• Sitemap
  • Advance Search
Economy

செயற்கை நுண்ணறிவின் நடைமுறைச் செயல்பாடு: இந்தியாவின் அன்றாடச் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்கள்

Posted On: 20 FEB 2026 1:48PM

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 'செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சி மாநாடு 2026'-ன் மற்றொரு உற்சாகமான நாளில் மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த ஏராளமான பார்வையாளர்கள், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன், அது குறித்த ஆலோசனைகளிலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

கண்காட்சி அரங்குகளில் நடைபெற்ற ஆரம்பகட்ட உரையாடல்கள் முதல், புத்தாக்க சிந்தனையாளர்கள் & கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையேயான விறுவிறுப்பான விவாதங்கள் வரை, இன்றைய நாள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்திருந்தது. நேரடி செயல்முறை விளக்கங்களைக் காண சிறிய குழுக்களாக மக்கள் திரண்டனர். இவை அனைத்தும், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இனி வெறும் மாதிரி வடிவங்களுடன் (Prototypes) மட்டும் நின்றுவிடாமல் அன்றாட நடவடிக்கைகளில் இடம் பிடித்து வருகின்றது என்கிற முக்கியமான செய்தியை வலியுறுத்தின.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை, பொதுமக்களுக்கான நடைமுறை பயன்பாடுகளாக மாற்ற வேண்டும் என்பதில் அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதை பிரதிபலிப்பதாகவே இந்த மாநாட்டின் நோக்கம் அமைந்திருந்தது. அரங்கம் முழுவதும், புதிய சிந்தனைகள் வெறும் கருத்துக்களாக மட்டும் முன்வைக்கப்படாமல், அவை நடைமுறைப் பயன்பாடுகளை மையமாகக் கொண்டு, நேரடி சோதனைகள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவற்றின் வாயிலாக விரிவாக விவாதிக்கப்பட்டன.

நேரடி அனுபவப் பகிர்வுடனும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களுடன் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு, வெறும் கலந்துரையாடலாக மட்டும் இல்லாமல், தீர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு தளமாக உருவெடுத்தது. இதில் புதிய சிந்தனைகள் அனைத்தும் தெளிவான நடைமுறைப் பயன்பாடுகளாக மாற்றப்பட்டன. இம்மாநாடு, பல்வேறு துறைகள் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் துறைத் தலைவர்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்தது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளை போக்குவரத்து, கல்வி, நிர்வாகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தக்கூடிய நடைமுறைத் தீர்வுகளாக மாற்றும் விரிவான தேசிய முயற்சியை இது பிரதிபலிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி (Coaching)

கண்காட்சி அரங்கிற்குள் பார்வையாளர்கள் நுழைந்தபோது, மாணவர்கள் குழு ஒன்று கல்வித் திட்ட விவரங்களைக் (Study Dashboard) காட்சிப்படுத்தும் திரையைச் சுற்றி திரண்டிருந்தது. இது மத்திய கல்வி அமைச்சகம், ஐஐடி கான்பூர் ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பான 'சாதி' (SATHEE - Self Assessment, Test and Help for Entrance Exams) என்ற தளமாகும். 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஜேஇஇ (JEE), நீட் (NEET), கிளாட் (CLAT), ஐசிஏஆர் (ICAR), சியூஇடி (CUET), எஸ்எஸ்சி (SSC), ஆர்ஆர்பி (RRB), ஐபிபிஎஸ் (IBPS) ஆகிய எட்டு முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கு முற்றிலும் இலவசமான, செயற்கை நுண்ணறிவு சார்ந்த வழிகாட்டுதலையும் தனிப்பட்ட பயிற்சிகளையும் வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சந்தேகங்களுக்குத் தீர்வு காணுதல், கல்வித் திட்டம் உருவாக்குதல் (Study Plan Generator), குழப்பங்களைக் கண்டறியும் கருவிகள், தானியங்கி முறையில் பாடச்சுருக்கம் ஆகிய வசதிகளை 'சாதி' (SATHEE) தளம் வழங்குகிறது. மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே எப்போதும் படிப்பதில்லை என்பதை உணர்ந்து, நெகிழ்வுத்தன்மை கொண்ட கற்றலை ஆதரிக்க செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. "மாணவர்கள் எப்போதும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் படிப்பதில்லை என்பதை நாங்கள் அறிந்தோம். எனவே, அவர்கள் எந்த நேரத்திலும் வீட்டிலிருந்தே படிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உரையாடல் வழிகாட்டி, தற்காலத் தலைமுறை (Gen Z) மாணவர்களுக்குப் பயனுள்ள நினைவூட்டல்கள், செயற்கை நுண்ணறிவு காட்சிவழித் தீர்வு காணும் முறை (Visual Problem Solver) போன்ற வசதிகளைச் சேர்த்துள்ளோம்" என்கிறார் ஐஐடி கான்பூர் மென்பொறியாளர் திரு துருவ் கர்க்.

மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்களுக்கு ஒதுக்கும் நேரத்தைக் கொண்டு, தங்களுக்கென பிரத்யேக கல்வித் திட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த அமைப்பு விரிவுரைகளில் இருந்து முக்கியச் சூத்திரங்கள், சுருக்கங்களைத் தொகுத்து வழங்குவதுடன், மாணவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பாடங்கள் சார்ந்த குழப்பங்களையும் சுட்டிக்காட்டுகிறது. தற்போது 13 இந்திய மொழிகளில் கிடைக்கும் இப்பாடத்திட்டங்கள், மேலும் பல மொழிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் வாயிலாக ஜேஇஇ (JEE) தேர்ச்சி விகிதத்தில் 50% வரையிலும், நீட் (NEET) தேர்ச்சி விகிதத்தில் 80% வரையிலும் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திரு கர்க் குறிப்பிடுகிறார். தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்ல வசதியில்லாத மாணவர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

கேமராக்களை செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறிவுத்திறன் அமைப்புகளாக மாற்றுதல்

உச்சி மாநாட்டில் கல்வி குறித்த கலந்துரையாடல்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொருபுறம் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் குறித்த விவாதங்கள் கவனத்தை ஈர்த்தன. குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்டு பத்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் 'ஐரிஸ்: வேல்யூ கேட்டலிஸ்ட்ஸ்' (iiris: Value Catalysts) நிறுவனத்தின் அரங்கில், அதன் பாதுகாப்பு வடிவமைப்பு மேலாளர் திரு ஜியா அகமது, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை இணைக்கும் தங்களின் அணுகுமுறை குறித்து விளக்கினார். "உங்களிடம் ஒரு சேமிப்புக் கிடங்கோ அல்லது ஒரு நிலமோ இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பு இடர் மதிப்பீட்டை (Security Risk Assessment) முதலில் மேற்கொண்டு, அந்த இடத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாதுகாப்புத் தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்" என்று அவர் கூறினார்.

ஹார்டுவேரை புதிதாக மாற்றுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள சாதாரண கேமரா அமைப்புகளையே செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் மூலம் 'ஐரிஸ்' நிறுவனம் மேம்படுத்துகிறது. "முன்பெல்லாம் கண்காணிப்பு அமைப்புகள் மனிதர்களின் நேரடி கண்காணிப்பையே பெரிதும் நம்பியிருந்தன. ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், முழுப் பதிவையும் ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவைப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு, ஒரே ஒரு படியில் தேவையான அனைத்துத் தகவல்களையும் உடனடியாகப் பெற முடியும் என்று திரு அகமது விளக்கினார். உடைகளின் நிறம் அல்லது குறிப்பிட்ட கால அளவு போன்ற அம்சங்களைக் கொண்டு காட்சிகளை உடனடியாகவும் துல்லியமாகவும் பிரித்தறிய முடியும். கேமராக்களுடன், அசைவு உணர்விகள் (Motion Sensors) இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அமைப்புகள் மூலம் நிகழ்நேர எச்சரிக்கைகள் உருவாக்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளின் வேகமும் திறனும் கணிசமாக அதிகரிக்கின்றன.

மதுராவில் அமையவுள்ள உலகின் மிக உயரமான கோயிலான பிருந்தாவன் சந்திரோதயா மந்திர் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த நிறுவனம் தற்போது பாதுகாப்பு இடர் மதிப்பீடுகளைச் செய்து வருகிறது. அனுபவம் வாய்ந்த வல்லுநர்களின் மேற்பார்வையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், திட்டமிடப்பட்ட இடர் குறைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக திரு அகமது குறிப்பிட்டார்.

