• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Farmer's Welfare

பிரதமரின் விஸ்வகர்மா சந்தை 2026

விஸ்வகர்மா திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கட்டுமானம்
Posted On: 24 JAN 2026 10:25AM

தில்லியின் ஒரு இனிய காலைப்பொழுதில், ஐஎன்ஏ-வில் உள்ள தில்லி சந்தை திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் வரத் தொடங்கிய வேளையில், திரு புஞ்சோக் பால்டன் ஏற்கனவே அங்கு தனது பணியைத் தொடங்கி, பார்வையாளர்களை புன்னகையுடன் வரவேற்றுக் கொண்டிருக்கிறார். லடாக்கின் லே பகுதியைச் சேர்ந்த ஒரு திறமையான மரச் சிற்பியான இவர், தான் கையால் செதுக்கிய மரப் படைப்புகளை அழகாகவும் எளிமையாகவும் அடுக்கி வைத்து சந்தையில் காட்சிப்படுத்துகிறார். பிரதமரின் விஸ்வகர்மா சந்தையில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் அவர், கடந்த ஆண்டு பங்கேற்றபோது, கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் அளவிற்கான பொருட்களை விற்பனை செய்திருந்ததால், இந்த முறை அதிக நம்பிக்கையுடன் வந்துள்ளார்.  இம்முறை தனது கைவினைப் பொருட்களை மட்டுமல்லாமல், இந்தத் தளத்துடனான ஒருவிதப் பிணைப்பையும் அவர் தன்னுடன் சுமந்து வந்துள்ளார்.

இவ்வாறாக, மரத்தின் மீதான உளியின் தாளமானது கைத்தறித் துணிகளின் மெல்லிய சலசலப்புடன் ஒன்று கலந்து அந்தச் சந்தையை உயிர்ப்பெறச் செய்கிறது. அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருட்களிலிருந்து சுடு மண்ணால் செய்யப்பட்ட பொருட்களின் வாசனை கமழ்கிறது. ‘பிரதமரின் விஸ்வகர்மா சந்தை 2026’ என்பது ஒரு கண்காட்சியை விட மேலாக, துடிப்பான, உயிர்ப்புடன் கூடிய சந்தையாகும். இங்கு இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தொடர்ந்து பரிணமித்து, புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடைகின்றன.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள  இந்தச் சந்தை,  ஜனவரி 18 முதல் 31-ம் தேதி வரை  ஐ என் ஏ தில்லி சந்தையில் நடைபெற உள்ளது.  இதில், நாட்டின்  பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து  சுமார் 117-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.  தினமும்  காலை 10:30 மணி முதல்  இரவு பத்து மணி வரை  திறந்திருக்கும்  இந்த சந்தையில், ‘விஸ்வகர்மா திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கட்டுமானம்’ என்ற  கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கைவினைத் தொழிலின் சிறப்பு குறித்து காட்சிப்படுத்தப்படுவதோடு, பானை வனைதல், வளையல், பொம்மை செய்தல் ஆகியவற்றின் நேரடி செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படுவதால் பார்வையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

