Others
அஸ்ஸாமி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது
Posted On:
04 OCT 2024 6:17PM
மொழி என்பது தனிமனித வளர்ச்சியின் இன்றியமையாத அங்கமாகும். மேலும் பண்பாட்டை வடிவமைப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் மொழியின் மூலம், மக்கள் தங்கள் அடையாள உணர்வையும் பெருமிதத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இந்தியா, எண்ணற்ற மொழிகள் மற்றும் வட்டார மொழிகளின் துடிப்பானதொரு கலவையாகும். இந்த மொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது உட்பட பல்வேறு முயற்சிகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. அண்மையில், இந்த மதிப்புமிக்கப் பிரிவில் மேலும் ஐந்து மொழிகளைச் சேர்ப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் ஒன்று அஸ்ஸாமி மொழியாகும். இந்த முடிவு, அஸ்ஸாமி இலக்கியத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
"அசோமியா" (அல்லது அஸ்ஸாமியர்கள்) என்று அழைக்கப்படும் அசாம் மக்கள், அம்மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வளமான மொழியியல் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். அசாமின் அதிகாரபூர்வ மொழியான அஸ்ஸாமி, சமஸ்கிருதத்தில் வேரூன்றியுள்ளது. அதன் வளர்ச்சி கி.பி. 7-ம் நூற்றாண்டு வரை செல்கிறது. இருப்பினும், அதன் நேரடி மூலமொழி, கிழக்கு பிராகிருதத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கிளைமொழியான மகதி அபப்ரம்சா ஆகும். மகதி அப்பகுதியின் பிரதான கிளைமொழியாக இருந்ததாகவும், அதன் கிழக்குப் பகுதியான பிரச்ய அபப்ரம்சா தெற்கு மற்றும் தென்கிழக்கு நோக்கிப் பரவி, இறுதியில் நவீன வங்காளமாக பரிணமித்ததாகவும் மொழியியலாளர் ஜி.ஏ. கிரியர்சன் குறிப்பிடுகிறார். பிரச்ய அபப்ரம்சா கிழக்கு நோக்கி விரிவடைந்தபோது, அது கங்கைக்கு வடக்கே கடந்து அசாம் பள்ளத்தாக்கை அடைந்தது. அங்கு அது அஸ்ஸாமியாக மாறியது.
அஸ்ஸாமி மொழியின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்துப் பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. கிரியர்சன், சுனிதி குமார் சாட்டர்ஜி, பனிகாந்த ககாதி போன்ற அறிஞர்கள், அஸ்ஸாமி மொழி மகதி-பிராகிருதக் குழுவைச் சேர்ந்தது என்று நம்புகிறார்கள். இதற்கு மாறாக, பெனி மாதப் பருவா, திம்பேஷ்வர் நியோக் போன்ற மற்றவர்கள், அதன் வேர்கள் காம்ரூபி-பிராகிருதத்தில் இருப்பதாக வாதிடுகின்றனர். மதிப்பிற்குரிய இலக்கண அறிஞரான கலிராம் மேதி, அஸ்ஸாமி மொழி கிழக்கு மற்றும் மேற்கு பிராகிருத வட்டார மொழிகளின் கலவையாகும் என்று முன்மொழிந்தார்.
அஸ்ஸாமி பற்றிய மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட குறிப்பை கதா குருசரிதத்தில் காணலாம். "அக்சோமியா" (அஸ்ஸாமி) என்ற சொல்லின் சொற்பிறப்பியல் பல்வேறு விளக்கங்களுக்கு உட்பட்டது; சில அறிஞர்கள் இதனைப் புவியியல் அம்சங்களுடன் தொடர்புபடுத்துகின்றனர். மற்றவர்கள் இதனை ஆறு நூற்றாண்டுகளாக இப்பகுதியை ஆண்ட அகோம் வம்சத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். வடக்கு வங்காளம் உட்பட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, மகாபாரதத்தில் பிரக்ஜோதிஷ்புரா என்றும், கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சமுத்திரகுப்தரின் தூண் கல்வெட்டில் காமரூபா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலமயமாக்கப்பட்ட "அஸ்ஸாம்" என்ற சொல், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கைக் குறிக்கும் "அக்சோம்" என்பதிலிருந்து உருவானது. மேலும் இதிலிருந்து இப்பகுதியில் பேசப்படும் மொழியைக் குறிக்கும் "அஸ்ஸாமி" என்ற சொல் உருவானது. கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே, அஸ்ஸாமி ஒரு மொழியாக செழித்து வளர்ந்திருந்தது. அஸ்ஸாமி, ஒரியா, பெங்காலி ஆகியவற்றுடன் ஒரு பொதுவான மொழியியல் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இவை அனைத்தும் ஒரே மூல வட்டார மொழியான மகதி அபப்ரம்சாவிலிருந்து தோன்றியவை.
1959-60 மொழிப் புரட்சியின் போது மொழியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இது அஸ்ஸாமியை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வழிவகுத்தது. 1987 ஆம் ஆண்டில், மத்திய அரசிடமிருந்து அஸ்ஸாம் அரசுக்கு அனைத்து மத்திய சட்டங்களையும் மொழிபெயர்ப்பதை எளிதாக்குவதற்காக அஸ்ஸாம் அலுவல் மொழி (மத்திய சட்டங்களின் மொழிபெயர்ப்பு) ஆணையம் நிறுவப்பட்டது. இந்த மொழிபெயர்ப்புகள் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டவுடன், அவை அஸ்ஸாமின் சட்டமன்றத் துறையால் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டன. இது மாநிலத்தில் அஸ்ஸாமியை ஒரு ஆளுகை மொழியாக நிலைநிறுத்தியது.
