Others
செம்மொழி அந்தஸ்து: ஒரு விளக்கக் கட்டுரை
Posted On:
04 OCT 2024 3:12PM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, வங்காளம் ஆகிய ஐந்து மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. செம்மொழி என்பது, இந்தியாவின் தொன்மையான மற்றும் ஆழமான கலாச்சாரப் பாரம்பரியத்தின், பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றன. இவை, அந்தந்தச் சமூகங்களின் வளமான வரலாறு, இலக்கியம், மரபுகளைப் பேணிப் பாதுகாக்கின்றன. இந்த அந்தஸ்து, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரச் சூழலில் அமைந்துள்ள, மொழியியல் சார்ந்த படைப்புக்களை கௌரவிக்கவும், பாதுகாக்கவும், மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் ஒரு முன் முயற்சியாகும். இதன் மூலம், வருங்காலத் தலைமுறையினர், செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளின், ஆழமான வரலாற்றுச் சிறப்புகளை அறிந்து கொள்வதற்கும், அவற்றைப் போற்றிப் பாதுகாப்பதற்கும், வகை செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை, மொழியியல் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதுடன், நாட்டின் கலாச்சார அடையாளத்தை வடிவமைப்பதில், இத்தகைய அந்தஸ்து பெற்ற மொழிகளின் முக்கியப் பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.
ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்படுவது ஏன்?
ஒரு மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதன் நோக்கம், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும், இந்தியாவின் வளமையான கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தின், பாதுகாவலராக மொழிகளின் சிறந்த பங்களிப்பையும் அங்கீகரிப்பது ஆகும். இந்தியாவின் தொன்மையான அறிவுசார் அமைப்புகள், தத்துவங்கள் மற்றும் விழுமியங்களை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாகப் பேணிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில், இந்தச் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள மொழிகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இம்மொழிகளைச் செம்மொழிகளாக அங்கீகரிப்பதன் மூலம், மத்திய அரசு அவற்றின் ஆழமான தொன்மை, பரந்து விரிந்த இலக்கிய மரபுகள் மற்றும் நாட்டின் கலாச்சாரக் கட்டமைப்பிற்கு அவை ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கிறது. இந்த அங்கீகாரம், இந்தியாவின் பாரம்பரியத்திற்கு, இம்மொழிகள் ஆற்றிய, குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழியியல் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துகிறது. இது இம்மொழிகளின் மதிப்பை உயர்த்துவதுடன், அவற்றை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் மொழி சார்ந்த கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் வழிவகுத்து, நவீன உலகில், அவற்றின் முக்கியத்துவத்தையும் உறுதி செய்கிறது.
ஒரு மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதற்கான தகுதிகள் என்னென்ன?
2004-ம் ஆண்டில், மத்திய அரசு முதல் முறையாக, 'செம்மொழிகள்' என்றழைக்கப்படும் ஒரு புதிய மொழி வகைப்பாட்டை உருவாக்கியது. செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான அளவுகோல்களாகப் பின்வரும் விதிமுறைகளை அரசு நிர்ணயித்துள்ளது:
• மொழியின் ஆரம்பகால நூல்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வரலாறு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான மிக உயர்ந்த தொன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
• மொழியின் பண்டைய இலக்கியங்கள் அல்லது நூல்களின் தொகுப்பு, அம்மொழியைப் பேசும் பல்வேறு தலைமுறை மக்களால், மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப்பட வேண்டும்.
• மொழியின் இலக்கிய மரபு, தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். தவிர, வேறொரு மொழியிடமிருந்து திரிந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது.
இந்த அளவுகோல்கள் செம்மொழி அந்தஸ்து கோரும் மொழிகளைப் பரிசீலிப்பதற்காக, சாகித்ய அகாடமி அமைப்பின் கீழ், 'மொழியியல் வல்லுநர் குழுக்கள்' ஏற்படுத்தப்பட்டு, அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், 2005 மற்றும் 2024-ம் ஆண்டுகளில், திருத்தப்பட்டன. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான வரையறைகள் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டன. இதன் அடிப்படையில், சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது:
• மொழியின் தொடக்கக்கால நூல்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வரலாறு, 1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரை, நீண்ட காலப் பழமையைக் கொண்டிருக்க வேண்டும்.
