• Sitemap
  • Advance Search
Social Welfare

மன நலனை புரிந்துகொள்ளுதல்

உலகளாவிய கண்ணோட்டங்கள் மற்றும் இந்திய முன்முயற்சிகள்

Posted On: 09 NOV 2025 2:56PM

 

மனநலன் என்பது வெறும் மகிழ்ச்சியாக இருப்பதையோ அல்லது சிறந்த மனநிலையில் இருப்பதையோ குறிப்பது மட்டுமின்றி அது நமது உணர்வுப்பூர்வ, சமூக, அறிவாற்றல் மற்றும் உடல் திறன்களை கொண்டதாகும். வாழ்க்கையின் சவால்களை கடந்து அந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு நமது மனநலத்தை நாம் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

மனநலன் என்பது ஓர் அடிப்படை மனித உரிமையாகும். இது தனிநபர், சமூகம் மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியமானதாகும். கடந்த சில ஆண்டுகளாக மனநலன் சார்ந்த பிரச்சனைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதோடு அது சார்ந்த விவாதங்களும் அதிகரித்துள்ளன. இத்துறையோடு தொடர்புடைய மருத்துவம், ஆலோசனை, நோயாளி மற்றும் இதர சமூகங்களுக்கிடையே  10 ஆண்டுகளுக்கும் மேலாகவே மனநலன் குறித்த தீவிர கவனம் இருந்தபோதிலும் உலகளாவிய கோவிட் 19 பெருந்தொற்று பரவல் தாக்கம் இந்த பிரச்சனை மீது மீண்டும் கவனம் செலுத்த உந்து சக்தியாக அமைந்துள்ளதாக தெரிகிறது. (ஐக்கிய நாடுகள், 2021)

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, மனநலன் சார்ந்த பாதிப்புகள் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. 2021-ம் ஆண்டு உலகளவில் 7 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு மனநல குறைபாட்டுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 1.1 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டதாகும். இந்தியாவில் 100 பேரில் சுமார் 11 பேர் மனநலன் சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படம் 1. நீடித்த வளர்ச்சிக்கான 3-வது இலக்கு

இந்த பாதிப்புகளின் தாக்கம் மாற்றுத் திறனாளியாக வாழ்ந்த ஆண்டுகள் என்ற அளவுகோலின் அடிப்படையில் மிகவும் தெளிவாக தெரிகிறது. இதில் மனச்சோர்வு, பதற்றம் ஆகியவை பூஜ்யம் முதல் ஐந்து வயது குழந்தைகளை தவிர்த்து, மற்ற அனைத்து வயதினரிடையேயும் குறிப்பாக 15 முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே முக்கியமாக உள்ளன. (டபிள்யூஎச்ஓ, 2025)

லான்செட் என்ற மருத்துவ இதழில் குறிப்பிட்ட ஆய்வின்படி (2020), உலகளாவிய நோய்களில் மனநலன் சார்ந்த குறைபாடுகள் 5.2 சதவீதம் உள்ளது. இதில் மனச்சோர்வு, பதற்றம் ஆகியவை மட்டும் மாற்றுத் திறனாளிகளாக வாழ்ந்து ஆண்டுகளில் முறையே 6.2 சதவீதம் மற்றும் 4.7 சதவீதமாகும். (மனநலன் அட்லஸ், 2024). தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த பாதிப்பு உலகளாவிய சுகாதார அமைப்புகளுக்கு மனநலன் சார்ந்த பிரச்சனைகள், உருவாகும் சவால்கள் எத்தகைய தீவிரமானவை என்பதைக் குறிப்பிடுகிறது.

மனநல பாதிப்புகளால் ஏற்படும் சிகிச்சை இடைவெளிகளை குறைத்து நோய் சுமை மற்றும் இயலாமையின் சூழலை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. (தேசிய சுகாதாரக் கொள்கை, பக்கம் 4) தனது பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மனநலன் சார்ந்த பாதிப்புகளை களைவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மனநலக்குறைபாட்டின் வகைகள்

இந்தியாவில் மனநலன்

தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் நடத்திய 2015 – 16-ம் ஆண்டிற்கான தேசிய மனநல ஆய்வின்படி, இந்தியாவில் வயது வந்தவர்களில் சுமார் 10.6 சதவீதம் பேர் அதாவது வயது வந்தவர்கள் 100 பேரில் சுமார் 11 பேர் கண்டறியக்கூடிய வகையிலான மனநலக் குறைபாட்டுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்த ஆய்வு பின்வரும் விவரங்களையும் வெளிப்படுத்தியது.

