Infrastructure
சுகாதாரமான பழக்கவழக்கம் முதல் தூய்மை இந்தியா வரை: தேசிய முயற்சியை தக்கவைத்தல்
Posted On: 09 FEB 2026 2:19PM
பொது சுகாதாரம், கண்ணியம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றிற்கு சுத்தமும் சுகாதாரமும் அடிப்படைத் தேவைகளாகும். குடியிருப்புப் பகுதிகளில் கழிவுகளைக் கையாள்வது முதல், பொது இடங்களை சுத்தமாக பராமரிப்பது வரை, இத்தகைய நடைமுறைகள் ஒரு சமூகத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளில், தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) சுகாதாரத்தை நாட்டின் முதன்மையான முன்னுரிமையாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், கழிப்பறை வசதிகளை விரிவுபடுத்துதல், கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் இவ்வியக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டு முயற்சியானது, சுகாதாரத்தை ஒரு தனிநபர் விவகாரம் என்பதிலிருந்து மாற்றி, மக்களின் கூட்டுப் பொறுப்பாக மறுவரையறை செய்கிறது.
கட்டமைப்பு வசதிகள் மாற்றத்திற்கு வழிவகுக்கும் அதே வேளையில், நமது அன்றாட பழக்க வழக்கங்களே அந்த மாற்றத்தை நிலைநிறுத்துகின்றன. நீண்டகால முன்னேற்றம் என்பது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்களையே சார்ந்துள்ளது. "சுகாதாரமான பழக்கவழக்கம் முதல் தூய்மை இந்தியா வரை" (Swachh Aadat se Swachh Bharat) என்பது இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல்; பொது இடங்களில் குப்பைகளை எறிவதையும், எச்சில் துப்புவதையும் தவிர்த்தல்; கழிவுகளைத் தரம் பிரித்தல்; ஈரக்கழிவுகளுக்குப் பச்சை நிறத் தொட்டி மற்றும் உலர் கழிவுகளுக்கு நீல நிறத் தொட்டியைப் பயன்படுத்துதல். கைகளைச் சுத்தமாகப் பராமரித்தல்; கழிப்பறைகளைப் பொறுப்புடன் பயன்படுத்துதல்; நம்மால் இயன்ற வரையில் கழிவுகள் குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse), மறுசுழற்சி (Recycle) ஆகிய நடவடிக்கைகளை அன்றாடம் பின்பற்றுவது அவசியமாகும்.
ஒட்டுமொத்தமாக, இந்தப் பழக்கவழக்கங்கள் நீடித்த தூய்மைக்கான ஒரு நடைமுறைக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. தூய்மையான இந்தியா என்பது ஒருமுறை மேற்கொள்ளும் முயற்சியால் உருவாவதல்ல; மாறாக, அது மக்களின் தொடர்ச்சியான பங்களிப்பால் கட்டமைக்கப்படுவதாகும். பொறுப்பான நடத்தையானது அன்றாட வாழ்வின் அங்கமாக மாறும் போது, கூட்டு முயற்சியால் நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

அன்றாட நடவடிக்கைகள்: நிலையான மாற்றம்
கழிவுகளிலிருந்து கலைப்படைப்புகளை உருவாக்கி தில்லி மாநகராட்சி சாதனை
சுகாதார முயற்சிகளின் உண்மையான தாக்கம் என்பது கொள்கைகளுக்கும் திட்டமிடல்களுக்கும் அப்பாற்பட்டு, உள்ளூர் அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினாலேயே ஏற்படுகிறது. பொதுமக்களின் ஈடுபாடும் பொறுப்புணர்வும் பொதுச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்பதற்கு குடியிருப்புப் பகுதிகளும் மாநகராட்சிப் பகுதிகளும் சிறந்த உதாரணங்களாக மாறி வருகின்றன.