2023 செப்டம்பர்-ல் தொடங்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், பாரம்பரிய கைவினைக்கலைஞர்களை குறிப்பாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த கலைஞர்களை முறையான சந்தை அமைப்புகளில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு விரிவான முன்முயற்சியாக உருவெடுத்துள்ளது. பிரதமரின் விஸ்வகர்மா அடையாள அட்டை, சான்றிதழ், தினசரி 500 ரூபாய் உதவித்தொகையுடன் கூடிய திறன் பயிற்சி, 15,000 ரூபாய் மதிப்பிலான இலவச உபகரண தொகுப்பு, பிணையில்லா கடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஊக்கத்தொகை ஆகியவற்றுடன் கூடிய முழுமையான ஆதரவை இத்திட்டம் வழங்குகிறது. நிதி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவுடன் கூடுதலாக, பிரதமரின் விஸ்வகர்மா சந்தை போன்ற சந்தை அனுகல் வசதிகளை வழங்குவதிலும் இந்தத் திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது. கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை தேசிய, சர்வதேச அளவிலான பார்வையாளர்களிடம் காட்சிப்படுத்தவும், பிராண்டிங் செய்யவும், சந்தைப்படுத்தவும் வகைசெய்யும் இந்த முன்முயற்சி, "பாரம்பரியத்தின் மூலம் வளர்ச்சி" என்ற சாராம்சத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. 2026 ஜனவரி 22 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்படுவதற்காக 2.72 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், சுமார் 30,000 கைவினைக்கலைஞர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த சந்தையில், உத்தரகாண்டைச் சேர்ந்த இரண்டு கைவினைக்கலைஞர்கள் அருகருகே கடைகள் அமைத்திருந்தனர். கைவினைக் கலையில் அவர்களின் பயணங்கள் வேறு வேறாக இருந்தாலும், பாரம்பரியத்தால் அவர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த திரு தர்ஷன் லால் பத்ரிநாத் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்ட கைவினைக்கலைஞர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர், மரச் செதுக்கல் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த பாரம்பரியத் தொழிலை செய்து வருகிறார். மாவட்ட அளவிலான விருதையும், பின்னர் கைவினைக்கலைஞர்களுக்கான சில்வர் ரத்னா விருதையும் பெற்றுள்ள இவர், 2008-2009-ம் ஆண்டு தனது நிறுவனத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனமாக (MSME) முறையாகப் பதிவு செய்தார். இது குறித்த தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறும்போது, ​​"எங்களுக்குப் பொருட்களை எப்படிச் செய்வது என்று தெரியும், ஆனால் தொழிலை விரிவுபடுத்தவும், சந்தை வாய்ப்புகளுக்கும் வழிகள் குறைவாக இருந்தன” என்றார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், திறன் பயிற்சி, உபகரணத் தொகுப்புடன் கடன் பெறும் வாய்ப்பையும் பெற்ற அவர், தனது கைவினைப் பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய சமவாய்ப்பை வழங்கும் வசதியையும் பெற்றார். தில்லியில் அவர் பங்கேற்கும் முதல் கண்காட்சியான பிரதமரின் விஸ்வகர்மா சந்தை 2026-ல் அவர் பெற்ற அனுபவத்தால் இப்போது சக கைவினைக்கலைஞர்களை இந்தத் திட்டத்தில் சேருமாறு ஊக்குவிக்கிறார்; இதை ஒரு வழக்கமான நடைமுறையாக அல்லாமல், வளர்ச்சிக்கான பாதையாக அவர் கருதுகிறார்.

திரு தர்ஷன் லால் அருகில், உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்த திரு வினோத் குமார், மூங்கில், பைன் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறார். பைனில்  கைவினை பொருட்கள் செய்வது அவரது மூதாதையர் தொழிலாகும். எனினும், அவர் படிப்படியாக மூங்கிலிலும் பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தார். 2008-ல் தனது நிறுவனத்தைத் தொடங்கி 2022-ல் முறையாக MSME நிறுவனமாக ஆகப் பதிவு செய்த அவர் இன்று, உத்தராகண்டின் 13 மாவட்டங்களில் கைவினைக்கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க நேரடியாக பயிற்சியாளர்களைப் பணியமர்த்துகிறார். இது போன்ற கண்காட்சிகளில் விற்பனை பொதுவாக 40,000 முதல் 50,000 ரூபாய் வரை இருக்கும்; இருப்பினும், இவற்றின் தாக்கம் உடனடி வருவாயை தாண்டியது. வினோத் போன்ற தனிப்பட்ட மனிதர்களின் வெற்றி பலருடைய வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும், திறன் மேம்பாட்டிற்கும் வினையூக்கியாக செயல்படுகிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், வினோத் குமாருக்கு கிடைத்த பயிற்சியும், உபகரணங்கள் உள்ளிட்ட ஆதரவுகளும், தொழில்முனைவோரின் வளர்ச்சி சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதில் ஆற்றும் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது.