இந்தியாவின் வயது வந்தோர் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் உரிய மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவில் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

மனநலக் கோளாறுகளின் வாழ்நாள் பாதிப்பு விகிதம் 13.7 சதவீதமாக இருந்தது. அதாவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 100 பேரில் சுமார் 14 பேர் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு காலத்தில் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இது உணர்த்துகிறது. கிராமப்புறங்களுடன் (6.9%) ஒப்பிடுகையில், நகர்ப்புறங்களில் (13.5%) மனக்கோளாறு பிரச்சினைகள் அதிக அளவு காணப்படுகின்றன.

2019-ம் ஆண்டில் தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஆண்களைவிட (10%) பெண்களிடமே (20%) மனநலக் கோளாறுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் உள்ள பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடும்போது மனச்சோர்வு, பதற்றம், உடல்நலன்சார்ந்த பிரச்சினைகள் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்கொலை விகிதங்கள் அதிகரித்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2023-ம் ஆண்டு வெளியிட்ட இந்தியாவில் ஏற்படும் எதிர்பாராத மரணங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்த அறிக்கையின்படி, நாட்டில் 2023-ம் ஆண்டில் 1,71,418 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2023-ம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை, தற்கொலை விகிதங்களில் பாலின ரீதியிலான குறிப்பிட்ட ஏற்றத்தாழ்வு இருப்பதை வெளிப்படுத்தியது. தற்கொலை செய்தவர்களில் 72.8% பேர் ஆண்கள். 27.2% சதவீதம் பேர் பெண்களாவர்.

சிகிச்சை இடைவெளி

2015 – 16 காலகட்டத்தில் தேசிய மனநலன் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களில் 70% முதல் 92% சதவீதம் வரையிலானோர் போதிய விழிப்புணர்வின்மை, சமூக களங்கம், நிபுணர்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உரிய சிகிச்சையை பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிள்ளது.

மனநல சிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறையும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு 1 லட்சம் பேருக்கும் 3 மனநல மருத்துவர்களாவது இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஆனால் 2019-ம் ஆண்டில் இந்திய மனநல மருத்துவ இதழில் கார்க் மற்றும் குழுவினர் வெளியிட்ட ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 1 லட்சம் பேருக்கு 1-க்கும் குறைவான (0.75) அளவிலேயே மனநல மருத்துவர்கள் உள்ளனர்.

மக்களின் உடல்நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியின் மீது மோசமான மனநலன் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதாவது, மோசமான மனநலம் கொண்ட தனிநபர்கள் ஒட்டுமொத்தமாக பலவீனமான உடல்நலத்தையே எதிர்கொள்வதுடன், குறைந்த ஆயுட்காலத்தையும் கொண்டுள்ளனர். உதாரணமாக, மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய் போன்ற பிற உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. லான்செட் சைக்காட்ரிஸ்ட் இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, இந்த அபாயம் 72% வரை அதிகரிப்பதாக குறிப்பிடுகிறது நீண்டநாள் வலி மற்றும் தூக்கமின்மை பாதிப்பகளும், மோசமான மனநலம் கொண்ட மக்களிடையே பரவலாகக் காணப்படுகின்றன.

