Social Welfare
தலைமுறைகளைக் கடந்து தொடரும் பாரம்பரியங்கள்
இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பழங்குடியினரின் கலைக் கண்காட்சி
Posted On:
26 NOV 2025 12:23PM
இந்தியாவின் உயிர்ப்போடிருக்கும் பாரம்பரிய மரபுகளைக் கொண்டாடுதல்
நாட்டின் மக்கள் தொகையில் 8.6 சதவீதமாக உள்ள 705-க்கும் அதிகமான தனித்துவமிக்க பழங்குடியினக் குழுக்களைக் கொண்டுள்ள இந்தியா, தனித்துவமான பாரம்பரியக் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களைப் பாதுகாத்து சிறந்த பாரம்பரியத்தின் தாயகமாக திகழ்கிறது.
புது தில்லியில் நடைபெறும் 44-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பதை நினைவுகூரும் வகையில் இந்தியாவின் வளமான பழங்குடியினக் கலை வடிவங்கள் கௌரவிக்கப்படுகின்றன.
இந்தக் கண்காட்சியில், மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன், நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள பழங்குடியினக் குழுக்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன.
இந்தியாவின் பழங்குடியினக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பது, இந்தத் தொன்மையான மரபுகள் பல்வேறு சோதனைகளை வெற்றி கொண்டு காலத்தைக் கடந்து நிற்பதையும், 2047-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடையும் நோக்கில், இந்தியா உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வேளையில், அனைவரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் உறுதி செய்கிறது.
இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்குடியினக் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் "ஜவுளிகளின் ராணி" என்று அழைக்கப்படும் பட்டு, 15-ம் நூற்றாண்டில் பட்டு வர்த்தகக் காலத்திலிருந்தே, இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. உலகில் பட்டு உற்பத்தியில், இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
தற்போது, பல்வேறு பழங்குடி சமூகங்கள் தனித்துவமிக்க பட்டு சார்ந்த கலைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்தத் துறையில் பணிபுரியும் 52,000 கிராமங்களைச் சேர்ந்த 97.6 லட்சத்திற்கும் அதிகமான மக்களில் இவர்களும் ஒரு அங்கமாக உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கோண்ட் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த சச்சின் வால்கே, தசார் பட்டுச் சேலைகளை நெய்து, பழங்கால வார்லி மற்றும் பல் போன்ற கர்வத் அச்சுகளைப் பதிக்கின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இது தொடர்பாக திரு வால்கே பேசுகையில்,"பட்டுப்பூச்சிக் கூடுகளை சேகரிப்பது முதல், பட்டுத் துணியைப் பிரித்தெடுத்து நெய்து, இறுதித் தயாரிப்பை உருவாக்குவது வரை அனைத்தையும் செய்கிறோம்," என்றார்.
மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு, இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியிலும், பிப்ரவரி மாதத்தில், தில்லியில் நடைபெற்ற ஆதி மகோத்சவக் கண்காட்சிகளிலும் வால்கே தனது படைப்புகளைக் காட்சிப்படுத்த உதவியது. "இந்த உதவியை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஆடைகளைத் தயாரித்த பிறகு, வாங்குபவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால் இதுபோன்ற கண்காட்சிகள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்வதன் மூலம், எங்களது தயாரிப்புகளை வாங்குபவர்கள் எளிதில் கிடைத்துவிடுகிறார்கள்," என்று திரு வால்கே கூறினார்.
பழங்குடியின சமூகங்களின் முதன்மையான வருவாய் ஆதாரமாக இருக்கும் அவர்களது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதன் மூலம், அவர்கள் சமூக-பொருளாதார வளர்ச்சியை அடைவதை இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு பழங்குடியின மக்களுக்கு கல்வி, உபகரணங்கள் மற்றும் முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அதிகாரம் அளிக்கிறது.
முக்கிய அணுகுமுறைகள்:
1) திறன் மேம்பாடு: விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுய உதவிக் குழுக்கள், மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
2) சந்தை மேம்பாடு: பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளை ஆராய்தல்
3) வணிக முத்திரை உருவாக்கம்: நிலையான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளையும் வணிக முத்திரை அடையாளத்தையும் நிறுவுதல்.
