Social Welfare
ராமர் கோவிலின் கதை
புராணத்திலிருந்து மரபு வரை
Posted On:
24 NOV 2025 12:12PM
“இந்த பிரம்மாண்டமான ராமர் கோவில் – இந்தியாவின் செழிப்பிற்கும், எழுச்சிக்கும், வளத்திற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு சான்றாகவும் திகழும்.”
- பிரதமர் நரேந்திர மோடி (அயோத்தியில், ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில், ஜனவரி 22, 2024)

பண்டைய நகரமான அயோத்தியின் மீது விடியற்காலைப் பொழுதின் முதல் சூரியக் கதிர்கள் பரவும்போது, அவை மணற்கல் தூண்களையும் செதுக்கப்பட்ட கோபுரங்களையும் விட மேலானவற்றை ஒளிரச் செய்கின்றன. அவை பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் கலாச்சார ஆன்மாவை வடிவமைத்த ஒரு கதையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. தற்போது, முழுப் பெருமையுடன் கம்பீரமாக நிற்கும் ராமர் கோவில், ஒரு கட்டிடக்கலை அதிசயம் மட்டுமின்றி, நம்பிக்கை மற்றும் மன உறுதியின் உச்சமாகும்.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு, அயோத்தி நகரம் என்பது எப்போதுமே ராமர் அவதரித்த பூமியாகக் கருதப்படுகிறது. இந்தப் புனிதமான பிறப்பிடத்தைக் குறிக்கும் ஒரு கோயில் என்ற எண்ணம், இந்தியாவின் கலாச்சார அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு இந்தத் தலம் ஆன்மீக வழிகாட்டிக்கான வளாகமாக உருவாகியுள்ளது.
2025, நவம்பர் 25 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி 22 அடி உயரமுள்ள ஒரு மதக் (தர்மத்திற்கான) கொடியை ஏற்றி வைத்து, "துவஜ ஆரோஹணம்" என்ற புனிதமான இந்து மத வழிப்பாட்டுச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சாஸ்திர பாரம்பரியத்தின்படி, மதம் சார்ந்த கொடியை கோயிலின் கோபுர உச்சியில் ஏற்றுவது, அதர்மத்தின் மீது தர்மத்தின் மகத்தான வெற்றியை அடையாளப்படுத்துவதுடன், இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு ஒரு வெளிப்படையான அழைப்பாக அமைகிறது.

ஒரு சுருக்கமான வரலாற்றுப் பின்னணி

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்குப் பின்னணியில் ஆழ்ந்த நம்பிக்கை, நாகரிக நினைவின் வெற்றி, சட்டத்தின் ஆட்சி மூலம் வரலாற்று நீதியை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் கதை உள்ளது.
அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி கோயில் உருவான பயணம், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் வாயிலாகத் தீர்வு காணப்பட்ட நீண்டகால சட்ட, கலாச்சாரப் போராட்டத்தின் உச்சக்கட்டமாகும். 2019, நவம்பர் 9 அன்று, உச்ச நீதிமன்றம் ஒருமனதாக அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, ராமர் கோயில் கட்டுமானத்திற்காக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் முழுவதையும் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு, நீதி, நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு கோட்பாடுகளின் வெற்றியாகப் பாராட்டப்பட்டது. இது, 2020 பிப்ரவரி 5 அன்று மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்பு, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையின் கீழ் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு வழிவகுத்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு ஆகஸ்ட் 5, 2020 அன்று வடிவம் பெற்றது. அன்றைய தினத்தில், பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்து, அந்த இடத்தில் ராமர் கோயில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வு பக்தர்களின் பல நூற்றாண்டுகால எதிர்பார்ப்புகளுக்கான முடிவைக் குறிப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மேம்பட்ட போக்குவரத்துக்கான இணைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மூலம், இக்கோயில் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளித்து, பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
பிரம்மாண்டமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயில், பாரம்பரிய நகரா கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது 392 தூண்களால் தாங்கப்பட்டு, 44 நுழைவுவாயில்களைக் கொண்டுள்ளது. தூண்களும் சுவர்களும் இந்து மதத் தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் நேர்த்தியான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் உள்ள கர்ப்பகிரகத்தில் (பிரதான கருவறை), பகவான் ஸ்ரீ ராமரின் தெய்வீக குழந்தைப்பருவ திருவுருவமான ஸ்ரீ ராம்லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ராம்லல்லாவின் திருவுருவம், தரைத்தளத்தில் உள்ள பிரதான கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள சிங் துவாரம் வழியாக 32 படிகள் ஏறிச் சென்று இதனை அடையலாம். இந்த வளாகத்தில், பக்திச் செயல்பாடுகளுக்காக நிருத்யா, ரங், சபா, பிரதானா, கீர்த்தன் ஆகிய ஐந்து மண்டபங்களும், குபேர் திலாவில் உள்ள பழமையான சிவ மந்திர் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா கூப் கிணறு போன்ற புனரமைப்புகளும் அடங்கியுள்ளன.
இன்று, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரம், இந்தியாவின் நாகரிகத் தொடர்ச்சிக்கும், சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்ட நம்பிக்கையின் வலிமைக்குமான ஒரு சான்றாக உயர்ந்து நிற்கிறது. இந்த அற்புதமான கட்டடம், அயோத்தியின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் புதுப்பிப்பதுடன், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் போன்ற மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புனரமைக்கப்பட்ட இணைப்புச் சாலைகள் உட்பட முழுமையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