பணியாளர்களின் மோசமான மனநலன் பொருளாதார உற்பத்தித்திறனை மறைமுகமாக பாதிக்கிறது. இது உற்பத்தித்திறன் இழப்புகளுக்கும் (வேலைக்கு வராமல் இருத்தல், வேலையில் இருக்கும்போதே முழுமையாகச் செயல்பட இயலாமை மற்றும் பணியாளர் சுழற்சி விகிதம் அதிகரித்தல்) வழிவகுக்கிறது. மேலும், சமூகத்திற்கு ஏற்படும் இத்தகைய மறைமுகச் செலவுகள், மனநலச் சிகிச்சைக்கான நேரடிச் செலவுகளை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளன (டபிள்யூ எச் ஓ, 2025). இதன் விளைவாக, மக்களின் வருவாய் ஈட்டும் திறன் மற்றும் வளர்ச்சி குறைகிறது, வேலையின்மை விகிதங்கள் அதிகரிப்பதுடன், சுகாதாரச் சிகிச்சைக்கான செலவும் அதிகரிக்கிறது. (சார்ட்டோரியஸ், 2013). மனச்சோர்வு மற்றும் பதற்றக் கோளாறுகள் காரணமாக ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்புகளால், உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது (டபிள்யூ எச் ஓ, 2025).

மனநலப் பாதிப்புகளால் உலகளாவிய அளவில் ஏற்படும் நிதிச்சுமை (சுகாதாரச் செலவுகள் மற்றும் மறைமுகச் செலவுகள் உட்பட), 2030-ம் ஆண்டிற்குள் 16 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (ஜார்னல் ஆஃப் மென்ட்டல் ஹெல்த், 2021). இதன் தலைமுறை சார்ந்த தாக்கங்களும் குறிப்பிடத்தக்கவையாகும். ஏனெனில், மனநலப் பாதிப்புகள் கொண்ட பெற்றோரின் குழந்தைகள், கல்வி கற்றலில் பின்தங்கியிருத்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் ஈட்டும் வருவாய் குறைவாக இருத்தல் போன்ற பொருளாதார ரீதியான பின்தங்கிய நிலைகளை எதிர்கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது (டோரன் & கின்சின், 2019).

மனநல பிரச்சினைகள் கொண்ட மக்கள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இவர்களது உறவுகளில் ஏற்படும் விரிசல்களும், தகவல் தொடர்பு சார்ந்த சவால்களும் இவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை மேலும் அதிகரிக்கின்றன. 'தி லான்செட் சைக்யாட்டரி' (2010) இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் பிறருடன் தனிப்பட்ட உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதிலும், அவற்றை நீட்டிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கிறது. சமூக ஆதரவு இல்லாத இத்தகைய சூழல், மனச்சோர்வின் அறிகுறிகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்கள், மனநலப் பராமரிப்பை நாடுவதில் உள்ள பிரச்சனையின் காரணமாக, தனிமைப்படுத்தல் மற்றும் மோசமடைந்து வரும் மனநலன் ஆகியவற்றிற்கு எளிதில் ஆளாகின்றனர் (உலக சுகாதார அமைப்பு, 2018). உதாரணமாக, தி லான்செட் சைக்கியாட்ரி (2020) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மனநலக் கோளாறுகள் உள்ள நபர்கள், குறிப்பாக சிசோஃப்ரினியா போன்ற கடுமையான பாதிப்புகள் உள்ளவர்கள், அடிக்கடி பாகுபாடு மற்றும் ஒதுக்கப்படுவதற்கு ஆளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாதது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கிறது மற்றும் சிகிச்சை அல்லது குணமடைவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் குறைக்கிறது.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 7,27,000-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் (உலக சுகாதார அமைப்பு, 2025). சைக்கியாட்ரி ரிசர்ச் (2023) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மனநலக் கோளாறுகள் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மனநலக் கோளாறுகள் உள்ள நபர்கள் 16 மடங்கு அதிக தற்கொலை அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த அதிகரித்த அபாயம், பிராந்தியங்கள் மற்றும் காலங்கள் முழுவதும் சீராகக் காணப்படுகிறது.

