• Sitemap
  • Advance Search
Technology

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தருணம்

செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்தில் இந்தியாவின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு 20,000 கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPU’s) வலுசேர்க்கின்றன

Posted On: 17 FEB 2026 10:22PM

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு உறுதியான, நம்பிக்கையான பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. புது தில்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்று வரும் 'செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த இந்திய உச்சி மாநாடு 2026' (India AI Impact Summit 2026)-ன் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 17), மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 38,000 கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளுடன் (GPUs), வரும் வாரங்களில் கூடுதலாக 20,000 புதிய அலகுகள் (GPUs) இணைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த கணக்கீட்டுத் திறன் (Compute Capacity) பெருமளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பு வெறும் தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்லாது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கையாகும். இந்தியா தனது இலக்குகளைத் திட்டமிட்டு விரிவாக்கம் செய்து வருவதையும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னணி வகிக்கும் வல்லரசு நாடுகளுக்கு இணையாகத் தன்னை நிலைநிறுத்தி வருவதையும் இது உறுதிப்படுத்துகிறது.

அனைவரின் நலன், அனைவரது மகிழ்ச்சி (Sarvajan Hitaya, Sarvajan Sukhaya) என்ற கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்த உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பு வெளியானது. உலகிலேயே செயற்கை நுண்ணறிவு தொடர்பான மிகப்பெரிய மாநாடாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. பாரத் மண்டபத்திற்குள் நிறைந்திருந்த ஆற்றல் மிகவும் தனித்துவமானதாகவும், அங்கு நடைபெற்ற உரையாடல்கள் துணிச்சல் மிக்கதாகவும், எதிர்காலத்தை நோக்கியதாகவும், செயல்பாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்த.

கணக்கீட்டு உள்கட்டமைப்பை (Compute Infrastructure) விரிவாக்கம் செய்வது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு உத்தி சார் நடவடிக்கையின் அடுத்த கட்டத்தைக் குறிப்பதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். இது ஆழ்ந்த தொழில்நுட்பத் திறனைப் பொறுப்புணர்வுடன் கூடிய பயன்பாட்டுடன் ஒருங்கிணைக்கிறது. இம்மாநாட்டின் கருப்பொருள் வெறும் அடையாளமாக மட்டும் இல்லாமல், இம்மாநாட்டின் ஒட்டுமொத்தத் தன்மையையும் தீர்மானிப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் அணுகுமுறை உலக அளவில் தனித்து நிற்கிறது. பல நாடுகளில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகள் ஒரு சில நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளன. இது, புதிய கண்டுபிடிப்புகளை யார் உருவாக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. ஆனால் இந்தியா இதற்கு மாற்றாக ஒரு புதிய மாதிரியை உருவாக்கி வருகிறது.

10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் 'இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின்' (IndiaAI) மூலம், பொது நலனுக்காகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 38,000-க்கும் மேற்பட்ட உயர்தரக் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPUs), ஒரு மணி நேரத்திற்கு 65 ரூபாய் என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான கணக்கீட்டுத் திறன் சார்ந்த தடைகளைக் குறைத்துள்ளது. தொழில்நுட்பம் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் (Democratise) என்ற நம்பிக்கையை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஐந்தாவது தொழில்துறை புரட்சியை நடத்தி வரும் சக்தியாக செயற்கை நுண்ணறிவு உள்ளது என்று அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். இதன் தாக்கம் விவசாயம், சுகாதாரம், கல்வி, உற்பத்தி, நிர்வாகம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றில் பரவியுள்ளது. இந்தியா இந்தப் புரட்சியை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு நின்றுவிடாமல் இதனை தீவிரமாக வடிவமைத்து வருகிறது. கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPU) திறனின் தற்போதைய விரிவாக்கம், லட்சியத்தை அடைவதற்கான உள்கட்டமைப்பையும், தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற நடவடிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்ற நமது தேசத்தின் உறுதியை பிரதிபலிக்கிறது.

