Infrastructure
கொள்கையிலிருந்து செழிப்பு வரை: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs)
Posted On:
11 DEC 2025 10:49AM

இந்தியாவில் திறமையும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து வரும் இத்தருணத்தில், நிறுவனங்கள் சார்ந்த தீர்வுகளுக்கான புதிய எதிர்காலம், 1,700-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்களால் (GCCs) உருவாக்கப்பட்டு வருகிறது. பெருநிறுவனங்களின் முதுகெலும்பாகத் திகழும் இந்த மையங்கள், ஒரு காலத்தில் வெறும் உதவி மையங்களாகத் (Support Desk) தொடங்கப்பட்டு, இன்று ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் புத்தாக்க ஆற்றல் மையங்களாக (Innovation Powerhouses) பரிணமித்துள்ளன. உலகளாவிய திறன் மையங்கள் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தாய் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக இந்தியாவில் அமைத்துள்ள வெளிநாட்டைச் சேர்ந்த அலகுகள் (Offshore units) ஆகும். உலகளாவிய கார்ப்பரேட் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகச் செயல்பட்டு, தகவல் தொழில்நுட்பம் (IT) ஆராய்ச்சி & மேம்பாடு (R&D) வாடிக்கையாளர் சேவை, வணிகச் செயல்பாடுகள் ஆகிய துறைகளில் சிறப்பு நிபுணத்துவத்தை வழங்கி வரும் இந்த மையங்கள், குறைந்த செலவில் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் திறமையான பணியாளர்களைப் பயன்படுத்துவதிலும், தாய் நிறுவனங்களுக்கும் அவற்றின் சர்வதேச கிளைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
2019-ம் நிதியாண்டில் 40.4 பில்லியன் டாலராக இருந்த இவற்றின் மொத்த வருவாய், 2024-ம் நிதியாண்டில் 64.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 9.8% என்ற ஆரோக்கியமான வளர்ச்சி விகிதமாகும். இந்த மையங்கள் நாடு முழுவதும் 19 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. வணிக நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், ஆராய்ச்சி & மேம்பாட்டு மையங்கள், புத்தாக்க மையங்கள் போன்ற முக்கியப் பணிகளை இந்த மையங்கள் மேற்கொள்கின்றன. இந்தியாவை உலகளாவிய நிறுவனங்களுக்கு உகந்த இடமாக மாற்றுவதில் மத்திய அரசு முக்கியப் பங்காற்றியுள்ளது. அரசின் முற்போக்கான கொள்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு ஆகியவற்றால் உலகளாவிய நிறுவனங்களின் விருப்பத் தேர்வாக இந்தியா உருவெடுத்துள்ளது.
உலகளாவிய திறன் மையங்களின் (GCC) விரிவாக்கத்தின் மையப்புள்ளியாகத் திகழும் இந்தியா
உலகளாவிய திறன் மையங்களுக்கான (GCCs) சர்வதேச மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. பெங்களூரு, ஐதராபாத், புனே, சென்னை, மும்பை, புதுதில்லி (NCR) ஆகிய நகரங்கள் இத்துறையின் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இத்துறை 105 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது சுமார் 2,400 மையங்கள் மூலம் 28 லட்சத்திற்கும் அதிகமான வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சியின் முக்கியக் காரணிகள்:
- விரிவாக்கம்: கடந்த ஐந்தாண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட புதிய திறன் மையங்களும், 1,100-க்கும் மேற்பட்ட அலகுகளும் (Units) கூடுதலாகத் தொடங்கப்பட்டுள்ளன.
- தொழில்நுட்பம்: விண்வெளி, பாதுகாப்பு, செமிகண்டக்டர் ஆகிய துறைகளின் தொழில்நுட்பச் சூழலை இந்தியா ஒன்றிணைத்து வருகிறது.
- ஆராய்ச்சி & மேம்பாடு: ஒட்டுமொத்த மையங்களின் வளர்ச்சியை விட, பொறியியல் ஆராய்ச்சி சார்ந்த திறன் மையங்கள் (ER & D) 1.3 மடங்கு வேகமாக வளர்ந்து வருகின்றன.