ராமர் கோயில்: உலகளாவிய எதிரொலி

அயோத்தி நகரின் சுட்டெரிக்கும் கோடையில் இரவும் பகலும் உழைத்த கைவினைக்கலைஞர்களின் வலுவான நம்பிக்கைக்கு, அந்நகரில் உள்ள ராமர் கோயில் சான்றாக உள்ளது. மேலும், ராமர் கோயில் மீதான ஒட்டுமொத்த தேசிய உணர்வுகளையும் இது வெளிப்படுத்துவதாக உள்ளது.
ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் உணர்வு, இந்தியாவைக் கடந்து வெகுதூரம் எதிரொலித்தது. உதாரணமாக, டிரினிடாட் - டொபாகோ நாட்டின் தலைநகரான போர்ட் ஆஃப் ஸ்பெயினில், ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இது, மே 2025-ல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில், அயோத்தியின் ராம் லல்லா சிலையின் பிரதி போல ஒரு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் வெளிப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் ஆன்மீக முயற்சி மற்றும் கலாச்சார உணர்வை வெளிப்படுத்துவதுடன், மதச் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்கான வாய்ப்புக்களையும் உருவாக்குகின்றன.
இந்தக் கோவில் அகமதாபாத் நகரைச் சேர்ந்த திரு சந்திரகாந்த் சோம்புராவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற லார்சன் அண்ட் டுப்ரோ நிறுவனம் கட்டுமானப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதுடன், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

"இது ராமர் வடிவிலான தேசிய உணர்வின் ஆலயம். ராமர் இந்தியாவின் நம்பிக்கை, அடித்தளம், கருத்து, சட்டம், உணர்வு, சிந்தனை, கௌரவம் மற்றும் பெருமை ஆவார்."
- பிரதமர் நரேந்திர மோடி (அயோத்தியில் ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை விழாவின் போது, ஜனவரி 22, 2024)

பண்டைய கைவினைத்திறனை அதிநவீன அறிவியலுடன் இணைப்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸ், ஐஐடி டெல்லி, ஐஐடி பம்பாய் மற்றும் ஐஐடி குவஹாத்தி உள்ளிட்ட நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அறிஞர்கள், ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வலுவான அடித்தளத்துடன் கூடிய இந்தக் கற்கோயிலின் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வயதிலான பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இக்கோயில் பிரத்யேக யாத்திரை வசதி மையம், மூத்த பக்தர்களுக்கான சரிவுப் பாதைகள், அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. அதன் பிரம்மாண்டத்தையும் தாண்டி, நகரத்தின் நீடித்த யாத்திரை குறித்த விரிவான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இக்கோயில் வளாகம், சூரிய மின்சக்தி தகடுகளைப் பயன்படுத்துகிறது.
நவம்பர் 25, 2025 அன்று ராமர் கோயில் மீது, காவிக்கொடி ஏற்றப்படும் போது, இந்த பிரம்மாண்டமான கோயில் வளாகத்தின் முழுமையான நிறைவைக் குறிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய நிலையிலிருந்து வாழும் பாரம்பரியமாக மாறும் பயணம் அதன் உச்சத்தை அடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, இந்த துவஜ் ஆரோஹணம், கோயிலின் கட்டிடக்கலையையும், தர்மத்தின் நீடித்த ஆன்மாவையும் கொண்டாடுகிறது. அயோத்தி நகரம் நல்லிணக்கம், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் மையமாக மீண்டும் உருவெடுக்கும் வேளையில், பக்தர்களை வரவேற்கிறது. ராமர் கோயில் என்பது கற்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பைக் காட்டிலும் உயர்வானது. அது மீள்திறன், பக்தி மற்றும் பண்டைய பாரம்பரியத்திற்கும், ஒன்றுபட்ட உலகின் எதிர்காலத்திற்கும் இடையேயான பாலத்தின் சின்னமாகும்.
****
SV/PD
(Features ID: 157954)
आगंतुक पटल : 23
Provide suggestions / comments