• தலைமுறை தலைமுறையாக அம்மொழியைப் பேசுபவர்களால், அதன் பண்டைய இலக்கியத் தொகுப்பு அல்லது நூல்கள் மதிப்புமிக்க மரபாகக் கருதப்பட வேண்டும்.
• மொழியின் இலக்கிய மரபு தனித்துவத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டுமேயன்றி, வேறொரு மொழிச் சமூகத்திடமிருந்து கடன் பெறப்பட்டதாக இருக்கக்கூடாது.
• செம்மொழியும் அதன் இலக்கியமும் நவீன வடிவங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். மேலும், அந்தச் செம்மொழிக்கும், அதன் பிற்கால வடிவங்கள் அல்லது கிளை மொழிகளுக்கும் இடையே தொடர்ச்சியின்மை இருக்கலாம்.
2024-ம் ஆண்டில், இதற்கான வரையறைகள் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டன:
• மொழியின் தொடக்கக்கால நூல்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வரலாறு, 1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரை, நீண்ட காலப் பழமையைக் கொண்டிருக்க வேண்டும்.
• தலைமுறை, தலைமுறையாக அம்மொழியைப் பேசுபவர்களால், அதன் பண்டைய இலக்கியத் தொகுப்பு அல்லது நூல்கள் மரபாகக் கருதப்பட வேண்டும்.
• கவிதை வடிவ நூல்களுடன் கூடுதலாக, அறிவுசார் நூல்கள் (குறிப்பாக உரைநடை நூல்கள்), கல்வெட்டு மற்றும் தொல்லெழுத்துச் சான்றுகளும் இருக்க வேண்டும்.
• செம்மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும், அம்மொழியின் தற்போதைய வடிவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் அல்லது அதன் பிற்கால வடிவங்கள் மற்றும் கிளை மொழிகளுடன் தொடர்ச்சியற்றதாக இருக்க வேண்டும்.
திருத்தியமைக்கப்பட்டுள்ள இந்த வரையறைகளை பூர்த்தி செய்த பின்வரும் மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 2024-ம் ஆண்டின் மொழியியல் வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. அவை மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளாகும்.
இதுவரை எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன?
தமிழ், சமஸ்கிருதம்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஆறு இந்திய மொழிகளுக்கு, ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு, 2024-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளுக்கும், செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் செம்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
|
மொழி
|
அங்கீகரிக்கப்பட்ட தேதி
|
அறிவிப்பு வெளியிட்டவர்
|
அறிவிக்கப்பட்ட தேதி
|
|
தமிழ்
|
அக்டோபர் 12, 2004
|
உள்துறை அமைச்சகம்
|
அக்டோபர் 12, 2004
|
|
சமஸ்கிருதம்
|
நவம்பர் 25, 2005
|
உள்துறை அமைச்சகம்
|
நவம்பர் 25, 2005
|
|
தெலுங்கு
|
அக்டோபர் 31, 2008
|
கலாச்சார அமைச்சகம்
|
அக்டோபர் 31, 2008
|
|
கன்னடம்
|
அக்டோபர் 31, 2008
|
கலாச்சார அமைச்சகம்
|
அக்டோபர் 31, 2008
|
|
மலையாளம்
|
ஆகஸ்ட் 8, 2013
|
கலாச்சார அமைச்சகம்
|
ஆகஸ்ட் 8, 2013
|
|
ஒடியா
|
மார்ச் 1, 2014
|
கலாச்சார அமைச்சகம்
|
மார்ச் 1, 2014
|
மத்திய உள்துறை அமைச்சகம், தொடக்கத்தில், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு, இந்த செம்மொழி அந்தஸ்தை வழங்கியது. அதன் பின்னர், இது தொடர்பான செயல்பாடுகள் மற்றும் எதிர்கால அங்கீகாரங்களுக்கான பொறுப்பை, மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. செம்மொழிகளுக்கான அங்கீகாரத்தைக் கோரும் எதிர்கால முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கென, மத்திய கலாச்சார அமைச்சகம், 2004-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி 'மொழியியல் வல்லுநர் குழு' ஒன்றை அமைத்தது.
