• Sitemap
  • Advance Search
Technology

மானவ் (MANAV)

பிரதமர் திரு நரேந்திர மோடியின் மக்களை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவுப் பயணம்

Posted On: 19 FEB 2026 5:24PM

புது தில்லி பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்று வரும் 'செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய உச்சி மாநாடு 2026', செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க உலகளாவிய தொழில்நுட்பத்துறை சார்ந்த தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்களை ஒருசேர இணைத்துள்ளது. மனிதநேயத்தை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுப் பாதையை உருவாக்குவதே இம்மாநாட்டின் பொதுவான நோக்கமாகும்.

உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை, உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் சக்தி, தொழில்நுட்பத்தில் திறமையான & துடிப்புமிக்க மனித வளம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்தியா, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் அவற்றை விரைவாக ஏற்றுக்கொள்வதிலும் முன்னணியில் உள்ளது. இந்தத் தனித்துவம், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு விவாதங்களை வடிவமைப்பதில் இந்தியாவிற்குப் பெரும் பொறுப்பை வழங்குகிறது.

பிப்ரவரி 19 அன்று உச்சிமாநாட்டின் தொடக்க உரையில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆழமான அணுகுமுறையை விளக்கிய பிரதமர் திரு நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவை வெறும் தரவுகள், அல்காரிதம்களால் (algorithms) இயங்கும் தன்னிச்சையான சக்தியாகப் பார்க்காமல், மனித சமூகத்தின் விருப்பங்கள், அறநெறி, கண்ணியம் ஆகியவற்றின் நீட்சியாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப முன்னேற்றம் சமூக விழுமியங்களுடன் இணக்கமாகச் செல்வதற்கான இந்த மனிதநேயப் பார்வையை 'மானவ்' (MANAV) என்று சுருக்கமாக பிரதமர் கூறினார்.

  • M (Moral and Ethical Systems): அறநெறி, ஒழுக்க நெறிமுறைகள்.
  • A (Accountable Governance): பொறுப்புள்ள நிர்வாகம்.
  • N (National Sovereignty): தேசத்தின் இறையாண்மை.
  • A (Accessible and Inclusive AI): எளிதில் அணுகக்கூடிய, உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு.
  • V (Valid and Legitimate Systems): முறையான, சட்டபூர்வமான அமைப்புகள்.

பிரதமர் முன்வைத்த 'மானவ்' (MANAV) தொலைநோக்குப் பார்வை என்பது இந்தியாவின் ஒரு தத்துவ அடிப்படையிலான கட்டமைப்பு மட்டுமல்ல; ஒருங்கிணைந்த திட்டங்கள், கொள்கை முன்முயற்சிகள் மூலம் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இந்த நடவடிக்கைகள் கல்வி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிர்வாகம், புதுமைக் கண்டுபிடிப்புச் சூழல் ஆகியவற்றில் வழிகாட்டுதல் கோட்பாடுகளைச் செயல்முறை முடிவுகளாக மாற்றுகின்றன. உள்ளடக்கம், பாதுகாப்பு, பொது நலன் ஆகியவற்றில் வேறூன்றியுள்ள இத்திட்டங்கள், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு உத்தியானது தொலைநோக்கு சிந்தனையுடனும் சமூகப் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்கின்றன. இவை அனைத்தும் இணைந்து, 'மானவ்' (MANAV) வெறும் கருத்தாக்கம் மட்டுமல்ல, உறுதியான செயல்பாடு, நிலையான நிறுவன அளவிலான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது வலுவான அறநெறி, தார்மீக விழுமியங்களில் வேரூன்றி இருக்க வேண்டும் என்பது 'மானவ்' கொள்கையின் முதல் தூணாகும். செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பிலும், பயன்பாட்டிலும் நியாயம் (Fairness), வெளிப்படைத்தன்மை (Transparency), மனிதக் கண்காணிப்பு (Human Oversight) ஆகியவை சமரசத்திற்கு அப்பாற்பட்ட அடிப்படைக் கொள்கைகள் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை 2020, டிஜிட்டல் முறையிலான, செயற்கை நுண்ணறிவு கல்வியறிவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. கல்வியில் கணக்கீட்டுச் சிந்தனை, செயற்கை நுண்ணறிவு கருத்துக்களை ஒருங்கிணைத்து, தரவு சார்ந்த முடிவெடுத்தல் திறனையும், அறநெறி சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கைகளையும் இளைய தலைமுறைக்கு இந்தியா பயிற்றுவிக்கிறது. 'பொறுப்பான செயற்கை நுண்ணறிவு' குறித்த பிரச்சாரத்தில் 24 மணிநேரத்தில் 2,50,946 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டு இந்தியா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இது அறநெறி சார்ந்த செயற்கை நுண்ணறிவை ஒரு கொள்கை அளவிலிருந்து தேசியக் கடமையாக மாற்றியுள்ளது.