- மனித வளம்: உலகளாவிய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித (STEM) துறை சார் பணியாளர்களில் 28 சதவீதத்தையும், உலகளாவிய மென்பொருள் பொறியியல் திறன் வாய்ந்தவர்களில் 23 சதவீதத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
- தலைமைப்பண்பு: உலகளவிலான நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 6,500-லிருந்து 2030-க்குள் 30,000-க்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாக்கம்: செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங் (ML) போன்ற உயர்தர மையங்கள் (Centres of Excellence) இந்தியாவின் தொழில்நுட்பச் சூழலை வலுவடையச் செய்கின்றன.
அரசின் நடவடிக்கைகள்: உலகளாவிய திறன் மையங்களின் வளர்ச்சிக்கு உதவும் காரணிகள்
இந்தியாவின் இந்த எழுச்சியானது உள்கட்டமைப்பு, புத்தாக்கம், திறன் மேம்பாடு, இவற்றிற்கு ஆதரவளிக்கும் கொள்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவாகும். பன்னாட்டு நிறுவனங்கள் நம்பிக்கையுடன் வளரவும், ஒத்துழைத்து செயல்படவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் வலுவான அடித்தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஊக்கப்படுத்துவது முதல், டிஜிட்டல் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவது வரை, உலகளாவிய திறன் மையங்கள் செழித்து வளர்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தகுந்த சூழலை இந்தியா கொண்டுள்ளது.

|
உள்கட்டமைப்பு & தொகுப்பு மேம்பாடு
|
|
மாற்றியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தி தொகுப்புகள் (GENESIS)
|
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
|
- உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) தங்களது செயல்பாடுகளை விரைவாகத் தொடங்கவும், தேவைகளுக்கேற்ப விரிவாக்கம் செய்யவும் ஏதுவாக, தயார் நிலையில் உள்ள தொழிற்சாலை (RBF) கூடங்கள், 'பிளக்-அண்ட்-பிளே' (Plug-and-Play) ஆகிய வசதிகளை இத்திட்டம் வழங்குகிறது.
|
- சர்வதேச உற்பத்தியாளர்களும் அவர்களின் விநியோகச் சங்கிலியில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது உற்பத்தி அலகுகளை நிறுவுவதை இது ஊக்குவிக்கிறது.
|
|
புத்தொழில் நிறுவனங்கள் & புத்தாக்கத்திற்கு ஆதரவு
|
|
GENESIS – புத்தாக்கம் வாய்ந்த அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு
|
- நாட்டின் இரண்டாம் & மூன்றாம் நிலை (Tier-II & Tier-III) நகரங்களில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு முன்னோடி முயற்சியாகும்.
|
- புத்தாக்கத்தையும் திறமையாளர்களை உருவாக்குவதையும் துரிதப்படுத்தி, உலகளாவிய திறன் மையங்களுக்குத் தேவையான ஊக்கமளிக்கும் சூழல் அமைப்பை (Feeder Ecosystem) உருவாக்க இது உதவுகிறது.
|
- புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களுக்கு இடையே டிஜிட்டல் மாற்றம், புதிய கண்டுபிடிப்புகளை கூட்டாக உருவாக்குவது ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை இது ஊக்குவிக்கிறது.
|
|
கொள்கை & சூழல் மேம்பாடு
|
|
புத்தொழில் இந்தியா மற்றும் DPIIT அங்கீகாரம்
|
- DPIIT-ஆல் அங்கீகரிக்கப்பட்ட1.97 லட்சத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களுடன், உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் சூழல் அமைப்பைக் கொண்டுள்ள நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
|
- இந்த புத்தொழில் நிறுவனங்கள், அதிநவீன தீர்வுகள் (Cutting-edge solutions), செயற்கை நுண்ணறிவு/இயந்திரக் கற்றல் (AI/ML) திறன்கள், டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் உலகளாவிய திறன் மைய (GCC) சூழல் அமைப்பிற்கு வலுசேர்க்கின்றன.
