• Sitemap
  • Advance Search
Technology

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு உறுதிப்பாட்டை பறைசாற்றும் கின்னஸ் உலக சாதனை

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த 2,50,000-க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்பு

Posted On: 18 FEB 2026 8:05PM

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ‘செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சிமாநாடு 2026’-ன் மூன்றாவது நாளில் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு பொறுப்புணர்வு குறித்த பிரச்சாரத்திற்காக பிப்ரவரி 16 முதல் 17 வரை (24 மணிநேரத்தில்) மொத்தம், 2,50,946 உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான கின்னஸ் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இது 5,000 என்ற ஆரம்பகட்ட இலக்கை விட பன்மடங்கு அதிகமாகும். இது வெறும் சாதனை மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வடிவமைக்கத் துடிக்கும் ஒரு இளம் தேசத்தின் உறுதிப்பாடாகும்.

பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாடு மாணவர்கள், கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்களைப் பெருமளவில் ஈர்த்து வருகிறது. இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், இன்டெல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், செயற்கை நுண்ணறிவை அறநெறி சார்ந்து, உள்ளடக்கிய, பொறுப்பான முறையில் பயன்படுத்த நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. உறுதிமொழி எடுத்தவர்களுக்கு டிஜிட்டல் பேட்ஜ், பிரத்யேக கற்றல் வழிமுறைகளுக்கான அனுமதி வழங்கப்படுகிறது.

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது நாட்டிற்கு ஒரு பெருமையான தருணம் என்று குறிப்பிட்டார். இளம் இந்தியர்களைப் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பேராசிரியர்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுக்க ஊக்குவிக்கப்படுவதாகவும், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு குறுக்குவழியாகப் பார்க்காமல், சமூக நன்மைக்கான ஒரு கருவியாகக் கருத வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். உறுதிமொழி ஏற்றுக்கொண்ட 2,50,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை பாராட்டிய அவர், பொறுப்புணர்வுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்

இந்தியாவின் மக்கள் தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்கள் 65 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், இவர்களின் திறனைச் சரியாகப் பயன்படுத்துவதில் உச்சிமாநாடு கவனம் செலுத்துகிறது. இங்கு, விவாதங்கள் வெறும் அல்காரிதம்கள் பற்றியதாக மட்டுமில்லாமல், கல்வியறிவு, அறநெறிகள், நீடித்த திறன் மேம்பாடு ஆகியவை குறித்தே மேற்கொள்ளப்படுகின்றன. இனியும் செயற்கை நுண்ணறிவு என்பது எட்டாத தூரத்தில் உள்ள தொழில்நுட்பமாக இல்லாமல், அது வாழ்க்கைத் திறனாக முன்னேற்றமடைந்துள்ளது.

இந்த உற்சாகம், யுவ்-ஏஐ (YUVAi) உலகளாவிய இளைஞர்களுக்கான போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதில் பிரதிபலித்தது. இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 38 நாடுகளிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றன. 13 முதல் 21 வயது வரையிலான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பொது சுகாதாரம், விவசாயம், காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கியுள்ளனர். இதில், சிறந்த 70 குழுக்கள் தங்களின் முன்மாதிரிகளை இங்கு காட்சிப்படுத்துகின்றன.

இந்த உலகளாவிய பங்கேற்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாகும். இந்தியா தனது உள்நாட்டுத் திறமைகளை வளர்ப்பதுடன் நின்றுவிடாமல், பொறுப்புணர்வுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மின்-ஆளுமைப் பிரிவு, 2022 நவம்பர் மாதத்தில் 'யுவ்-ஏஐ' (YUVAi) திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டம் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவையும், சமூகத் திறன்களையும் வழங்குகிறது. தினசரி வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த எட்டு வெவ்வேறு கருப்பொருள்கள் சார்ந்த செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த மாணவர்களை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. வேளாண்மை, சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், நீதித்துறை ஆகிய துறைகள் அனைத்தும் வெறும் கோட்பாட்டு அளவில் இல்லாமல், நடைமுறை வாழ்வியல் களங்கள் என்பதை உணர்ந்து, இளைய தலைமுறையினர் இவற்றில் தங்களின் குறியீட்டுத் திறன் (Code), படைப்பாற்றல் ஆகியவற்றின் மூலம் தீர்வுகளைக் கண்டறிந்து வருகின்றனர்.