வெளிப்படையான விதிகள், வலுவான கண்காணிப்புடன் கூடிய பொறுப்பான நிர்வாகமே 'மானவ்' கொள்கையின் இரண்டாவது தூணாகும். செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை என்பது அதன் வெளிப்படைத்தன்மையிலும், நிறுவனப் பொறுப்புணர்விலுமே அடங்கியுள்ளது. இந்தத் தொலைநோக்குப் பார்வையின் மையமாக 10,300 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பீட்டில் 'இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம்' (IndiaAI Mission) தொடங்கப்பட்டுள்ளது. இது கணக்கீடு (Compute), தரவு (Data), திறன் மேம்பாடு, புத்தாக்கத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு, தொடக்கத்திலிருந்தே செயற்கை நுண்ணறிவுச் சூழல் அமைப்பின் நிர்வாக வழிமுறைகளை ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நிர்வாக வழிகாட்டுதல்கள் (AI Governance Guidelines), நம்பிக்கை, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் நலன் சார்ந்த கட்டமைப்பை உருவாக்குவதால், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு அமைப்பு புரிந்துகொள்ளக்கூடியதாகவும், சட்டபூர்வமானதாகவும், ஜனநாயக விழுமியங்கள், அரசியலமைப்புத் தத்துவங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டதாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

‘மானவ்’ தொலைநோக்குப் பார்வையின் மூன்றாவது தூணாக தேசத்தின் இறையாண்மை உள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகில், இறையாண்மை என்பது எல்லைகளைக் கடந்து தரவு, அல்காரிதம்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது எனப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முக்கியமான தரவுத் தொகுப்புகளைப் பாதுகாத்தல், உள்நாட்டு கணக்கீட்டுத் திறனை வலுப்படுத்துதல், உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் உருவாக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவை இந்தியாவின் இலக்காகும். இந்திய செமிகண்டக்டர் இயக்கம், நம்பகமான தரவு மேலாண்மை கட்டமைப்புகள், பாதுகாப்பான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவை டிஜிட்டல் தனிமைப்படுத்தல் இன்றி தொழில்நுட்பத் தற்சார்பை அடைவதற்கான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. சிப்கள், கிளவுட் தொழில்நுட்பம், பிற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் உள்நாட்டுத் திறனை மேம்படுத்தி, பொருளாதாரப் பாதுகாப்பு, ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.

நான்காவது தூணான அனைவரும் அணுகக்கூடிய, உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு என்பது, செயற்கை நுண்ணறிவு ஒரு சிலரின் ஏகபோக உரிமையாக இல்லாமல் சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை விரைவாகவும், குறைந்த செலவிலும் விரிவுபடுத்த உதவுகிறது. மேக்ராஜ் ஜிஐ கிளவுட், இந்தியா செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட் போர்டல் போன்ற தளங்கள், கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPUs), டென்சர் செயலாக்க அலகுகள் (TPUs) உள்ளிட்ட கணக்கீட்டு வளங்களை அனைவரும் பெறும் வகையில் ஜனநாயகப்படுத்துகின்றன. இது புத்தாக்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளைக் நீக்குகிறது. ‘இந்திய செயற்கை நுண்ணறிவுத் தளம்’ (IndiaAI Kosh) பல்வேறு துறைகளுக்கான தரவுத் தொகுப்புகளை வழங்குகிறது. தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம், செயற்கை நுண்ணறிவுத் தரவு ஆய்வகங்கள் ஆகியவை கணக்கீட்டுத் திறனை மேம்படுத்துகின்றன.

ஐந்தாவது தூண், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நம்பிக்கை, பாதுகாப்பு, சட்டபூர்வத்தன்மை ஆகியவற்றை மையப்படுத்துகிறது. போலியான புகைப்படங்கள் & காணொளிகள் (Deepfakes), செயற்கை ஊடகங்கள் ஆகியவை ஜனநாயகத்திற்கும் சமூக நம்பிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் சரிபார்க்கக்கூடியதாகவும் சட்டபூர்வமானதாகவும் இருக்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள், டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) திருத்தப்பட்ட விதிகள் 2026, செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை முறையாக வரையறுத்து ஒழுங்குபடுத்தி டிஜிட்டல் சூழல் அமைப்பில் பொறுப்புணர்வை வலுப்படுத்தப்படுகிறது.

நடைமுறையில், இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் பாதுகாப்பான & நம்பகமான செயற்கை நுண்ணறிவு என்கிற தூண், சார்பு நிலையைக் குறைத்து, தனியுரிமையைக் காக்கும் அமைப்பை வடிவமைத்து, அல்காரிதம் தணிக்கை கருவிகள், இடர் மதிப்பீட்டு கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது. இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அறநெறி சார்ந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய தரநிலைகளாக மாற்றுகின்றன. இது செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் நம்பகமானதாகவும், பொறுப்பானதாகவும், சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

மானவ் (M.A.N.A.V.) கொள்கையின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு தொலைநோக்குப் பார்வையை மட்டும் முன்வைக்காமல் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு நாகரிகப் பார்வையை உலகிற்கு வழங்கியுள்ளார். கண்டுபிடிப்புகளை அறநெறிகளுடனும், நிர்வாகத்தைப் பொறுப்புணர்வுடனும், இறையாண்மையை வெளிப்படைத்தன்மையுடனும், உள்ளடக்கத்தை அளவீட்டுடனும், சட்டப்பூர்வத்தன்மையை நம்பிக்கையுடனும் இணைத்து, தொழில்நுட்பத்தை மட்டுமின்றி மனிதநேயத்தையும் மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை இந்தியா வடிவமைத்து வருகிறது.

****

VJ/PD

(Features ID: 157755) आगंतुक पटल : 81
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Bengali , Kannada , Malayalam