|
- அரசின் சீர்திருத்தங்களும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளும், உலகளாவிய திறன் மையங்கள் செழிப்புடன் வளர்வதற்கு ஏற்றதொரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன.
|
|
திறன் & டிஜிட்டல் பயிற்சி
|
- திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் (மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாஸ்காம் (NASSCOM) உடன் இணைந்து நடைமுறைப்படுத்துகிறது) போன்ற திட்டங்கள், இந்தியப் பணியாளர்களுக்கு அடுத்த தலைமுறை டிஜிட்டல் திறன்களை வழங்கி வருகின்றன.
|
- இந்தத் திட்டங்கள், சைபர் பாதுகாப்பு (Cybersecurity), கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing), தரவுப் பகுப்பாய்வு (Data analytics), செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில், உலகளாவிய திறன் மையங்களுக்கு (GCCs) தகுதியுள்ள நிபுணர்களின் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதி செய்கின்றன.
|
|
வணிகத்தை எளிதாக்குதல் & ஒழுங்குமுறை ஆதரவு
|
- எளிதாக வணிகம் மேற்கொள்வது தொடர்பான தரவரிசையில் (Ease of Doing Business rankings) இந்தியாவின் தொடர் முன்னேற்றமும் தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளும் (FDI policies), சர்வதேச நிறுவனங்கள் தங்களது உலகளாவிய திறன் மையங்களை (GCCs) இந்தியாவில் நிறுவுவதையும் விரிவாக்கம் செய்வதையும் எளிதாக்கியுள்ளன.
|
- சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சீர்திருத்தங்கள், வரிச் சலுகைகள், ஒற்றைச் சாளர அனுமதி (Single-window clearances) போன்ற நடவடிக்கைகள் இந்த நடவடிக்கைகளை முறைப்படுத்துகின்றன.
|
மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2024–25-ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey 2024–25), இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), தங்களது வழக்கமான நடவடிக்கைகளைத் தாண்டி, விண்வெளி, பாதுகாப்பு, செமிகண்டக்டர், மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் பொறியியல் ஆராய்ச்சி & மேம்பாட்டிற்கான (R&D) முக்கிய மையங்களாக மாறியுள்ளதை எடுத்துரைக்கிறது. இந்தியாவின் திறன்வாய்ந்த மனிதவளம், வணிக நடவடிக்கைகளை எளிதாக்கும் சீர்திருத்தங்கள், தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் (FDI policies) ஆகியவற்றின் ஆதரவுடன், இந்த உலகளாவிய திறன் மையங்கள் சேவைத் துறையில் வளர்ச்சியையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்குவித்து வருகின்றன. இந்த மாற்றமானது, உயர் தொழில்நுட்பத் தொழில்களில் இந்தியாவின் தற்சார்பை வலுப்படுத்துவதுடன், டிஜிட்டல் & பொறியியல் கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக நிலைநிறுத்துகிறது.
இறுதியாக, புத்தாக்கம், திறமை, தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவற்றால் உந்துதல் பெற்ற செழிப்பான சூழல் அமைப்பால், உலகளாவிய திறன்களுக்கான அடித்தளமாக (Launchpad) இந்தியா உருவெடுத்துள்ளது. உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), ஆதரவு அமைப்புகள் என்ற நிலையில் இருந்து தொடர்ந்து பரிணமித்து இன்று முக்கிய மையங்களாக உருவெடுத்து வருவதால், உலகளாவிய நிறுவனங்களின் எதிர்காலத்தை வடிவமைக்க இந்தியா தயாராக உள்ளது. இந்த வேகம் வலுவாகவும், அதற்கான அடித்தளம் தயாராகவும் உள்ளதால் இந்தியா வழிநடத்துவதை உலகமே உற்று நோக்குகிறது. சேவையில் இருந்து உத்திசார் நடவடிக்கைகளை நோக்கிய இந்தப் பயணம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
****
PD
(Features ID: 157909)
आगंतुक पटल : 60
Provide suggestions / comments