• Sitemap
  • Advance Search
Infrastructure

புதிய பயணிகள் வசதி மையம்: போக்குவரத்து இணைப்பு, வசதி

Posted On: 19 OCT 2025 10:54AM

 

இந்தப் பண்டிகை காலத்தில், புதுதில்லி ரயில் நிலையம் எழில் மிக்க தோற்றத்துடனும் புதுப்பிக்கப்பட்ட செயல்திறனுடனும் பயணிகளை வரவேற்கிறது. ஒரு காலத்தில் பயணிகளுக்கு நன்கு தெரிந்த நீண்ட வரிசைகளுக்குப் பதிலாக மெருகூட்டப்பட்ட தளங்கள், டிஜிட்டல் தகவல் பலகைகள், சுத்தமான கழிப்பறைகள் மற்றும் தானியங்கி பயணச்சீட்டு  விற்பனை இயந்திரங்கள் என முற்றிலும் மாறுபட்டுத் தோற்றமளிக்கிறது.  ஆன்லைன் பயணச்சீட்டு  விற்பனை இயந்திரங்கள் மற்றும் பயணிகள்  உதவி மையங்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், புதுதில்லி ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளை எளிதில் கையாளும் விதமாக ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் வசதியுடன் கூடுதல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுதில்லி ரயில் நிலையத்திற்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட 6,000 சதுர மீட்டர் பரப்பளவிலான பயிணிகள் வசதி மையத்தில் காணப்படும்  புதிய காட்சி இதுவாகும்.  இது 2025 அக்டோபர் 11 அன்று திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 7,000 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நிரந்தர இருப்பிடப் பகுதி, பரபரப்பான பண்டிகை காலங்களில் கூட்டத்தை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான பயண அனுபவத்தை உறுதிசெய்து, இளைப்பாறுதல்  மற்றும் திறமையான கூட்ட மேலாண்மையை வழங்குகிறது.

பயணிகள் வசதி மையத்தில்  முன்பதிவு பயணச்சீட்டு பிரிவு (2,860 சதுர மீட்டர்) பயணச்சீட்டு பிரிவு (1,150 சதுர மீட்டர்), புறப்பாடு பிரிவு (1,218 சதுர மீட்டர்) ஆகிய  மூன்று மண்டலங்கள் உள்ளன. பயணிகள் ரயில்களுக்காக காத்திருப்பதற்கு வசதியான இருக்கைகள் உள்ளன. அவற்றில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் அல்லது படுக்கைகள் என்ற வேறுபாடு  இல்லை. பயணிகள் வசதி  மையத்தில் காத்திருப்பதற்கு  முற்றிலும் இலவசம்!

புதிய வசதிகள்:

இந்தப் பயணச்சீட்டு மண்டலத்தில் 22 நவீன கவுண்டர்கள் மற்றும் 25 தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் (ஏடிவிஎம்)  காத்திருப்பு நேரத்தைக் குறைக்கின்றன. இளைப்பாறுதலுக்காக, இப்பகுதியில் சுமார் 200 பயணிகள் அமரலாம், திறமையான காற்றோட்டத்தை பராமரிக்கும் 18 ஹை-வால்யூம் லோ-ஸ்பீட் (எச். வி. எல். எஸ்) விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன.

652 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்பட்ட தூய்மையான மற்றும் விசாலமான சுகாதார வசதிகள் மூலம் பயணிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டுதலுக்காக, மையத்தில்  24 அறிவிப்பாளர்களைக் கொண்ட பொது அறிவிப்பு அமைப்பு மற்றும் நிகழ்நேர ரயில் புதுப்பிப்புகளை வழங்கும் மூன்று எல். ஈ. டி தகவல் காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு உள்கட்டமைப்பில் தீயணைப்பு பிரிவுகள், சிசிடிவி கண்காணிப்பு, உடைமை ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன, இது பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்கிறது.