கழிவுகளிலிருந்து கலைப்படைப்புகள்
தில்லி மாநகராட்சியின் (MCD) தெற்கு மண்டல அலுவலகத்தில், 'கழிவிலிருந்து கலை' (Waste-to-Art) எனும் ஆக்கப்பூர்வமான முன்முயற்சியில் பழுதடைந்த சிறுவர் விளையாட்டு உபகரணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பழைய குழாய்களையும், பயன்படுத்த முடியாத குப்பைத் தொட்டிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சக்கரங்களையும் மறுபயன்பாட்டின் மூலம், அலுவலக வளாகத்திற்கு வரும் பார்வையாளர்களை வரவேற்கும் ஒரு கலைப்படைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாண்டு குடியரசு தினத்தன்று திறக்கப்பட்ட இந்த கலைப்படைப்பகம், தேவையற்றக் கழிவுகளாகக் கருதப்படும் பொருட்களை, மறுபயன்பாடு செய்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்த்துகிறது. கழிவுகளை பல்வேறு விதமான கலைப்படைப்புகளாக மாற்றுவதால், பொருட்களின் ஆயுட்காலம் நீடிப்பதோடு அந்தப் பொருளின் மதிப்பும் உயர்கிறது. அதே வேளையில், இந்த முன்னெடுப்பு பொது இடங்களில் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்கிறது.
அன்றாட நடவடிக்கைகளில், வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, பெருமளவிலான கழிவு குறைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அமையும். இது, மறுபயன்பாடு, பொறுப்புணர்வு, புத்தாக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் விதமான அன்றாட வாழ்கைமுறைகள், "சுகாதாரமான பழக்கவழக்கம் முதல் தூய்மை இந்தியா வரை" (Swachh Aadat se Swachh Bharat) என்ற நோக்கத்தை வடிவம் பெறச் செய்கின்றன என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் தூய்மைப் பணிகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், அணிவகுப்பு மைதானத்தில் (Parade Ground) இடம்பெற்ற தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான அலங்கார ஊர்தி, ஒருங்கிணைந்த அமைப்புகள், மக்கள் பங்களிப்பு ஆகியவை அன்றாடச் சுகாதார நடைமுறைகளை எவ்வாறு வலுப்படுத்துகின்றன என்பதைத் தத்ரூபமாகப் காட்சிப்படுத்தியது. இதில், தூய்மைப் பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று கழிவுகள் சேகரிப்பு; கழிவுகளின் உற்பத்தி நிலையிலேயே மட்கும் மற்றும் மட்காத கழிவுகளைப் பொதுமக்களே பிரிப்பது; பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் சுவச் சார்தி அமைப்பு; பிளாஸ்டிக் இல்லாமை முன்னெடுப்பு; ‘1533’ கட்டணமில்லா உதவி எண்; பொதுக் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிப்பது ஆகிய நடவடிக்கைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த அலங்கார ஊர்தியானது, முறையான திட்டமிடலும், பொறுப்புணர்வுடன் கூடிய அன்றாடச் நடவடிக்கைகளும் தூய்மையான சூழலை உருவாக்கும் என்பதை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது.

கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்ள நகரங்களின் நடவடிக்கைகள்:
பெங்களூருவில், ஒரு தனித்துவமான சவால் மக்களை ஒன்றிணைத்தது. தூக்கி எறியப்படும் பழைய சோஃபாக்களால் அதிகரித்து வந்த கழிவுப் பிரச்சினையைத் தீர்க்க, ஒரு தொழில்முறை வல்லுநர்கள் குழு ஒன்றிணைந்து, நடைமுறைக்கேற்ற, சமூகம் பங்களிப்புடன் கூடிய தீர்வுகளை முன்னெடுத்தது. இந்த முயற்சி, பெரிய அளவிலான கழிவுகளை (bulky waste) பொறுப்புடன் கையாளவும், குறிப்பிட்ட நகர்ப்பகுதிகளில் நிலவும் துப்புரவு சவால்களுக்கு இலக்குடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பலனளிக்கும் என்பதை நிரூபித்தது.