நவீன காலத்திற்கு முந்தைய அஸ்ஸாமி எழுத்துமுறையின் மிகப் பழமையான எடுத்துக்காட்டை, பௌத்த சித்தாச்சாரியர்களால் இயற்றப்பட்டு 8-ம் நூற்றாண்டுக்கும் 12-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பண்டைய பௌத்த தாந்திரிக நூல்களான சரியபதங்களில் காணலாம். சரியபதங்கள், அஸ்ஸாமி மற்றும் பிற மகத மொழிகளுடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்வதோடு, பல இந்திய மொழிகளின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மீதும் தெளிவை ஏற்படுத்துகின்றன. சரியபதங்களில் காணப்படும் சொற்களஞ்சியத்தில், தனித்துவமான அஸ்ஸாமி சொற்கள் உள்ளன. மேலும், ஒலியியல் மற்றும் உருவவியல் அடிப்படையில், இந்தச் சொற்களஞ்சியம் வழக்கமான அஸ்ஸாமி சொற்களை மிகவும் ஒத்திருக்கிறது; அவற்றில் பல தற்கால மொழியிலும் நிலைத்திருக்கின்றன.
அஸ்ஸாமி இலக்கிய வரலாற்றை ஐந்து தனித்துவமான காலகட்டங்களாகப் பிரிக்கலாம்:
(அ) உருவாக்கக் காலம் (கி.பி. 800-1300): இக்காலகட்டத்தில் பௌத்த சரியபாதங்களின் மறைபொருள் செய்யுள்களும், சமஸ்கிருத ஸ்ரீகிருஷ்ண கீர்த்தனை இலக்கியமும் இடம்பெறுகின்றன.
(ஆ) வைணவத்திற்கு முந்தைய இலக்கியம் (கி.பி. 1300-1550): இக்காலகட்டத்தில் ஹேம சரஸ்வதி, மாதவ கண்டாலி, ஹரிஹர் விப்ரா, கவிரத்ன சரஸ்வதி, ருத்ர கண்டாலி ஆகியோரின் படைப்புகள் அடங்கும்.
(இ) சங்கரி அல்லது வைணவ இலக்கிய காலம் (கி.பி. 1550-1650): இக்காலகட்டம், அஸ்ஸாமி மொழியின் முற்றிலும் தனித்துவமான ஒரு வடிவம் உருவானதைக் குறிக்கிறது.
(ஈ) சங்கரதேவனுக்குப் பிந்தைய கால இலக்கியம் (கி.பி. 1650-1850): இந்தக் காலகட்டம் புரன்ஜிகள் (அஹோம் அரசவையின் வரலாற்றுப் பதிவுகள்), சரித் (மத வாழ்க்கை வரலாறுகள்) மற்றும் நவீன அஸ்ஸாமி எழுத்தின் தோற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(உ) சமகால (நவீன) சகாப்தம் (1830 முதல்): இந்தக் காலகட்டத்தில், சமயப் பிரச்சாரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய இலக்கியங்களின் தாக்கத்துடன், செம்மையான அஸ்ஸாமி மொழியின் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. மேலும், ஹேமச்சந்திர பருவா, குணபிராம் பருவா மற்றும் ஜோனகி கால இலக்கியப் படைப்புகளில் பிரதிபலிக்கும் நாடகம் மற்றும் நாவல்கள் போன்ற புதிய இலக்கிய வகைகளின் வளர்ச்சியையும் இது கண்டது. மொழி இன்றுவரை தொடர்ந்து பரிணமித்து வருகிறது.
அஸ்ஸாமி விருதுகள் மற்றும் அங்கீகாரம்
பல்வேறு மொழிகளின் இலக்கியப் பங்களிப்புகளை கௌரவிப்பதில் புகழ்பெற்ற சாகித்ய அகாடமி, 1954-ம் ஆண்டு மார்ச் 12 அன்று மத்திய அரசால் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. 1955-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் அஸ்ஸாமிப் படைப்பு, ஜதிந்திரநாத் டோவேராவின் 'பானா பூல்' என்ற கவிதைத் தொகுப்பாகும். மிக சமீபமாக, 2023-ம் ஆண்டில், டாக்டர் பிரணவ்ஜோதி தேகர், 'ஸ்ரேஷ்ட கல்பா' என்ற தனது சிறுகதைத் தொகுப்பிற்காக, சாகித்ய அகாடமி விருது அளித்து கௌரவிக்கப்பட்டார். இந்த அங்கீகாரங்கள் அசாமின் வளமான இலக்கியப் பாரம்பரியத்தையும், அதன் எழுத்தாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன.
செம்மொழித் தகுதியின் தாக்கம்
அஸ்ஸாமி மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்குவது, அதன் பாதுகாப்பிற்கும் மேம்பாட்டிற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அங்கீகாரம், அஸ்ஸாமி மொழியின் வளமான இலக்கியப் பாரம்பரியத்தையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொள்கிறது. செம்மொழித் தகுதி, மொழியின் கௌரவத்தை உயர்த்தி, அதன் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் மொழியியல் ஆய்வுகளில் ஒரு புது ஆர்வத்தை வளர்க்கிறது. மேலும், இது ஆராய்ச்சி, கல்வி மற்றும் கலாச்சார முன்னெடுப்புகளுக்கு நிதி மற்றும் வளங்கள் வடிவில் அரசின் ஆதரவுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம், இம்மொழி பாதுகாக்கப்படுவதுடன், தற்கால சமூகத்தில் செழித்து வளர்வதும் உறுதி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த செம்மொழித் தகுதி, அஸ்ஸாமி மொழியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் அதன் வீரியத்திற்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக செயல்படுகிறது.
***
SMB/PD
(Features ID: 157940)
आगंतुक पटल : 32
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English