புதுதில்லி பாரத மண்டபத்தில் 2026 பிப்ரவரி 16  அன்று தொடங்கிய இந்த உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மிகவும் சக்தி வாய்ந்த உலகளாவிய தொழில்நுட்ப உரையாடலான இது, உலகின் தெற்குப் பகுதியில் (Global South) இந்தியாவின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் தலைமை என்பது இனியும் முன்பிருந்த அதிகார மையங்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், புதிய குரல்களால் வடிவமைக்கப்படுகின்றன என்ற நுட்பமான, வலிமையான செய்தியை இதிலிருந்து வெளிப்படுகிறது.

இந்த உச்சிமாநாட்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், 60 அமைச்சர்களும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்த  தலைவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கொள்கை வகுப்பாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுடனும், கண்டுபிடிப்பாளர்கள் & கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்களுடனும் கலந்துரையாடி வருகின்றனர். கருத்துக்கள், கூட்டுப் பங்களிப்புகள், உறுதிமொழிகள் ஆகியவற்றின் சங்கமமாக இந்த உச்சிமாநாடு மாறியுள்ளது. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுப் பயணத்தை உலகம் வேடிக்கையாளராக மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் நம்முடன் இணைந்து செயல்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

இந்த ஆர்வம், மாநாட்டின் அமர்வுகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளதை உச்சிமாநாட்டின் முதல் நாளிலேயே, இந்தியா முழுவதும் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறுப்பான புத்தாக்க நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக உறுதிமொழி ஏற்ற நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. இந்த முயற்சி கின்னஸ் உலக சாதனை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கூட்டு உறுதிமொழியில் பங்கேற்கும் காட்சி, பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் செயற்கை நுண்ணறிவை ஏற்கும் ஒரு தேசத்தின் உணர்வைப் பிரதிபலிப்பதோடு ஒரு புதிய தலைமுறை தலைமை தாங்க முன்வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.

இத்துறையில் முதலீடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுச் சூழலில் 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட முதலீடுகளுக்கு வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பின் ஐந்து அடுக்குகளிலும் உள்ள ஆழ் தொழில்நுட்ப (deep tech) புத்தொழில் நிறுவனங்களில் முதலீடுகள் மேற்கொள்ள மூலதன நிறுவனங்கள் நிதி வழங்க முன்வருகின்றன. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுப் பயணத்தின் மீது உலகம் கொண்டுள்ள உள்ள நம்பிக்கையை இந்த ஆர்வம் உணர்த்துகிறது.

முதலீட்டு நம்பிக்கை என்பது களத்தில் உள்ள தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக உள்ளது. இந்தியாவின் இறையாண்மைமிக்க செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் (Sovereign AI models) இந்த உச்சிமாநாட்டின் சிறப்பம்சமாக உருவெடுத்துள்ளன. இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட பல  இந்திய மாதிரிகள் உலகளாவிய அளவுகோல்களுக்கு உட்பட்டு கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முன்னணி சர்வதேச அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, பல்வேறு அளவீடுகளில் சிறந்த தரத்தைப் பெற்றுள்ளன. இது படிப்படியான முன்னேற்றமல்ல. போட்டித்தன்மையில் சிறந்து விளங்கும் திறனாகும். உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுப்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

உலகளாவிய அங்கீகாரம் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford), உலகின் முதல் மூன்று சிறந்த செயற்கை நுண்ணறிவு நாடுகளில் ஒன்றாக இந்தியாவைப் பட்டியலிட்டுள்ளது. திறமை, கொள்கை, உள்கட்டமைப்பு ஆகியவை இணையும் மையமாக இந்தியா பார்க்கப்படுகிறது. 38,000- ஆக இருந்த கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் 58,000-க்கும் அதிகமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்த அடித்தளத்தை வலுப்படுத்துவதோடு, இந்தியா தலைமைத்துவத்திற்காகத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது என்கிற தெளிவான செய்தியையும் வழங்குகிறது.