செம்மொழிகளை மேம்படுத்துவதற்கு, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
செம்மொழிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2020-ம் ஆண்டில், சமஸ்கிருத மொழியை மேம்படுத்தும் நோக்குடன், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பண்டைய தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்தல், மொழியியல் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களுக்குப் பாடநெறிகளை வழங்குதல் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில், ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' உருவாக்கப்பட்டது. செம்மொழிகளின் கற்றலையும், பாதுகாப்பையும், மேலும் வலுப்படுத்தும் வகையில், மைசூரில் அமைந்துள்ள 'இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின்' கீழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கான 'சிறப்பு ஆய்வு மையங்கள்' நிறுவப்பட்டன. மேலும், செம்மொழிகள் துறையில், இதுவரை அடைந்துள்ள சாதனைகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செம்மொழிகளுக்கான தேசிய விருதுகள், பல்கலைக்கழகங்களில் செம்மொழிக்கான இருக்கைகள், மற்றும் செம்மொழிகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மையங்கள் ஆகியவை மத்திய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்படும் இதர சலுகைகளில் அடங்கும்.
கடந்த பத்து ஆண்டுகளில், பல்வேறு செம்மொழிகளுக்காக வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
செம்மொழிகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்ட நிதி (ரூபாய் - லட்சங்களில்)
|
ஆண்டு
|
கன்னடம்
|
தெலுங்கு
|
ஒடியா
|
மலையாளம்
|
தமிழ்
|
|
2014-15
|
100.00
|
100.00
|
-
|
-
|
8.80
|
|
2015-16
|
100.00
|
100.00
|
-
|
-
|
11.89
|
|
2016-17
|
100.00
|
100.00
|
-
|
-
|
5.02
|
|
2017-18
|
100.00
|
100.00
|
-
|
-
|
10.27
|
|
2018-19
|
99.00
|
100.00
|
-
|
-
|
5.46
|
|
2019-20
|
107.00
|
107.00
|
-
|
-
|
9.83
|
|
2020-21
|
108.00
|
147.00
|
8.00
|
8.00
|
1,200.00
|
|
2021-22
|
106.50
|
103.00
|
58.38
|
63.97
|
1,200.00
|
|
2022-23
|
171.75
|
171.75
|
176.75
|
186.75
|
1,200.00
|
|
2023-24
|
154.50
|
154.50
|
138.50
|
112.50
|
1,525.00
|
ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்படுவதால் ஏற்படும் தாக்கம் என்ன?
மொழிகளைச் செம்மொழிகளாகச் சேர்ப்பது, குறிப்பாகக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில், குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இந்த மொழிகளில் உள்ள பண்டைய நூல்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல்மயமாக்குதல் ஆகியவை காப்பகப்படுத்துதல், மொழிபெயர்ப்பு, பதிப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
மொழிகளைச் செம்மொழிகளாக அங்கீகரிப்பது, இந்தியாவின் அறிவுசார் மற்றும் பண்பாட்டு அடையாளத்திற்கு இன்றியமையாத பண்டைய நூல்கள் மற்றும் அறிவு அமைப்புகளின் அறிவார்ந்த ஆராய்ச்சி, பாதுகாப்பு மற்றும் புத்துயிர் பெறுதலை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த மொழிகளைப் பேசுபவர்களிடையே பெருமிதம் மற்றும் உரிமையுணர்வை ஏற்படுத்துவதுடன், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் தன்னிறைவு மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கும் இந்தியா என்ற பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இணைக்கிறது.
இந்த நடவடிக்கை, அவற்றின் வரலாற்று மற்றும் இலக்கிய முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன், இந்தியாவின் மொழிப் பன்முகத் தன்மையை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும், மத்திய அரசின் அர்ப்பணிப்புணர்வையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இத்தகைய முன்னெடுப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை வளர்க்கவும், உலகளவிலான மொழி சார்ந்த ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும், நாட்டின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருங்கால சந்ததியினருக்காக, இந்த மொழிகளைப் பாதுகாப்பதன் மூலம், 'தற்சார்பு இந்தியா' மற்றும் 'கலாச்சாரத்தில் வேரூன்றிய இந்தியா' ஆகிய நோக்கங்களுக்கு ஏற்ப, கலாச்சார தன்னிறைவு மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த, பரந்த தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு வலுப்படுத்துகிறது.
***
SV/PD
(Features ID: 157938)
आगंतुक पटल : 13
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English