தண்டவாளங்கள் பழுதடைவதை முன்கூட்டியே கண்டுபிடித்தல்

'ரெயில்லேப்ஸ்: ரயில்வே டிஜிட்டல் பாதுகாப்பு' (RailLabs: Railway Digital Safety) நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு சுமித் ஆனந்த், 'அரிஸ்டா' (Arista) எனும் தானியங்கி தண்டவாள ஆய்வு ரோபோவை பெருமிதத்துடன் எடுத்துக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த ரோபோ, தண்டவாளப் பராமரிப்புப் பணிகளில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்பச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில், தண்டவாளத்தின் மேற்பரப்பு, உட்புறப் பகுதிகளில் உள்ள விரிசல்களைக் கண்டறிய மீயொலி குறைபாடுகளைக் கண்டறியும் (Ultrasonic flaw detection) தொழில்நுட்பத்தை முதன்மையாகப் பயன்படுத்துவதாகக் கூறினார். தண்டவாளங்களின் தன்மையை அறிய லேசர்கள், விரிசல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்த கேமராக்கள் ஆகியவற்றையும் இந்த ரோபோ பயன்படுத்துகிறது. தண்டவாளங்களை இணைக்கும் பிளேட்டுகள் (Fish plates), திருகுகள் (Bolts) விடுபட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் கட்டமைப்பு குறைபாடுகள் இருந்தாலோ, இந்த அமைப்பு அவற்றைத் துல்லியமாகக் கண்டறியும் என்று திரு ஆனந்த் மேலும் விளக்கிக் கூறினார். தற்போது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை விட, இந்த ரோபோவின் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வின் வேகம் 200% வரை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அருகில் இருந்த ரெயில்லேப்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் திரு நிஸ்சல் ரஞ்சன், ஏற்கனவே சந்தையில் பயன்பாட்டில் உள்ள 'சக்ரவியூ' (ChakrVue) எனும் மற்றொரு தயாரிப்பு குறித்து விவரித்தார். இது ரயிலின் சக்கரங்கள் சேதமடைவதை முன்கூட்டியே கணித்து, ரயில் தடம் புரள்வதைத் தடுக்கும் ஒரு கருவியாகும். மும்பை, அகர்தலா, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் 20 எல்.எச்.பி (LHB) ரயில்கள், தேஜஸ் ரயில்களில் இந்தத் தயாரிப்பு தற்போது செயல்பாட்டில் உள்ளது. ரயில் சக்கரங்கள் பழுதடைவதற்கு முன்பே அவற்றில் ஏற்படும் குறைபாடுகளை வை கண்டறிவதால், ரயில்வே பாதுகாப்பை இந்த அமைப்பு பலப்படுத்துவதாக அவர் கூறினார். டிஜிட்டல் பாதுகாப்பு என்பது மனித கண்காணிப்பை மாற்றுவதற்காக அல்ல, மாறாக துல்லியமான தகவல்கள் மூலம் அதனை வலுப்படுத்துவதற்கே என்று அந்த குழுவினர் நம்புகின்றனர். இரண்டு மில்லி மீட்டருக்கு மேலான விரிசல் கூட ஆபத்தானது என்று கூறிய அவர், முன்கூட்டியே கண்டறிவது என்பது ஒரு தொழில்நுட்ப ஆடம்பரம் அல்ல, அது பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்றும் விளக்கினார்.

இத்தகைய கண்டுபிடிப்புகள் ரயில்வே பாதுகாப்பு சூழலை மேம்படுத்துவதுடன், ரயில்கள் தடம் புரள்வதைத் தடுத்து உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவுகின்றன. அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் இத்தகைய நடைமுறைப் பயன்பாடுகள் உயர்தரமான முடிவுகளை வழங்குகின்றன.

இந்தச் சாதனைக் கதைகளின் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு பெரும் உந்துதலைப் பெற்றுள்ளது. அரங்கம் முழுவதும் திரைகள் ஒளிர, செயல்முறை விளக்கக் கருவிகளின் மெல்லிய ஓசையோடு அரங்கு களைகட்டியது. கொள்கை வகுப்பாளர்கள், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறைப் பிரதிநிதிகள் எனப் பலரும் ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்டு நேரடி செயல்முறை விளக்கங்களைக் கவனித்தனர்.

மாலை பொழுது நெருங்கி, அரங்கின் விளக்குகள் மங்கத் தொடங்கிய நிலையிலும், பார்வையாளர்கள் அங்கேயே இருந்து மென்பொருள்களை ஆராய்ந்து கேள்விகள் கேட்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்த உச்சி மாநாடு உடனடி மாற்றத்திற்கு வழிவகுப்பதோடு, அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் அறிவுத்திறன் அமைப்புகளின் (Intelligent Systems) நிலையான ஒருங்கிணைப்புக்கும் வழிகோலுகிறது. போக்குவரத்துப் பாதைகள், கோயில் வளாகங்கள், வகுப்பறைகள் எனப் பல இடங்களிலும், செயல் திறன், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த ஏற்கனவே உள்ள வசதிகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உறுதியான பங்கு இத்தகைய படிப்படியான ஒருங்கிணைப்பின் மூலமே,  வெளிப்படுகிறது.

****

PD/KR

 

(Features ID: 158050) आगंतुक पटल : 28
Provide suggestions / comments