அஸ்ஸாமின் துப்ரியைச் சேர்ந்த திருமதி ஜோத்ஸ்னா பாலுக்கு, சுடுமண் கலை(டெரகோட்டா) என்பது பரம்பரை பாரம்பரியத்தையும், படைப்பாற்றல் புதுமையையும் கொண்டது. தனது குடும்பத் தொழிலான சுடுமண் சிற்பக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 2020-ல் அதை ஒரு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனமாக (MSME) பதிவு செய்தார். அன்று முதல், தனது சொந்த ஊருக்கு அப்பாலும்  அசாம், வாரணாசி, நொய்டா, தில்லி ஆகிய சந்தைகளை அடைய அரசு அனுமதி பெற்ற தளங்கள் அவருக்கு உதவியுள்ளன. மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள், ஜவுளி அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், ஏற்றுமதி மேம்பாட்டு மன்றங்கள் ஆகியவற்றின் மூலம், பயணச் செலவுகள், தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன் கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவரை ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற கண்காட்சிகளில் விற்பனை பொதுவாக 20,000 முதல் 30,000 ரூபாய் வரை இருக்கும். ஆனால், பிரதமரின் விஸ்வகர்மா சந்தை 2026-ல் மட்டும், அவர் இதுவரை 15,000 முதல் 20,000 ரூபாய் வரையிலான அளவிற்கு பொருட்களை விற்பனை செய்துள்ளார். உடனடி வருமானத்தைக் காட்டிலும், இந்த சந்தை அவருக்குத் தொடர்ச்சியை வழங்குவதோடு, தனது கலையை மெருகேற்றி, பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்தவும் உதவுகிறது.

கேரளாவைச் சேர்ந்த திரு சுதீஷ் வி டி, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட மரக் கலைப்பொருட்களை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் காட்சிப்படுத்துகிறார். நேரடியாக அமைத்துள்ள தனது கடையுடன், தனது பாரம்பரிய கைவினைத்திறனை ஆன்லைன் வாயிலாக காட்சிப்படுத்தும் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர் கொண்டுள்ளார். 2024-ம் ஆண்டில் MSME ஆகப் பதிவுசெய்த அவர், வழக்கமான வங்கிக் கடன் வட்டி விகிதங்களை விடக் குறைவாக 5 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் 3 லட்ச ரூபாய் வரை பிணையில்லாக் கடனைப் பெற்றார். தில் 15,000 ரூபாய் மதிப்பிலான இலவச உபகரணத் தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இது போன்ற கண்காட்சிகளில், அவரது விற்பனை பெரும்பாலும் 20,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பதில்லை. அவரைப் போன்ற கைவினைக்கலைஞர்களுக்கு, இனி சந்தை என்பது புவியியல் ரீதியாக வரையறுக்கப்பட்டதாக இல்லை. ஏனெனில், டிஜிட்டல் தளங்களாலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளாலும், பொருட்களின் உயர் தரத்தால் வாடிக்கையாளர்களின் அபிமானத்தை பெறுவதாலும், தங்களின் கைவினைப்பொருளை வழக்கமான நேரடி சந்தைக்கு அப்பால் கொண்டுசெல்ல முடிகிறது.

தில்லி சந்தைக்கு அதிக அளவில் மக்கள் தொடர்ந்து வருகை தருவதால், இது போன்ற ஒரு கண்காட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இவ்விடம் உள்ளது. காஷ்மீர் குர்தி முதல் 6.5 அடிக்கு மேல் உயரமுள்ள நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட கற்சிலைகள் வரை இங்கு காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கைவினைக்கலைஞர்களின் பேக்கேஜிங் செலவுகளைக் குறைக்கும் வகையில், மத்திய அமைச்சகத்தின் முத்திரை பொறிக்கப்பட்ட ஷாப்பிங் பைகள், தில்லி சந்தைக்கான விளம்பரத் தூதர்களாகத் திகழ்கின்றன.