பெரியவர்கள் எதிர்கொள்ளும் மனநலக் கோளாறுகளில் மூன்றில் ஒரு பங்கு 14 வயதிற்குள்ளும், பாதி 18 வயதிற்குள்ளும், மற்றும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 25 வயதிற்குள்ளும் தொடங்குகின்றன (டபிள்யூஎச்ஓ, 2025). மனநலக் கோளாறுகள் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ வெளிப்படுகின்றன. அனைத்து மனநலப் பாதிப்புகளில் 50% 14 வயதிற்குள்ளும், 75% 24 வயதிற்குள்ளும் உருவாகின்றன (டபிள்யூஎச்ஓ, 2020). தி லான்செட் (2017) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இளமைப் பருவத்தில் ஏற்படும் மனநலப் பிரச்சினைகள் மோசமான கல்வி கற்றல், அதிகரித்த போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதிக அளவிலான தற்கொலை முயற்சிகளுடன் தொடர்புடையவை என்பதைக் காட்டுகிறது. இது இளைஞர்களிடையே சிகிச்சையளிக்கப்படாத மனநலப் பிரச்சினைகளின் நீண்டகால தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

மனநலத்தில் கோவிட்-19-ன் தாக்கம்

கோவிட்-19 பெருந்தொற்று உலகளவில் மக்களின் மனநலத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்த பதட்டம் மற்றும் மனச்சோர்வு: பெருந்தொற்றின் போது பதட்டக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை சுமார் 25% அதிகரித்தது.

சமூகத் தனிமைப்படுத்தல்: தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரிடையே தனிமை மற்றும் விரக்தி உணர்வுகளுக்கு வழிவகுத்தன.

பொருளாதார நெருக்கடி: வேலை இழப்புகள் மற்றும் நிதிப் பாதுகாப்பின்மை ஆகியவை அதிகரித்த மன அழுத்த அளவுகளுக்கும் மோசமடைந்து வரும் மனநல நிலைகளுக்கும் காரணமாக இருந்தன.

உலக சுகாதார அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் விரிவான மனநல செயல் திட்டம் 2013 - 2030-ஐ செயல்படுத்த உறுதிபூண்டுள்ளன. இத்திட்டம், திறமையான தலைமை மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், ஊக்குவிப்பு மற்றும் தடுப்பு உத்திகளைச் செயல்படுத்துதல், மற்றும் தகவல் அமைப்புகள், சான்றுகள் மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மனநலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2022-ம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு "உலக மனநல அறிக்கையை" வெளியிட்டது. இது உலகளவில் மனநலத்தை மேம்படுத்துவதற்கான மாற்றியமைக்கும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. உலகளவில் மனநலப் பராமரிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல மாற்றியமைக்கும் உத்திகளை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்த அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்:

மாற்றத்திற்கான மூன்று வழிவகைகள்:

மதிப்பையும் அர்ப்பணிப்பையும் ஆழப்படுத்துதல்: மனநலத்தின் உள்ளார்ந்த மதிப்பை அங்கீகரிக்க தனிநபர்களையும் சமூகங்களையும் ஊக்குவித்தல், சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் உடல்நலத்துடன் மனநலத்திற்கும் முன்னுரிமை அளித்தல்.

சூழல்களை மறுவடிவமைப்பு செய்தல்: சிறந்த மனநல விளைவுகளை மேம்படுத்துவதற்காக உடல் சார்ந்த, சமூக மற்றும் பொருளாதார சூழல்களை மாற்றியமைத்தல். இதில் வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் சமூகங்களில் உள்ள நிலைமைகளை மேம்படுத்துதல் அடங்கும்.

மனநலப் பராமரிப்பை வலுப்படுத்துதல்: மனநல மருத்துவமனைகளில் உள்ள காவலில் வைக்கும் பராமரிப்பிலிருந்து சமூக அடிப்படையிலான பராமரிப்பு மாதிரிகளுக்கு மாறுதல். இது மனநலப் பராமரிப்பை பொது சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைக்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சேவைகளின் கட்டமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கியது. கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பொதுவான மனநல பராமரிப்பு விருப்பங்களை பல்வகைப்படுத்தி விரிவுபடுத்துதல், பராமரிப்பின் அணுகல்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த பணிப் பகிர்வு அணுகுமுறைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் (டபிள்யூஎச்ஓ,2022).

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் மனநலப் பராமரிப்பை ஒருங்கிணைப்பதற்கான பல உத்திகளையும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை பரிந்துரைக்கிறது.

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் மனநலப் பராமரிப்பை ஒருங்கிணைப்பது ஒட்டுமொத்த சுகாதார விளைவுகளைக் கணிசமாக மேம்படுத்தவும், சிகிச்சை இடைவெளிகளைக் குறைக்கவும், உலகளவில் மனநலக் கோளாறுகள் உள்ள தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முடியும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

பல்வேறு ஊக்குவிப்பு மற்றும் தடுப்புத் திட்டங்கள், குறிப்பாக சுகாதாரத் துறையில், சுகாதார சேவைகளுக்குள் ஊக்குவிப்பு மற்றும் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலமும், பல்துறை ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஆதரித்து, தொடங்கி, எளிதாக்குவதன் மூலமும் கணிசமாகப் பங்களிக்க முடியும்.

தேசிய மனநல சுகாதாரத் திட்டம் – 1982

இந்தியாவில் வளர்ந்துவரும் மனநலக் குறைபாடுகள், மனநல சேவைகள் குறைபாடு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முதன்மை இலக்கு;

ஒருங்கிணைந்த மனநல சுகாதாரப் பராமரிப்பை பொது சுகாதாரப் பராமரிப்பு முறையாக மாற்றி அனைவரும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்கள் அணுகுவதற்கு வகைசெய்தல்.

மாவட்ட மனநல சுகாதாரத் திட்டம் – 1996

கர்நாடகாவில் பெல்லாரி மாதிரி அடிப்படையில் 1996-ல் தேசிய மனநல சுகாதாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்தல்.

1996-ல் 4 மாவட்டங்களில் துவங்கப்பட்ட இத்திட்டம் 9-வது ஐந்தாண்டு திட்டத்தின்போது 27 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு தற்போது 767 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

அளிக்கப்படும் சேவைகள்:

கலந்தாய்வு மற்றும் புறநோயாளி சிகிச்சை

மாவட்ட அளவில் 10 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகளுக்கான வசதிகள்

தற்கொலைத் தடுப்பு முன் முயற்சிகள்:

விழிப்புணர்வு திட்டம்

ஒரு மாவட்டத்திற்கு ஒரு குழு அமைப்பு: மனநல மருத்துவர், மருத்துவ உளவியலாளர், மனநல சமூகப் பணியாளர், மனநல/சமூக செவிலியர், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி, நோயாளிகள் பதிவேட்டு உதவியாளர், வார்டு உதவியாளர்/பணியாளர்.

முக்கிய அம்சங்கள்:

தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல்

பொது மருத்துவர்களுக்கான குறுகிய காலப் பயிற்சி

மனநோயைக் கண்டறிய சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சி

பொது விழிப்புணர்வு (தகவல், கல்வி மற்றும் தொடர்பு) பிரச்சாரங்கள்

கண்காணிப்பிற்கான எளிய பதிவேடு பராமரிப்பு

அணுகுமுறை: சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், தொடக்கத்திலேயே விரைவான தலையீடு, மற்றும் சேவை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிக்காக தரவுகளைச் சேகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடிய சமூக அடிப்படையிலான மாதிரி.

தேசிய தற்கொலை தடுப்பு உத்தி – 2022

2022-ல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

இலக்கு: 2030-க்குள் தற்கொலை இறப்பு விகிதத்தை 10% குறைத்தல்.

முக்கிய அம்சங்கள்:

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநலப் பரிசோதனைகள்

நெருக்கடி கால உதவி எண்கள் மற்றும் உளவியல் ஆதரவு மையங்களை நிறுவுதல்

களங்கத்தை களைவதற்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பணியிடங்களில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகள்

இலக்கு குழுக்கள்: மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் மக்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

மனநலப் பராமரிப்பு நிபுணர்களுக்கான பயிற்சிக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு:

47 அரசு மனநல மருத்துவமனைகள் (3 மத்திய நிறுவனங்கள்: நிம்ஹான்ஸ் பெங்களூரு, எல்ஜிபிஆர்ஐஎம்எச் தேஜ்பூர், சிஐபி ராஞ்சி; 44 அரசு மருத்துவமனைகள்)

அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் மனநல சேவைகள் கிடைக்கின்றன

மனிதவள மேம்பாட்டுத் திட்டம் ஏ - சிறப்பு மையங்கள்:

மொத்தம்: மனநல மருத்துவம், மருத்துவ உளவியல், மனநல சமூகப் பணி மற்றும் மனநல செவிலியப் படிப்புகளை வலுப்படுத்த 25 சிறப்பு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன

11-வது திட்டம் (2007-2012): தலா ரூ. 30 கோடி செலவில் 11 சிறப்பு மையங்கள்

12-வது திட்டம் (2012-2017): தலா ரூ. 33.70 கோடி செலவில் 10 சிறப்பு மையங்கள்

12-வது திட்டத்திற்குப் பிறகு (2017-2018): தலா ரூ. 33.70 கோடி செலவில் 4 சிறப்பு மையங்கள் தலா 36.96 கோடி ரூபாய்

இந்த மானியம் மூலதனப் பணிகள், உபகரணங்கள், தளவாடங்கள் மற்றும் ஆசிரியர்களைத் தக்கவைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மூன்றாம் நிலை சிகிச்சையை வழங்குகிறது, முதுகலை இடங்களை உருவாக்குகிறது.

மனிதவள மேம்பாட்டுத் திட்டம் பி - முதுகலைத் துறையை மேம்படுத்தல்:

மொத்தம்: 19 அரசு நிறுவனங்களில் 47 முதுகலைத் துறைகள்

11-வது திட்டம் (2009-2011): 11 நிறுவனங்களில் 27 துறைகள், ரூ. 51 லட்சம் முதல் 1 கோடி வரையிலான செலவு.

12-வது திட்டம் (2015-2016): 4 நிறுவனங்களில் 13 துறைகள், ஒவ்வொன்றும் ரூ. 0.85-0.99 கோடி வரையிலான செலவு.

12-வது திட்டத்திற்குப் பிறகு (2017-2018): 4 நிறுவனங்களில் 7 துறைகள் ஒவ்வொன்றும் ரூ. 1.89 - 2.20 கோடி வரையிலான செலவு.

டிஜிட்டல் பயிற்சி முன் முயற்சிகள்:

டிஜிட்டல் அகாடமிகள் (2018 முதல்): என்ஐஎம்எச்ஏஎன்எஸ், எல்ஜிபிஆர்ஐஎம்எச், மற்றும் சிஐபி ராஞ்சியில் நிறுவப்பட்டது; 1,76,454 சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஐஜிஓடி - தீக்ஷா தளம் (2020): சுகாதாரப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் சமூகத் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது; அடிப்படைத் திறன் மேம்படுத்தப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் மூலம் மனநலப் பராமரிப்பை வலுப்படுத்துதல்

மனநலப் பராமரிப்பை ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக அங்கீகரித்து, ஆயுஷ்மான் பாரத் முன்னெடுப்பின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையம் மூலம் மனநலச் சேவைகளை முதன்மைப் பராமரிப்பில் ஒருங்கிணைத்து, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை நோக்கிய ஒரு முக்கிய படியை இந்தியா எடுத்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் முன்முயற்சியின் கீழ், 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களும்  ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இங்கு மனநலச் சேவைகள் தற்போது விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகத் திகழ்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு, அடிப்படை நிலையில் அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மனநல ஆதரவு கிடைப்பதை உறுதி செய்கிறது.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

ஒருங்கிணைந்த மனநல சேவைகள்: ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் வழங்கப்படும் முதன்மைப் பராமரிப்பு சேவைகளின் முக்கிய அங்கமாக மனநலப் பராமரிப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நிதிப் பாதுகாப்பு: ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள்  ஆரோக்கியத் திட்டத்தின் மூலம், மனநலப் பாதிப்புகளுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும், 2021-22 நிதியாண்டு முதல் 2023-24 நிதியாண்டு வரை ரூ. 120.19 கோடி மதிப்பிலான 1.35 லட்சத்திற்கும் அதிகமான சேர்க்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது (நாடாளுமன்றம், நட்சத்திரக்குறியிடப்படாத கேள்வி, 2023).