இத்திட்டத்துடன் இணைந்து, 'அனைவருக்குமான யுவ்-ஏஐ' (YUVA AI for All) என்ற தேசிய அளவிலான இலவசப் பயிற்சி வகுப்பும் நடைபெற்று வருகிறது. 11 இந்திய மொழிகளில் வழங்கப்படும் இந்தப் பயிற்சியானது, பொதுமக்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தீக்ஷா (DIKSHA), ஐ-காட் கர்மயோகி (iGOT Karmayogi), ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் (FutureSkills Prime) ஆகிய தளங்கள் வாயிலாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு கோடி பேருக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படைத் திறன்களை (Foundational AI proficiency) வழங்குவதே இதன் முக்கிய இலக்காகும். இந்தத் திட்டத்தின் நோக்கம் மிகவும் வலிமையானது. அறிவை அனைவருக்கும் பொதுவானதாக்கி, நகர்ப்புறம் - கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க இது முயல்கிறது. இதற்கு முன்பு, 'டிஜிட்டல் அறிவுத்திறன்' (Digital Literacy) எவ்வளவு அவசியமாகக் கருதப்பட்டதோ, அதேபோல் தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவும் அத்தியாவசியமானது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. தற்போது எட்டப்பட்டுள்ள கின்னஸ் சாதனை, இந்த மக்கள் இயக்கத்தின் ஒரு நீட்சியாகவே பார்க்கப்படுகிறது.

 

இந்த உச்சிமாநாட்டின் மற்றொரு பகுதியில், நிதி ஆயோக் அமைப்பின் கீழ் இயங்கும் அடல் புத்தாக்க இயக்கம் (Atal Innovation Mission), அடித்தட்டு அளவிலான கண்டுபிடிப்புகள் தேசிய முன்னுரிமைகளுக்கு வலுசேர்ப்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியா முழுவதும் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வகங்களைச் சேர்ந்த 50 மாணவர் குழுக்கள் 'செயற்கை நுண்ணறிவு டிங்கர்பிரனர்' (AI Tinkerpreneur) நிகழ்வில் ஒன்றிணைந்துள்ளன. இவர்களின் திட்டங்கள் சுகாதாரம், பயிர் மேலாண்மை, காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்தல், எளிதில் கல்வி கற்றல் ஆகியவற்றில் நிலவி வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டிற்கான போட்டியில் 12,000-க்கும் அதிகமான குழுக்கள் பங்கேற்று மிகவும் கடினமான மதிப்பீட்டிற்குப் பிறகு, சிறந்த 50 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றன. சிறு சிறு மாற்றங்களைச் செய்து பழகும் (Tinkering) இந்தப் பண்பு, படிப்படியாக ஒரு புதிய கண்டுபிடிப்பு கலாச்சாரமாக (Culture of Innovation) மாறி வருவதை இம்மாணவர்கள் பிரதிபலிக்கின்றனர்.

பல்வேறு நிலைகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஆதரிப்பதற்கான கட்டமைப்புகளை இந்திய அரசு படிப்படியாக உருவாக்கி வருகிறது. மத்திய பட்ஜெட் 2026-27 வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது. மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ள ஆதரவு 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்ளடக்க படைப்பாளிகள் ஆய்வகங்களை அமைக்க உதவும். இது அனிமேஷன், கேமிங் உள்ளிட்ட துறைகளில் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில வாரங்களில், நாட்டில் தற்போதுள்ள 38,000 கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளுடன் (GPUs) கூடுதலாக 20,000 அலகுகளை இணைத்து இந்தியா தனது கணக்கீட்டுத் திறனை மேலும் வலுப்படுத்த உள்ளது. கட்டமைப்பு வசதிகளும் அறநெறி சார்ந்த கோட்பாடுகளும் தற்பொழுது ஒன்றிணைந்து முன்னேறி வருகின்றன. தொழில்நுட்பத்தின் விரிவான வளர்ச்சியானது, சமூகப் பொறுப்புணர்வுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்ற செய்தி இதில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய சமநிலையை எட்டுவதில் திறன்மிக்க பணியாளர்களின் பங்களிப்பு மையப்புள்ளியாகத் திகழ்கிறது.