சென்னையில், குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள், முறையான செயல்முறை சார்ந்த முயற்சிகளால், குப்பை கிடங்குகளின் நீண்டகால சுமையைக் குறைக்க முடியும் என்பதைக் எடுத்துக்காட்டுகின்றன. கழிவு மேலாண்மையில் நிலவும் பிரச்சினைகளைக் களைவதில், தொடர்ச்சியான ஈடுபாடும் அமைப்பு ரீதியிலான சிந்தனையின் (system-level thinking) முக்கியத்துவத்தையும் இவர்களது பணி எடுத்துக்காட்டுகிறது.
அசம்கரில் தம்சா நதிக்கு புத்துயிர் அளித்தல்
உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கரில், அப்பகுதியின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தோடு பின்னிப் பிணைந்துள்ள தம்சா நதிக்கு, சமூகத்தின் கூட்டு முயற்சி புத்துயிர் ஊட்டியுள்ளது. அயோத்தியில் உற்பத்தியாகி கங்கையில் கலக்கும் தம்சா நதி, கடந்த காலத்தில் உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தது. இருப்பினும், காலப்போக்கில் ஏற்பட்ட மாசுபாடும், வண்டல் படிவும், கழிவுகள் குவிதலும், கவனமின்மை காரணமாகவும் அதன் இயற்கையான ஓட்டம் தடைபட்டு, நதியின் சூழலியல் ஆரோக்கியமும், சமூகப் பங்களிப்பும் குறையத் தொடங்கியது.
இந்த நதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த உள்ளூர் மக்கள், அதை மீட்டெடுக்கும் முயற்சியில், கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து. ஆற்றுப்படுகையைச் சுத்தம் செய்தும், கழிவுகளை அகற்றியும் நதிக்கரைகளைப் புதுப்பித்தும், அக்கரைகளில் நிழல் தரும் மரங்களையும் பழ மரங்களையும் வளர்த்தும் அப்பகுதியின் சமநிலையையும் சுற்றுச்சூழல் தரத்தையும் மேம்படுத்தினர்.
கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்புப் பணிகளானது, தம்சா நதியின் ஓட்டத்தைப் படிப்படியாக மீட்டெடுத்து புத்துயிர் ஊட்டி, உள்ளூர் மக்களின் பங்களிப்பும் தொடர்ச்சியான செயல்பாடுகளும் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் தூய்மைக்காக ஒலித்த சமூகத்தின் குரல்கள்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாஹு பிளாசாவில் (Bahu Plaza), 'குடியரசின் குரல்- தூய்மையுடன்' (Gantantra Ki Awaaz – Swachhata Ke Saath) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இது கலை, உரையாடல்கள் மூலம் மக்கள் தங்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதற்கான ஒரு களத்தை உருவாக்கியது. இந்த 'ஓபன்-மைக்' (Open-mic) தளம், கவிதை, இசை, சொற்பொழிவு ஆகியவற்றின் மூலம் குடிமக்களை ஒன்றிணைத்தது. இதன் வாயிலாக, தேசபக்தியுடன் கூடிய சமூகப் பெருமையையும், தூய்மை குறித்த தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கமான பிரச்சாரங்களைத் தாண்டி, கலாச்சார வெளிப்பாடுகள் மனித விழுமியங்களை வலுப்படுத்த முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாகும். பொதுமக்களின் பங்களிப்பையும் கூட்டு உரிமையையும் ஊக்குவித்து, ‘சுகாதாரமான பழக்கம் முதல் தூய்மை இந்தியா வரை’ என்ற செய்தி, சமூகங்களின் குரல்களில் வெளிப்படும்போது, அது மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது.


வடகிழக்கு இந்தியாவில் இளைஞர்கள் தலைமையிலான தூய்மைப் பணிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில், பொது இடங்களைப் பராமரிக்கும் பணியை இளைய தலைமுறை தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். இட்டாநகரில் தொடங்கிய இந்த முயற்சியில், இளைஞர் குழுக்கள் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சுத்தம் செய்ய ஒன்றிணைந்தனர். இவர்களது முயற்சி, பொதுச் சொத்துக்கள், சுற்றுப்புறத்தின் மீதான அவர்களது வளர்ந்து வரும் அக்கறையையும், கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அவற்றை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
இட்டாநகரில் தொடங்கிய இந்த முன்னெடுப்பு, விரைவில் நஹர்லகுன், தோய்முக், செப்பா, பாலின், பாசிகாட் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் விரிவடைந்து, தொடர்ச்சியாக மேற்கொண்ட தூய்மைப் பணிகளால் இந்த இளைஞர் தன்னார்வலர்கள் இதுவரை, பொது இடங்களிலிருந்து 11 லட்சம் கிலோவிற்கும் அதிகமான கழிவுகளை அகற்றியுள்ளனர். இந்த முயற்சி, நிலையான செயல்பாடுகள் நீடித்த மாற்றங்களை உருவாக்கும் என்பதைக் காட்டுகின்றன.
அசாம் மாநிலம் நகௌன் (Nagaon) நகரத்தில், குடியிருப்பாளர்கள் தங்களது சுற்றுப்புறத் தெருக்களுடன் ஒரு வலுவான உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு நெருக்கமான இந்தப் பொது இடங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பொதுமக்கள், அவற்றைச் சுத்தம் செய்யும் உறுதியுடன் ஒன்றிணைந்தனர். அர்ப்பணிப்புள்ள குழுவாக உருவெடுத்த அவர்கள், வீதிகளில் தேங்கியிருந்த பெருமளவிலான கழிவுகளை வெற்றிகரமாக அகற்றினர்.
ஒட்டுமொத்தமாக, இந்த உதாரணங்கள் 'சுகாதாரமான பழக்கவழக்கம் முதல் தூய்மை இந்தியா வரை’ என்பது அன்றாடச் செயல்பாடுகளால் வடிவம் பெறுகிறது என்பதை எடுத்துரைக்கின்றன. மேலும், தூய்மை என்பது தனிப்பட்ட செயல்பாடு அல்ல; அது கூட்டுப் பொறுப்பாலும், உள்ளூர் மக்களின் அக்கறை உணர்வால் தொடர்ச்சியான நடவடிக்கைகளாலும் ஏற்படும் பழக்கவழக்கங்களால் மட்டுமே நிலைபெறுகிறது.
அன்றாட பழக்கவழக்கங்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும்போது
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிடைக்கப்பெற்ற இந்த அனுபவங்கள் ஒரு எளிய, சக்திவாய்ந்த உண்மையை எடுத்துரைக்கின்றன: நிலையான மாற்றம் என்பது மக்களின் அன்றாட செயல்பாடுகளால் கட்டமைக்கப்படுகிறது. பொது இடங்களை சுத்தமானதாக மீட்டெடுப்பதிலும், இளம் தன்னார்வலர்கள் தொடர்ந்து அதே தெருக்களை சுத்தம் செய்வதிலும், சமூகங்கள் இணைந்து இயற்கை வளங்களை மீட்டெடுப்பதிலும் - பொறுப்புணர்வு என்பது விதிவிலக்காக இல்லாமல் ஒரு வழக்கமான நடைமுறையாக (routine) மாறும்போது முன்னேற்றம் நிலைத்திருக்கும்.
இந்த அனுபவங்கள் எடுத்துரைப்பது போல, 'சுகாதாரமான பழக்கவழக்கம் முதல் தூய்மை இந்தியா வரை’-ன் வலிமை என்பது ஒருமுறை செய்யும் செயலில் இல்லை; மாறாக, அதன் ‘தொடர்ச்சியில்’ உள்ளது. சுற்றுப்புறத்தின் மீதான அக்கறை அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணையும்போது, அதன் பலன்கள் நிலைத்திருக்கும். ஒரு செயலை நிகழ்வாகப் பார்க்காமல், அதை ஒரு இயல்பான நடைமுறையாக்கும் இந்த அமைதியான மாற்றம், ஏற்கனவே அடைந்த பலன்களைத் தக்கவைக்க உதவுவதோடு, முன்னேற்றமானது சமூகங்களையும் தலைமுறைகளையும் கடந்து தொடர்வதையும் உறுதி செய்கிறது.
****
VJ/PD
(Features ID: 157450)
आगंतुक पटल : 12
Provide suggestions / comments