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ், அறிவுசார் குறைபாடு, சிசோஃப்ரினியா, சிசோடைப்பல், பிரமைக் கோளாறுகள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு போன்ற மனநலக் கோளாறு சிறப்புப் பிரிவின் கீழ் 22 சிகிச்சை முறைகள் உட்பட, கட்டணமில்லா சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், உள்ளூர் சூழலுக்கு ஏற்ப சுகாதாரப் பலன் தொகுப்புகளை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ள மாநிலங்களுக்கு நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. (பத்திரிகை தகவல் அலுவலகம், மார்ச் 25, 2024).

மேலும், இந்த முன்முயற்சியானது, ஆலோசனை மற்றும் மனநலப் பராமரிப்பு உள்ளிட்ட, இந்தக் கோளாறுகள் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் மற்றும் தலையீடுகளுக்கான காப்பீட்டை வழங்குகிறது. இந்த நிலைகளைச் சேர்ப்பதன் நோக்கம், சிகிச்சை இடைவெளியைக் குறைப்பதும், தனிநபர்கள் நிதிச் சுமைகளை எதிர்கொள்ளாமல் தேவையான மனநல சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதும் ஆகும்.

தொலைபேசி வழி மனநல மருத்துவ சேவை: தொலைபேசி வழி மருத்துவம், குறிப்பாக டெலி மானாஸ் வழியாக, போதிய சேவைகள் கிடைக்காத பகுதிகளில் மனநல சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது.

திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு: களங்கத்தைக் குறைப்பதற்கும் மனநலத்தை மேம்படுத்துவதற்குமான பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களின் ஆதரவுடன், மனநோய்களைக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கு சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விரிவாக்கப்பட்ட மாவட்ட மனநலத் திட்ட சேவைகள்: மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ், சமூக மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் புறநோயாளிகள் பராமரிப்பு, ஆலோசனை, மருந்துகள், களப்பணி மற்றும் அவசரகால ஆதரவை வழங்குகின்றன.

கோவிட்-19 நடவடிக்கைகள் (2020)

பெருந்தொற்று காலத்தில், மன அழுத்தம், பதற்றம் மற்றும் பிற மனநலச் சவால்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு உளவியல்-சமூக ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்க, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 24 மணி நேரமும் செயல்படும் ஒரு தேசிய உதவி எண்ணை (080-4611 0007) அறிமுகப்படுத்தியது (பத்திரிகை தகவல் அலுவலகம், 2021).

டெலி மானஸ் மொபைல் செயலி மற்றும் காணொளி ஆலோசனைச் சேவை

டெலி மானஸ் - கட்டணமில்லா மனநலச் சேவை

அறிமுகம்: உலக மனநல நாள், 2022

பகுதிகள்: அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

கட்டணமில்லா எண்கள்:

14416

1-800-891-4416

பயன்பாடு: 2,838,322 அழைப்புகள் கையாளப்பட்டுள்ளன (அக்டோபர் 27, 2025 நிலவரப்படி)

டெலி மானஸ் மொபைல் செயலி

சிறப்பம்சங்கள்:

  • சுய-பராமரிப்பு குறிப்புகள் அடங்கிய தகவல் தொகுப்பு.
  • மன உளைச்சலின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்கள்.
  • மன அழுத்தம், பதற்றம் மற்றும் உணர்வுசார் போராட்டங்களை எதிர்கொள்ளுதல்.
  • இந்தியா முழுவதும் உள்ள பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் மூலம் வழங்கப்படும் ரகசிய ஆதரவு.

காணொளி ஆலோசனை வசதி

அறிமுகம்: அக்டோபர் 10, 2024 (முன்னோடித் திட்டம்)

முன்னோடி மாநிலங்கள்: கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர்

நாடு முழுவதும் அறிமுகம்: ஜூன் 16, 2025

செயல்பாடு:

மனநல நிபுணர்கள் (மனநல மருத்துவர், மருத்துவ உளவியலாளர், மனநல சமூக சேவையாளர், மனநல செவிலியர்) மருத்துவத் தேவையின் அடிப்படையில், ஒலிவழி ஆலோசனைகளை காணொளிவழி ஆலோசனைகளாக மாற்றியமைக்கலாம்.