இந்தத் தலைமைத்துவத்தின் மையமாக ஜனநாயகப்படுத்துதல் (Democratisation) திகழ்கிறது. இது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்துவதையும் கடந்து கணக்கீட்டுத் திறன் (Compute power), தரவுத்தொகுப்புகள், மாதிரி சூழல் அமைப்புகளை பெறுவதையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படை வசதிகள் மலிவான விலையில் கிடைப்பது, புத்தாக்கம் மேம்படவும், புத்தொழில் நிறுவனங்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் சிந்தனைகளைச்  சரிபார்த்து சோதிக்கவும் வகைசெய்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்கும்போது உள்கட்டமைப்பு வசதிகள் அதிகாரமளிப்பவையாக மாற்றமடைகின்றன.

இந்த உச்சிமாநாட்டின் அறிவுசார் கட்டமைப்பு மூன்று அடிப்படை சூத்திரங்களை (Sutras) ஆதாரமாகக் கொண்டுள்ளது. முதலாவதாக மக்கள் (People): செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கண்ணியத்தை பாதுகாத்து உள்ளடக்கிய வளர்ச்சியைப் உறுதிசெய்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை வழங்குகிறது. இரண்டாவதாக பூமி (Planet): புத்தாக்கங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடும் நிலைத்தன்மையோடும் ஒருங்கிணைந்து செல்வதை இது உறுதி செய்கிறது. மூன்றாவதாக முன்னேற்றம் (Progress): செயற்கை நுண்ணறிவின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. இந்தத் தத்துவங்கள் லட்சியத்தையும் பொறுப்பையும் ஒன்றாக இணைக்கின்றன.

இந்தச் சூத்திரங்களின் அடிப்படையில், தத்துவங்களை நடவடிக்கைகளாக மாற்ற ஏழு சக்கரங்கள் (Chakras) வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதவளச் சக்கரம் செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்திற்காகப் பணியாளர்களைத் தயார் செய்வதிலும், அனைவருக்கும் சமமான பயிற்சி சூழலை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. சமூக அதிகாரமளித்தலுக்கான உள்ளடக்கத்திற்கானச் சக்கரம், கடைக்கோடி மனிதனுக்கும் சேவைகளைக் கொண்டு சேர்க்கும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை ஆராய்கிறது.

பாதுகாப்பான & நம்பகமான செயற்கை நுண்ணறிவு என்ற சக்கரம், உலகளாவிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய நிர்வாகக் கட்டமைப்புகளாக மாற்றுவதிலும், புத்தாக்கத்தை ஊக்குவித்து உள்நாட்டு மேற்பார்வையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. மீள் திறன், புத்தாக்கம், செயல்திறன் என்ற சக்கரம், பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் ஏற்படும் சுற்றுச்சூழல், வளங்கள் தொடர்பான சவால்களை எதிர்கொண்டு, நீடித்த வளர்ச்சியை உறுதி செய்கிறது. இவை நீண்டகாலத் தலைமைத்துவத்திற்கு மிக முக்கியமானவையாகும்.

அறிவியல் சக்கரம் (Science Chakra), ஆராய்ச்சித் துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சுகாதாரம், விவசாயம் பருவநிலை மாற்றத்தைக் கண்டறிதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துதல் (Democratizing AI Resources Chakra), உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மதிப்புச் சங்கிலிகளில் அனைவரையும் சமமாகப் பங்கேற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி & சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு (AI for Economic Growth and Social Good Chakra), பொருளாதாரத்தையும், சமூகத்தையும் முன்னேற்றமடையச் செய்யும் மிக முக்கிய அம்சங்களை அடையாளம் காண்கிறது.