விரைவான, சுகாதாரமான மற்றும் வசதியான பயணம்:

நிரந்தர இருப்பிடப் பகுதியைப் பயன்படுத்தும் பயணிகளிடையே இந்த வசதியின் தேவை தெளிவாகத் தெரிகிறது.

"தில்லியில் இருந்து பரேலிக்கு வெறும் நான்கு நிமிடங்களில் டிக்கெட் கிடைத்தது! முன்பெல்லாம், வரிசையில் காத்திருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். இன்றும் கூட, நான் சீக்கிரம் வந்தேன், ஆனால் இப்போது நான் இங்கே இந்தப் பகுதியில் காத்திருக்கிறேன்; இது சுத்தமாக இருக்கிறது, துர்நாற்றம் வீசவில்லைநான் இங்கே வசதியாகத் தூங்கக்கூட முடியும். எனது ரயிலை நான் தவறவிட மாட்டேன் என்று நம்புகிறேன் என்று தற்போது தில்லியில் வசிக்கும் பரேலியைச் சேர்ந்த 20 வயது மாணவர் அமன் காஷ்யப் கூறுகிறார்.

55 வயதான தியால் கவுர், ராம்பூருக்கு பயணம் செய்து, தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரத்திலிருந்து (ஏடிவிஎம்) இரண்டு நிமிடங்களில் டிக்கெட் வாங்கிய பிறகு மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டார். "இது மிகவும் எளிதானது, ஊழியர்கள் உதவியாக இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

அனைவருக்குமான பாதுகாப்பு:

"நேற்று மாலை முதல் நாங்கள் பயணிகள் வசதி மையத்தில் இருக்கிறோம்" என்று தனது கணவருடன் கோரக்பூரில் இருந்து பயணம் செய்த நிர்மலா தேவி கூறுகிறார். "என் கணவருக்கு இங்கே சில வங்கி வேலைகள் இருந்தன; நாங்கள் பதர்பூர் எல்லையில் வசிக்கிறோம். இந்த இடத்தில் பாதுகாப்பாக பத்தோபஸ்தாகவும் உணர்கிறோம்.  எங்கள் உடமைகள் அனைத்தும் எங்களுடன் உள்ளன, கழிப்பறைகள் கூட சுத்தமாக உள்ளன” என்று  கூறுகிறார். நிர்மலா மற்றும் அமன் போன்ற நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த மையத்தில்  ஓய்வெடுக்கிறார்கள்; இருப்பினும் இந்த இடம் ஒழுங்காக உள்ளது; பொதுமக்கள் இயக்கத்திற்கு எந்த தடையும் இல்லை.

பாட்னாவைச் சேர்ந்த 24 வயதான சமீனா கான் மேற்கு வங்கத்திற்கு செல்லும் ரயிலுக்காகக் காத்திருக்கிறார். 36 மணி நேரத்திற்கும் மேலான காத்திருப்பு நேரத்துடன், அவர் நிலையத்திற்கு அருகில் தங்குவதைத் தேர்ந்தெடுத்தார்; நகரத்தில் தங்குமிடம் வாடகை அதிகம் என்பதால் மட்டுமல்லாமல், இந்தப் பகுதி பாதுகாப்பாகவும், அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டதாகவும் உள்ளதால் இங்கேயே தங்கியுள்ளார்.

தடையற்ற பயணத்தை நோக்கிய ஒரு படி:

இந்தியாவின் பரபரப்பான ரயில்வே மையத்திற்குள் இளைப்பாறுதல், அணுகல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதை பயணிகள் வசதி மையம் பிரதிபலிக்கிறது. நவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட கூட்டத்தைக் கையாளும் வடிவமைப்புடன், இந்த வசதி பயண அனுபவத்தை மேம்படுத்துவதோடு, இந்திய ரயில்வே முழுவதும் பயணிகளை மையப்படுத்திய வசதிகளுக்கான புதிய அளவுகோலையும் வழங்குகிறது.

 

***

PKV/PD

(Features ID: 157995) आगंतुक पटल : 32
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Nepali , Bengali , Assamese , Kannada , Malayalam