மனநல மருத்துவர்களுக்கு மட்டுமே மின்னணு மருந்துச் சீட்டுகளை  வழங்கும் அதிகாரம் உள்ளது.

பயன்பாடு: 1242 காணொளி அழைப்புகள் கையாளப்பட்டுள்ளன (அக்டோபர் 27, 2025 நிலவரப்படி)

அங்கீகாரம்

உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம்: மனநலப் பராமரிப்பை வழங்குவதற்கான ஒரு புதுமையான மற்றும் பயனுள்ள மாதிரியாக டெலி மானஸை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.

இந்தியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச் ஆஃப்ரின் (அக்டோபர் 2024-ல் நடைபெற்ற செயலி அறிமுக விழாவில்), மனநல விளைவுகளை மேம்படுத்துவதற்கான இந்த முன்னெடுப்பின் ஆற்றலை சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியாவின் பொது சுகாதார அமைப்பின் ஒரு முக்கியத் தூணாக ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.

சமீபத்திய முன்னேற்றங்கள்

மனநலத்தின் முக்கியப் பங்கை அங்கீகரித்து, 2024 – 25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, மனநலம் என்பது மன-உணர்ச்சி, சமூக, அறிவாற்றல் மற்றும் உடல் ரீதியான பரிமாணங்களை உள்ளடக்கியது என்பதை சுட்டிக் காட்டியது. மனநல சவால்களை எதிர்கொள்வதற்கு சமூகம் சார்ந்த அணுகுமுறையை அது பரிந்துரைத்ததுடன், சாத்தியமான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தடுப்பு உத்திகள் மற்றும் தலையீடுகளின் அவசரத் தேவையையும் வலியுறுத்தியது. இந்தியாவின் மக்கள்தொகைப் பங்கீடு என்பது திறன்கள், கல்வி மற்றும் உடல்நலம் ஆகியவற்றை மட்டும் சார்ந்தது அல்ல; மிக முக்கியமாக, அதன் இளைஞர்களின் மனநலத்தையே சார்ந்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கை எடுத்துரைத்தது. அந்த ஆய்வறிக்கையின் முக்கியப் பரிந்துரைகளில் பின்வருவன இடம்பெற்றுள்ளன.

பள்ளிகளில் மனநலக் கல்வியை வலுப்படுத்துதல்: மாணவர்களிடையே உள்ள பதட்டம், மன அழுத்தம் மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தொடக்ககால தலையீட்டு உத்திகளைச் செயல்படுத்துதல்.

பணியிட மனநலக் கொள்கைகளை மேம்படுத்துதல்: ஆதரவான கொள்கைகள் மூலம் வேலை தொடர்பான மன அழுத்தம், நீண்ட வேலை நேரம் மற்றும் சோர்வு ஆகியவற்றைக் கையாளுதல்.

டிஜிட்டல் மனநலச் சேவைகளை விரிவுபடுத்துதல்: தொலைநிலை மனநல சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு  மூலம் இயங்கும் மனநலத் தீர்வுகளை இணைத்தல்.

மனநலம் என்பது தனிநபர்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அழுத்தமான உலகளாவிய சவாலாகத் தொடர்கிறது; இது நலிவடைந்த மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. டெலி மானஸ் மற்றும் தேசிய மனநலத் திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், மனநலம் நிறைந்த ஒரு சமூகத்தைக் கட்டமைக்க, விழிப்புணர்வை வலுப்படுத்துதல், பணியாளர் பயிற்சியை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் தீர்வுகளில் முதலீடு செய்தல், மற்றும் அனைவரும் அணுகக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய, களங்கமற்ற மனநலப் பராமரிப்பை உறுதிசெய்ய ஒரு முழுமையான சமூக அணுகுமுறையைக் கடைப்பிடித்தல் ஆகியவை அவசியமாகின்றன.

***

IR/LDN/PD

(Features ID: 158045) आगंतुक पटल : 14
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu , Kannada