மாற்றத்திற்கான நடவடிக்கைகளுக்கான இந்த உறுதிப்பாடு, உச்சிமாநாட்டின் முக்கிய அறிவிப்பு ஒன்றில் பிரதிபலித்தது. மத்திய அரசு 6 துறைகள் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த கையேடுகளை (Sectoral AI Impact Casebooks) வெளியிட்டது. இந்தக் கையேடுகள் சுகாதாரம், எரிசக்தி, பாலின அதிகாரமளித்தல், கல்வி, விவசாயம், அணுகல்தன்மை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதும் விரிவுபடுத்தக்கூடியதுமான 170-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான புத்தாக்கங்களைக் காட்சிப்படுத்துகின்றன. இவை வெறும் மாதிரிகள் (Prototypes) அல்ல; ஏற்கனவே பலனளித்துக் கொண்டிருக்கும் தீர்வுகளின் தொகுப்பாகும்.

இந்த வேகம் ஆவணப்படுத்துதலோடு நின்றுவிடாமல் உச்சிமாநாட்டின் உயர்மட்டக் குழு விவாதங்களிலும் தொடர்ந்தது. ரயில்டெல் கார்ப்பரேஷன் (RailTel) நிறுவனம், இந்தியாவிலும், அப்பாலும் உள்ளடக்கிய ஆரோக்கியத்தை வழங்குவதற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொது சுகாதார அமர்வுகளை நடத்தியது.

உச்சிமாநாட்டின் இரண்டாம் நாளில், 'நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு: அரசு செயல்திறனில் புரட்சி' என்ற தலைப்பிலான அமர்வு, பொதுச் சேவை வழங்கலைச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வலுப்படுத்துவது குறித்து ஆராய உலகளாவிய ஆராய்ச்சியாளர்களையும் மூத்த கொள்கை வகுப்பாளர்களையும் ஒன்றிணைத்தது. இதில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், பொறுப்பான பயன்பாடு குறித்து வலியுறுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் வேலைவாய்ப்பின் எதிர்காலம் குறித்த அமர்வில், மனிதத் திறன் சார்ந்த ஆற்றல்களின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மக்கள் தொகை பலம் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஒரு சாதகமான அம்சமாக சுட்டிக்காட்டப்பட்டது.

'நெறிமுறைகளிலிருந்து முடிவுகள் வரை' (From Algorithms to Outcomes) என்ற அமர்வில், கணக்கீட்டுத் திறனும் தரவுகளும் பொது மக்களுக்கு பலனளிப்பவையாகவும், நிர்வாகத்தை வலுப்படுத்துவதாகவும், உற்பத்தியை அதிகரிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்தியாவின் இறையாண்மைமிக்க செயற்கை நுண்ணறிவு, தரவுகளின் தாக்கத்தை அறிந்துகொள்வது குறித்த விவாதங்களில், இந்தியாவை செயற்கை நுண்ணறிவு நுகர்வோர் என்ற நிலையிலிருந்து, உலகளாவிய அமைப்புகளை உருவாக்கும் படைப்பாளியாக மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும்  ஆராயப்பட்டது.

இத்தகைய லட்சியங்களுக்குப் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு அவசியமாகும். உச்சிமாநாட்டின் ஒரு மைல்கல்லாக, 20,000 கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPU) கூடுதலாகச் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவின் கணக்கீட்டுத் திறனையும் நம்பிக்கையையும் குறிக்கிறது. இந்த படிப்படியான முன்னேற்றத்துடன் திருப்தி அடைந்து விடாமல் உள்கட்டமைப்பு விரிவாக்கத்தாலும், உலகளாவிய ஒத்துழைப்பு & வலுவான கட்டமைப்பு ஆகியவற்றினாலும், அனைவருக்குமான நலனையும் செழிப்பையும் தரும் புத்தாக்கங்கள் நிறைந்த ஒரு எதிர்காலத்தை வடிவமைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

****

VJ/PD

(Features ID: 157752) आगंतुक पटल : 76
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , हिन्दी , Bengali , Odia , Kannada , Malayalam