பள்ளி வகுப்பறைகள் தொடங்கி உயர்நிலை ஆராய்ச்சி ஆய்வகங்கள் வரை தொழில்நுட்பப் பயிற்சிக்கான புதிய பாதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம், வேளாண்மை, நிலையான நகரங்கள் ஆகியவற்றுக்கான சிறப்பு மையங்கள் (Centre of Excellence) ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. கல்வித் துறைக்கான நான்காவது சிறப்பு மையம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இளைஞர்களுக்குத் தொழில்துறைக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வழங்க ஐந்து தேசிய அளவிலான திறன் மேம்பாட்டுச் சிறப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக்கான திறன் மேம்பாடு (SOAR) என்ற முன்முயற்சி, மாணவர்கள் - கல்வியாளர்களுக்குக் கட்டமைப்புடன் கூடிய பயிற்சி தொகுப்புகளை வழங்குகிறது. தொழிற்கல்வி அளவில், கைவினைக்கலைஞர்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு, தொழில்முறை ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட 31 நவீன காலப் பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ITI), தேசியத் திறன் பயிற்சி நிறுவனங்கள் (NSTI) வழியாகக் கற்பிக்கப்படுகின்றன.

அரசு நிர்வாகத்திலேயே, அரசு அலுவலர்களுக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பொதுக் கட்டமைப்பு, பொதுத்துறை அலுவலர்கள் அத்தியாவசியமான செயற்கை நுண்ணறிவுத் திறன்களைப் பெறவும், அவற்றை கொள்கை உருவாக்கம், ஆளுமை ஆகியவற்றில் பயன்படுத்தவும் தேவையான முறையான பயிற்சியை வழங்குகிறது. இது, செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் என்பது வெறும் வகுப்பறைகள் அல்லது தனியார் தொழில்துறையுடன் மட்டும் நின்றுவிடாமல், பொதுத் துறை நிர்வாக அமைப்பு முழுமைக்கும் விரிவடைவதை உறுதி செய்கிறது.

இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் (IndiaAI) கீழ் உயர் கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு நேரடியாக ஆதரவுகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, 500 முனைவர் பட்ட (PhD) ஆய்வாளர்கள், 5,000 முதுகலை மாணவர்கள், 8,000 இளங்கலை மாணவர்களுக்கு கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 2025 ஜூலை மாதத்திற்குள் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், 73 கல்வி நிறுவனங்கள் முனைவர் பட்ட ஆய்வாளர்களைத் தங்களின் நிறுவனங்களிலேயே பணியமர்த்தியுள்ளன. தரவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் தற்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் நிறுவப்பட்டு வருகின்றன. தேசிய மின்னணு - தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT), தொழில்துறை கூட்டாளிகளுடன் இணைந்து ஏற்கனவே 31 ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளதோடு கூடுதல் ஆய்வகங்களை அமைப்பதற்காக 174 தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ITI), பாலிடெக்னிக் கல்லூரிகளை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பரிந்துரைத்துள்ளன. இது, மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஒரு சில மாநகரங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் நாடு முழுவதும் பரவலாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

இந்த உச்சிமாநாடு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் சூழல் நிதானம் கொண்டதாகவும் மிகுந்த தன்னம்பிக்கை மிக்கதாகவும் உள்ளது. இதில் நடைபெறும் உரையாடல்கள் எதிர்காலத்தை நோக்கியவையாகவும், செயல்பாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. பதின்ம வயது மாணவர்கள் தங்களின் மாதிரிப் படைப்புகளை விளக்க, அதற்கு கொள்கை வகுப்பாளர்கள் ஆர்வத்துடன் செவிமடுக்கின்றனர். தொழில்துறைத் தலைவர்கள் விரிவான அறநெறி சார்ந்த புதிய சிந்தனைகளைத் விளக்குகின்றனர். இந்தத் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவையாக உள்ளன.

கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் தருணமாகும். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள உறுதிப்பாடு மிகவும் ஆழமானது. இந்தியா தனது உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருதுடன் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, திறன் மேம்பாட்டுப நடவடிக்கைகளை வலுப்படுத்தி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அறநெறிகளை வரையறுக்கத் தனது இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த உலகச் சாதனை 24 மணி நேரத்திற்குள் படைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது உணர்த்தும் அர்ப்பணிப்பு ஒரு தலைமுறைக்கானதாகும்.

****

VJ/PD

(Features ID: 157754) आगंतुक पटल : 83
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Kannada , Malayalam