நன்கு அறியப்பட்ட நான்கு வர்த்தகப் பட்டு வகைகளான மல்பெரி, தசார் (வெப்பமண்டல தசார், ஓக் தசார்), எரி மற்றும் முகா ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒரே நாடு என்ற தனித்துவமான பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சுய உதவிக் குழுக்கள் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த உகம்பென் ராமாபாய் சுதார், பருத்தி மற்றும் பருத்தி-பட்டுத் துணிகளில் அப்ளிக் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள 300 பெண்களில் ஒருவர் ஆவார். முன்பு, உள்ளூர் சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்து வந்த இந்தக் குழு, தில்லியில் நடைபெற்ற ஆதி மகோத்சவம் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற பல்வேறு கண்காட்சிகளில் கிடைத்த வாய்ப்புக்களால் பெரிதும் பயனடைந்துள்ளது.
ஐஐடிஎஃப்-ல் கலந்துகொண்ட சுதாரின் உறவினரான குமார் லால்ஜிபாய் பில், “ஆதி மகோத்சவக் கண்காட்சியில் எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்ததுடன், நல்ல வரவேற்பும் கிடைத்தது” என்று கூறினார்.

ஜார்க்கண்டின் பூர்பி சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜந்து கோபே, தனது பாரம்பரிய பழங்குடி கலை வடிவமான பைட்கரை உயிர்ப்புடன் வைத்திருக்க முயன்று வருகிறார்.
பியட்கர் என்றும் அழைக்கப்படும் பைட்கர், இந்தியாவில் இன்றும் நிலைத்திருக்கும் மிகப் பழமையான கதை சொல்லும் கலை வடிவங்களில் ஒன்றாகும். இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி வரையப்படும் சுருள் போன்ற இந்த ஓவியங்கள், பழங்குடியினரின் நடனங்கள், பாடல்கள், புராணங்கள் மற்றும் இதிகாசக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
கோபே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் கலை வடிவத்தைக் கற்றுக்கொண்டார். ஆனால், அவரது பகுதியில் பாரம்பரியமாக இந்த ஓவியங்களை வரைவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த பல்வேறு குடும்பங்கள் வரைவதை நிறுத்திவிட்டன. “இந்த ஓவியங்களை விற்பனை செய்வது கடினமானது. மேலும் தற்போது இது போன்ற சில கைவினைஞர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்,” என்று கோபே கூறினார். அழிந்துவரும் கலை வடிவங்களுக்குப் புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஜார்கண்ட் கலா மந்திர், கண்காட்சிகளில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்த உதவியதன் மூலம் தனக்கு உதவியதாகவும், ஜார்கண்ட் மாநில அரசின் முதலமைச்சரின் சிறு மற்றும் குடிசைத் தொழில் மேம்பாட்டு வாரியம் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க தனக்கு ஆதரவளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பைத்தூரைச் சேர்ந்த விஷால் பக்மாரியும் தனது பாரம்பரிய கலை வடிவமான பரேவாவைப் பாதுகாத்து வருகிறார். பழைய உலோகங்களைப் பயன்படுத்தி, பக்மாரி கடவுள்கள் மற்றும் தேவதைகளின் பழங்குடியினச் சிலைகள், நகைகள் மற்றும் ஆபரணங்களை உருவாக்கி வருகிறார். பரேவாக்கள், மத்திய இந்தியா முழுவதும் பரவியுள்ள கோண்டுகளின் ஒரு உட்பிரிவினர் ஆவர். இவர்கள் அழிந்து வரும் இந்தக் கலையைப் பாதுகாத்து வருகின்றனர்.

இறுதியாக, இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, பாரம்பரிய பழங்குடியினக் கலை வடிவங்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களது கலாச்சார மரபுகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு விரிவான தேசிய முயற்சியின் ஒரு அங்கமாகும். பழங்குடியின கைவினைக்கலைஞர்கள் தங்களது படைப்புகளை, ஏராளமான பார்வையாளர்களுக்குக் கொண்டுச் செல்ல பல்வேறு அரசு அமைப்புகள் உதவுகின்றன. இதன்மூலம், அவர்களின் கலையும், அதனை முன்னெடுத்துச் செல்லும் சமூகங்களும் வரும் தலைமுறைகளுக்கும் செழித்து, உயிர்ப்புடன் நிலைத்திருக்க முடியும்.
***
SV/PD
(Features ID: 157949)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments