வந்துள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான கிராமப்புறப் பெண் தொழில்முனைவோரைச் சந்திப்பதையும் கற்பனை செய்து பாருங்கள். இது வெறும் கண்காட்சியாக மட்டுமின்றி, திறமை, தொழில்முனைவு மற்றும் சமூக உணர்வின் நாடு தழுவிய கொண்டாட்டமாகவும் அமைந்துள்ளது. பார்வையாளர்கள், இந்தியாவின் கிராமப்புறப் பன்முகத்தன்மையை சித்தரிக்கும் வகையில். கைத்தறித் துணிகள், கைவினைப் பொருட்கள், இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் போன்ற பலதரப்பட்ட தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

சரஸ் இந்தியா (ஃபுட் கோர்ட்) உணவு வகைகள் இடம் பெற்றுள்ள பகுதியில், நாடு முழுவதிலுமிருந்து, பல்வேறு வகையான சுவைகளுடன் கூடிய உணவு வகைகளுடன், கலாச்சார நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்முயற்சிகள், மூத்த குடிமக்களுக்கான வாகனப் போக்குவரத்து சேவைகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் ஆகியவை பண்டிகைக்கால உற்சாகத்தை மேலும் அதிகரிக்கின்றன.
இந்த மேளா, கிராமப்புறப் பெண்கள் தங்களது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதுடன், நகர்ப்புற வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும், சந்தை வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், விலை நிர்ணயம் மற்றும் சிப்பம் கட்டுவதற்கான உத்திகளைச் செம்மைப்படுத்தவும் அவர்களுக்கு உதவுகிறது. இந்தத் தளத்தின் மூலம், பெண்கள் நிலையான மீள்திறனுடன் கூடிய வாழ்வாதாரங்களை உருவாக்குவதுடன், இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு, பெண்கள் தலைமையிலான அதிகாரமளித்தல் நடவடிக்கைகளுக்கான துணிச்சலான பாதைகளையும் வகுத்து முன்னேற்றம் அடைய உதவுகிறது.
லட்சாதிபதி சகோதரி என்பவர், குறைந்தது நான்கு வேளாண் பருவங்கள் அல்லது வணிகச் சுழற்சிகளுக்குள், ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 1,00,000 வருமானம் ஈட்டி, மாதந்தோறும் சராசரியாக ரூ 10,000 நிலையான வருமானத்தைப் பெறும் ஒரு சுயஉதவிக் குழு உறுப்பினர் ஆவார். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கின் ஒரு பகுதியாக, ஏற்கனவே, 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ள நிலையில், கிராமப்புறப் பெண்கள், தங்களது வாழ்க்கையையும், சமூகங்களையும் மாற்றியமைக்கும் எண்ணற்ற எழுச்சியூட்டும் கதைகள் நாடு முழுவதும் முழுவதிலுமிருந்து வெளி வருகின்றன.

லட்சாதிபதி சகோதரிகளின் உருவாக்கம்: லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ளவர்களின் கதைகள்

சிருஷ்டி சுய உதவிக் குழு, அசாம்
அசாமின் பசுமையான மையப்பகுதியில், சிருஷ்டி சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, ஒரு காலத்தில் தனது கைகளால் நெய்த புடவைகள், சால்வைகள், தலையணை உறைகள், மெக்கலா சடோர் எனப்படும் அசாமின் பாரம்பரிய உடை ஆகியவற்றைத் தாம் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே விற்பனை செய்து வந்தார். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தனது தயாரிப்புகளுக்கான, ஆர்டர்கள் அரிதாகவே கிடைத்தன. அவருக்கு அபாரமான திறமை இருந்தபோதிலும், அவரது தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் மிகக் குறுகிய பகுதிகளுக்குள் மட்டுமே இருந்தது.
அவர் சுய உதவிக் குழுவில் இணைந்து, சரஸ் மேளா போன்ற கண்காட்சிகளுடன் தொடர்பு கிடைத்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தத. அவரது கைவினை பொருட்கள், அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய, ஒரு தளத்தை உருவாக்குகிறது. தற்போது, அவரது தயாரிப்புகள் உள்ளூரில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சென்றடைகின்றன. இந்த மேளா மூலம், சந்தைப்படுத்துதலுக்கான உத்திகள், வாடிக்கையாளர் ஈடுபாடு போன்ற முக்கியத் திறன்களை அவர் கற்றுக் கொண்டதுடன், இது போன்ற முயற்சிகள் காரணமாக, அவரது விற்பனை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது!
தனது கிராமப்புற கட்டமைப்பு மற்றும் குழும அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து கடனுதவிகளைப் பெற்று, உற்பத்தியை விரிவுபடுத்தவும், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யவும் அவரால் முடிந்தது. தற்போது, அவர் சில மாதங்களிலேயே லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். இது அவரால் முன்பு. கற்பனை கூட செய்து பார்த்திராத ஒன்றாகும்.
மேற்கு ராஜஸ்தானில், லட்டு கோபால் ராஜீவிகா சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கான வாழ்வாதாரத்திற்கு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டதுடன், குறைந்த வளங்களுடன், நாள்தோறும் பல சோதனைகளைக் கடந்து வந்தனர். தங்களது குழந்தைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுத் தருவது போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கூட, பாலைவனத்தில் ஒரு கானல் நீரைத் துரத்துவது போலத் தோன்றியது.

லட்டு கோபால் ராஜீவிகா சுய உதவிக் குழு, ராஜஸ்தான்
அவர்கள் சுய உதவிக் குழுவில் சேர்ந்த போது, அவர்களது வாழ்வாதார நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஒரு ஆண்டு முடிவடைந்த பிறகு, சரஸ் மேளா கண்காட்சியில் பங்கேற்றனர். மத்திய அரசிடமிருந்து ரூ 4 லட்சம் கடனுதவி பெற்று, அவர் சுய உதவிக் குழுவின் இதர சகோதரிகளுடன் சேர்ந்து, வீட்டில் எந்திரங்களை நிறுவி, தீங்கு விளைவிக்கும் நான்ஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, ஆரோக்கியம் மிக்க இரும்புப் பாத்திரங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய இந்த முயற்சி, விரைவில், அவரது வாழ்வின் ஒரு அங்கமாக மாறியது.
இன்று, அவர்களின் கனவுகள் நனவாகியுள்ளன. மாத விற்பனை ரூ 6-7 லட்சத்தையும், ஆண்டு லாபம் ரூ 10 லட்சத்தையும் எட்டியுள்ளது. இந்த மாற்றம் அவர்களுக்குப் புதிய ஆர்வத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. அவர்களின் ரொக்கக் கையிருப்பு, ஆறு முதல் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக, அவர்களின் குழந்தைகள் சரியான வழிகாட்டுதல்களுடனும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடனும், பட்டப்படிப்பு வரை படித்து, சிறந்து விளங்குகிறார்கள். பெண்களுக்கு வாய்ப்பும், நம்பிக்கையும் வழங்கப்படும் போது, அவர்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் முன்னேற்றம் அடைகிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.

மஹிர் மகளிர் சுய உதவிக் குழு, கோவா
கோவாவின் மஹிர் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பருத்தி அச்சுத் துணிகளைக் கொண்டு, குட்டையான குர்திகள், நீளமான மேலாடைகள், பாவாடைகள் மற்றும் நுட்பமான பிளாக்-பிரிண்ட் வடிவமைப்புகளைத் தைத்துக் கொண்டிருந்தனர். திறமை இருந்தபோதிலும், அவர்கள் உருவாக்கிய படைப்புகள் ஒரு சில வாடிக்கையாளர்களைக் கடந்து, பிற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை அரிதாகவே சென்றடைந்தன.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பெண்கள் மஹிர் மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சரஸ் மேளாக்கள் மூலம், அவர்கள் ஒரு பெரிய தளத்தில் அடியெடுத்து வைத்தனர். அன்று முதல், அவர்களின் உலகம் உருமாறியுள்ளது. முன்பு அவர்களின் கடைகளில், சிறிது நேரம் நின்று சென்ற வாடிக்கையாளர்கள், தற்போது மீண்டும் வந்து, தொலைபேசி எண்களைச் சேகரித்து,, இணையவழியில் ஆர்டர் செய்கிறார்கள். இதனால், வீட்டிலிருந்து அவர்கள் தொடங்கிய சிறிய முயற்சி, மூன்று முதல் நான்கு மடங்கு வளர்ச்சியடைந்த தொழிலாக மாறியுள்ளது!
அவர்களின் பயணம், தங்குமிடம் மற்றும் கடைகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்குவதால், அந்தப் பெண்கள் தங்களின் கைவினைத் திறனையும் கனவுகளையும் விரிவுபடுத்துவது போன்ற முக்கிய விஷயங்களில் அம்சங்களில், முழுமையாகக் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றிய எழுச்சி, தற்போது கண்ணுக்குப் புலப்படும் தூரத்தில் உள்ளது. லட்சாதிபதி சகோதரிகள் என்ற நிலையிலிருந்து, கோடீஸ்வர சகோதரிகளாக உருவெடுப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. இவை அனைத்திற்கும் மேலாக, ஒரு காலத்தில் ஆண்டுக்கு ரூ 1 லட்சமாக இருந்த வருமானம், தற்போது மாதத்திற்கு ரூ 1 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது!
மேலும் தெற்கே ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்ரீசாய் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பயணம், பேரார்வமும், உறுதியும் எவ்வாறு நீடித்த தாக்கத்தை உருவாக்குகின்றன என்பதைப் பிரதிபலிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக, அவர் மும்பை, கொல்கத்தா, தில்லி மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடைபெற்ற சரஸ் மேளாக்களில், பெருமையுடன் பங்கேற்று, தனது கைவினைப் படைப்புகளுக்குத் தகுதியான பரந்த பார்வையாளர்களைப் பெற்றுத் தந்துள்ளார்.
ரூ 1 லட்சத்தில் தொடங்கிய அவரது வணிகம், படிப்படியாக, ரூ 8–10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், அவரது தயாரிப்புகள் அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதால், லாபமும் உயர்ந்து வருகிறது. சரஸ் கண்காட்சியில், எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்படும் கடைகள் உட்பட, செலவுகள் குறித்த எவ்வித அச்சமுமின்றி, தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஸ்ரீசாய் சுய உதவிக் குழு, ஆந்திரப் பிரதேசம்
அலங்காரத் தோரணங்கள், படுக்கை விளக்குகள் முதல் சர்மா சித்திரக் கலையை வெளிப்படுத்தும் வகையில், பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் வரை, கைகளால் செய்யப்படும் தோல் பொருட்களைத் தயாரிப்பதில் அவர் கைதேர்ந்தவர். ஒவ்வொரு படைப்பும் அவரது திறமை, படைப்பாற்றல் மற்றும் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது.
பீகாரில், குரைஷா காதுனின் பயணம் மன உறுதியின் ஒரு வலிமையான கதையாகும். ஒரு காலத்தில் வறுமையாலும் நிச்சயமற்ற தன்மையாலும் வாடிய அவர், சஹாரா சுய உதவிக் குழுவில் சேர்ந்த போது, ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டார். தனது நேர்த்தியான அரக்கு வளையல்களுடன், அவர் சரஸ் மேளா போன்ற கண்காட்சிகளில் பங்கேற்றார். அங்கு அவரது கைவினைத் தயாரிப்புகள், அவரது கிராமத்தைக் கடந்து, வெகுதூரம் பிரகாசிக்கத் தொடங்கியது.

சஹாரா சுய உதவிக் குழு, பீகார்
இன்று, அவரது குடும்பத்தின் நிதி நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகவும் ஆர்டர்கள் வருவதால், அவர், நம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் ஒரு தொழிலைக் கட்டமைத்து வருகிறார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு சரஸ் மேளாக்களில் பங்கேற்று வரும் குரைஷா, தனது கைவினைத் திறன் மீது நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டறிந்துள்ளார்.
அசாம் முதல் ராஜஸ்தான் வரையிலும், கோவா முதல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் வரையிலும், ஒவ்வொரு கதையும் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டுள்ளது. அவை சரஸ் மேளா போன்ற கண்காட்சிகளின் உருமாற்றும் சக்தியாக உள்ளது. வேலைவாய்ப்பிற்கான சாத்தியக்கூறுகளுடன், இன்றியமையாத சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம், இந்தத் தளங்கள், லட்சக்கணக்கான கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன. சவால்களை வாய்ப்புகளாக மாற்றியமைப்பதன் மூலம் வலிமை பெறும் பெண்கள், தளராத துணிச்சலுடனும், புத்திசாலித்தனத்துடனும் வழிநடத்தும் ஒரு எதிர்காலத்திற்கு வழிகாட்டியுள்ளன.
சரஸ் ஆஜீவிகா மேளா 2025 நடைபெறும் வேளையில், அவை இந்த உணர்வை முன்னோக்கி எடுத்துச் சென்று, கிராமப்புறப் புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமையை, நகர்ப்புற இந்தியாவின் மையத்திற்கே கொண்டு சேர்ப்பதுடன், அதிகாரம் பெற்ற பெண்களால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஒரு எதிர்காலத்திற்கு ஒளியேற்றுகிறது.
****
SV/BR/PD
(Features ID: 158051)
आगंतुक पटल : 32
Provide suggestions / comments