 

இதில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கடையிலும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தகவல் பலகை உள்ளது. இந்தப் பலகையில், கைவினைக்கலைஞரின் பெயர், வசிப்பிடம், தொடர்பு விவரங்கள், தொழிலின் வகை, மாதாந்திர உற்பத்தித் திறன் ஆகிய விவரங்களுடன், மொத்த அல்லது பிரத்யேக ஆர்டர்களை ஏற்கும் விருப்பம் உள்ளிட்ட வெளிப்படையான, நம்பகமான தகவல்களும்  இடம்பெற்றுள்ளன. இந்த எளிமையான அம்சம், ஒரு சிறிய கடையை தொழில்முறை சிறுதொழில் நிறுவனமாக மாற்றி, கைவினைக் கலைஞர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கும் நீடித்த சந்தைத் தொடர்புகளுக்கும் வழிவகுக்கிறது.

அரசுத் திட்டங்களும், அவற்றின் பலன்கள் குறித்த தெளிவான புரிதலைக் கொண்டுள்ள கைவினைக்கலைஞர்களின் விழிப்புணர்வும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிரதமரின் விஸ்வகர்மா திட்ட முன்முயற்சிகளின் கீழ், குறைந்த வட்டியில் கடன் பெறுதல், பயிற்சி, உபகரணங்கள், நிதியுதவிகள் உள்ளிட்ட ஆதரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. மேலும், பரிவர்த்தனைகளுக்கான விருப்பத்தேர்வாக யுபிஐ பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது, அதிகரித்து வரும் டிஜிட்டல் கல்வியறிவையும், கிராமப்புறங்களில் முறையான வங்கிச் சேவைகளின் விரிவாக்கத்தையும் குறிக்கிறது.

கைவினைக்கலைஞர்களின் தொடர்ச்சியான பங்கேற்புதான் இத்தகைய கண்காட்சிகள் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாகும்; பங்கேற்பு என்பது ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பாக அல்லாமல், நம்பகமான, செயல்பாட்டு சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகக் கைவினைக்கலைஞர்களால் பார்க்கப்படுகிறது. இங்கு, நிர்வாகம் என்பது நடைமுறைகள் அல்லது ஆவணங்களின் மூலம் வெளிப்படாமல், வாழ்வாதாரங்களை மேம்படுத்த நேரடியாக மேற்கொள்ளப்படும் உறுதியான நடவடிக்கைகளால் வெளிப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த விளைவுகள் அடித்தட்டு மக்களிடையே நம்பிக்கையை வளர்த்தெடுப்பதோடு, தற்சார்பு இந்தியாவின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்துகின்றன. மேலும், மத்திய அரசின் வளர்ச்சிக்கான தொலைநோக்கான, "அனைவரது ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை" என்பதற்கு ஆதரவளித்து, 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதற்கு உந்துசக்தியாக உள்ளன. பிரதமரின் விஸ்வகர்மா சந்தை 2026, நீடித்து நிலைத்திருக்கும் அணுகல், தெளிவு, கண்ணியம் ஆகியவற்றை வழங்குகிறது. இந்தச் சந்தையில், வரலாறும் கலாச்சாரமும் கண்ணாடிகளுக்குள் பாதுகாக்கப்படவில்லை; உயிர்ப்புடன் உள்ள அவை, திறமையான கைகளால் வடிவமைக்கப்பட்டு, கொள்கை ஆதரவால் வலுப்படுத்தப்பட்டு, அனைவருடனும் வெளிப்படையாகப் பகிரப்படுகின்றன.

****

References

Ministry of Micro, Small and Medium Enterprises

https://pmvishwakarma.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215839&reg=3&lang=2

PM Vishwakarma Haat 2026

 

VJ/PD

(Features ID: 157455) आगंतुक पटल : 9
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate