Others
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஓராண்டிற்குப் பிறகு
Posted On: 07 NOV 2017 7:02PM
அருண் ஜேட்லி
இந்தியப் பொருளாதார வரலாற்றில் 2016 நவம்பர் 8ஆம் தேதி மிக முக்கியமான தருணமாக நினைவுகூரப்படும். “கருப்புப் பணம் என்ற அச்சுறுத்தும் நோயில்” இருந்து நாட்டை மீட்டெடுப்பது என அரசு முடிவெடுத்ததை இந்த நாள் குறிப்பிடுவதாக அமைகிறது. ஊழல், கருப்புப் பணம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தவரையில் இந்தியர்களாகிய நாம் “எப்படிப் போனால் நமக்கென்ன?” என்ற அணுகுமுறையுடன் வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு இருந்தோம். இந்த அணுகுமுறையின் முழு வீச்சையும் சமூகத்தின் நடுத்தர வர்க்க மற்றும் அடித்தட்டு மக்கள்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஊழல், கருப்புப் பணம் என்ற சாபத்தை முற்றாக அகற்ற வேண்டும் என்பது மிக நீண்ட நாட்களாக நமது சமூகத்தின் பெரும்பகுதி மக்களின் உள்ளீடான உந்துதலாக இருந்து வந்துள்ளது. 2014 மே மாத தேர்தல் முடிவுகளில் இந்த உந்துதல் தெளிவாக வெளிப்பட்டிருந்தது.
2014 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே, கருப்புப் பணத்தின் மீதான சிறப்பு புலனாய்வுக் குழுவை உருவாக்கியதன் மூலம் இந்தக் கருப்புப் பண அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்தது. இந்த விஷயம் குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் அப்போது பல ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த அரசு உதாசீனம் செய்து வந்தது என்பதையும் நமது நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கருப்புப் பணத்திற்கு எதிராகப் போராடுவதற்கான மன உறுதி அவர்களுக்கு இல்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் 28 ஆண்டுகளாக அமலாக்கப்படவில்லை என்பதாகும்.
கருப்புப் பணத்திற்கு எதிராகப் போராடுவது என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கடந்த மூன்றாண்டுகளாக மிகுந்த தீர்மானத்துடனும் திட்டமிட்ட முறையிலும் இந்த அரசு முடிவுகளை எடுத்து இதற்கு முன்பு இருந்த சட்டத்தின் விதிமுறைகளை அமல்படுத்தியது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பதிலிருந்து துவங்கி இந்தியர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த தேவையான சட்டங்களை இயற்றுவது, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவைகளை உள்ளடக்கியதாக அரசின் இந்த முடிவுகள் இருந்தன.
“கருப்புப் பண எதிர்ப்பு தின”த்தன்று நாடு பங்கேற்றபோது இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை முழுவதுமே அதன் நோக்கங்கள் நிறைவேற உதவி செய்துள்ளதா என்ற வாதம் துவங்கியது. அந்த நடவடிக்கையின் போது குறிப்பிடப்பட்டிருந்த நோக்கங்களைப் பொறுத்தவரையில் குறுகிய கால அளவிலும், நீண்ட கால அளவிலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் உருவான சாதகமான விளைவுகளை கீழ்க்கண்ட விவரிப்பு எடுத்துக் கூற முனைகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி அதன் வருடாந்திர கணக்குகளை முன்வைக்கும் போது 30.06.2017 அன்று வரை ரூ. 15.28 லட்சம் கோடி மதிப்புடைய குறிப்பிட்ட வகைப்பட்ட வங்கி நோட்டுகள் மீண்டும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது. வெளியில் சுற்றுக்கு விடப்பட்டிருந்த குறிப்பிட்ட வகை வங்கி நோட்டுகளின் மதிப்பு 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று ரூ. 15.44 லட்சம் கோடி ஆகும்.
ரொக்கப் பண பரிமாற்றத்தை இந்தியாவில் குறைப்பது; அதன் மூலம் அமைப்பிற்குள் கருப்புப் பண ஊடுருவலை குறைப்பது என்பது பண மதிப்பு ரத்து நடவடிக்கையின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அடித்தளத்தில் சுற்றிவரும் பண நோட்டுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது அந்த நோக்கம் நிறைவேறி உள்ளது என்பதையே பிரதிபலிக்கிறது. “சுற்றில் உள்ள பண நோட்டுகள்” குறித்த அச்சில் வெளியான புள்ளிவிவரம் 2017 செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்தில் ரூ. 15.89 லட்சம் கோடி ஆகும். ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களின்படி இது ரூ (-)1.39 லட்சம் கோடி ஆகும். சென்ற ஆண்டில் இதே காலப்பகுதியில் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தின் போது இது ரூ. (+)2.50 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது சுற்றில் உள்ள பண நோட்டுக்களின் மதிப்பு ரூ. 3.89 லட்சம் கோடி அளவுக்குக் குறைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.
பணச் சுற்று அமைப்பிலிருந்து கூடுதல் பணத்தை நாம் ஏன் அகற்ற வேண்டும்? ரொக்கப் பண பரிவர்த்தனைகளை நாம் ஏன் தடுக்க வேண்டும்? ரொக்கப் பணம் என்பது அடையாளம் ஏதுமற்றது என்று அனைவருக்குமே தெரியும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமலாக்கப்பட்டபோது பொருளாதாரத்தில் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்களின் அடையாளத்தை கண்டறிவது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. முறைப்படுத்தப்பட்ட வங்கி அமைப்பிற்குள் ரூ. 15.28 லட்சம் கோடி பணம் திரும்பி வந்ததும் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்களின் முகவரி முழுவதும் பதிவாகியுள்ளது. இனிமேல் அது அடையாளமற்ற ஒன்றாக இருக்க முடியாது. இவ்வாறு உள்ளே வந்த பணத்திலிருந்து பல்வேறு மதிப்பீடுகளின்படி ரூ. 1.6 லட்சம் கோடியிலிருந்து ரூ. 1.7 லட்சம் கோடி வரையிலான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் என்ற வகையில் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்த பெரும் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்தப் புள்ளிவிவரங்கள் தற்போது வருமான வரி நிர்வாகம் மற்றும் இதர அமலாக்கப் பிரிவுகளிடம் உள்ளன.
இந்த வகையில் நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கி விட்டன. 2015-16 நிதியாண்டில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் என வங்கிகள் பதிவு செய்திருந்த அறிக்கைகள் 61,361 எனில் இது 2016-17 நிதியாண்டில் 3,61,214ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்ற நிதிசார் நிறுவனங்களின் அறிக்கை என்பது 40,333லிருந்து 94,836ஆகவும், செபி அமைப்பில் பதிவு செய்துள்ள துணை நிறுவனங்களின் எண்ணிக்கை 4,579லிருந்து 16,953ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தப் பெரும் புள்ளிவிவரங்கள் குறித்த ஆய்வின் அடிப்படையில் 2015-16ஆம் ஆண்டை ஒப்பிடும்போது வருமானவரித் துறை கைப்பற்றியுள்ள பணத்தின் மதிப்பு 2016-17இல் இரண்டு மடங்காகியுள்ளது. வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனை மற்றும் கைப்பற்றல் நடவடிக்கைகளின் மூலம் கணக்கில் கொண்டு வரப்படாத ரூ. 15,497 கோடி ஒப்புக் கொள்ளப்பட்டது. இது 2015-16இல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை விட 38% அதிகம் ஆகும். 2016-17ஆம் ஆண்டில் ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட தெரிவிக்கப்படாத வருமானத்தின் மதிப்பு ரூ. 13,716 கோடி. இது 2015-16இல் கண்டுபிடிக்கப்பட்டதை விட 41% அதிகமாகும்.
ஒப்புக்கொள்ளப்பட்ட தெரிவிக்கப்படாத வருமானம், (துறையால்) கண்டுபிடிக்கப்பட்ட தெரிவிக்கப்படாத வருமான ஆகியவை இரண்டும் சேர்ந்து ரூ. 29,213 கோடி ஆகும். இது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளின் மொத்த தொகையில் கிட்டத்தட்ட 18% ஆகும். 2017 ஜனவரி 31 அன்று துவக்கப்பட்ட “தூய்மையான பணத்திற்கான நடவடிக்கை” மூலம் இந்தச் செயல்முறை மேலும் தீவிரமாகும்.
பண நோட்டுகளில் இதுவரை இருந்து வந்த அடையாளம் இல்லாத நிலையை அகற்றுவதற்கான நடவடிக்கை கீழ்க்கண்ட பயன்களையும் தந்துள்ளது:
- வருமானம் குறித்த படிவத்தை பதிவு செய்பவர்கள் இவ்வாறு பதிவு செய்வதற்குக் கடைசி நாளான 2017 ஆகஸ்ட் 5 வரை முதல்முறையாக இவ்வாறு பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை 56 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டில் இவ்வாறு முதன்முறையாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 22 லட்சம் மட்டுமே.
- ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5 2017 வரை நிறுவனமல்லாத வரி செலுத்துவோர் செலுத்திய சுய மதிப்பு வரி (வருமான வரி குறித்த படிவத்தை பதிவு செய்யும்போது தானாகவே முன்வந்து வரி செலுத்துவது) 2016ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் செலுத்தப்பட்ட தொகையை விட 34.25% அதிகமாகும்.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கணக்கில் இல்லாத வருமானத்தைக் கொண்டு வருவது ஆகியவற்றின் விளைவாக நடப்பாண்டில் பெருநிறுவனம் அல்லாதவர்கள் செலுத்திய முன்கூட்டிய வரியின் அளவும் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5 வரையில் சுமார் 42% அதிகரித்திருந்தது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சந்தேகத்திற்கிடமான 2.97 லட்சம் போலி நிறுவனங்களை கண்டறிய வழிவகுத்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சட்டப்படியான அறிவிப்புகள் கொடுக்கப்பட்ட பிறகு முறையான நடவடிக்கைகளுக்குப் பிறகு நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகப் பதிவேடுகளில் இருந்து 2.24 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.
சட்டப்படி இவ்வாறு பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை அவர்கள் செயல்படுத்துவதை நிறுத்தவும், இந்தக் கணக்குகளை முடக்கி வைப்பதற்கும் இந்த நிறுவனங்களில் செயல்பட்டு வந்த இயக்குநர்கள் வேறு எந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் சேரத் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கவும் என பல்வேறு மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த துவக்க ஆய்வில் இருந்து கீழ்க்கண்ட தகவல்கள் பெறப்பட்டன. அது இங்கு குறிப்பிடுவதற்குப் பொருத்தமானதாகும்:
- இவ்வாறு நிறுவனப் பதிவாளரின் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்ட 2.97 லட்சம் நிறுவனங்களில் 28,088 நிறுவனங்கள் 2016 நவம்பர் 9 முதல் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்ட காலம் வரையில் அவற்றின் 49,910 வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ. 10,200 கோடியை வங்கியில் செலுத்தியும், எடுத்தும் பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருந்தன.
- இவற்றில் சில நிறுவனங்கள் 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருந்தன; ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2.314 என்ற அளவிற்கு இருந்தது.
அதே நேரத்தில் வருமான வரித்துறை 1150 போலி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்தது. ரூ. 13,300 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத (கருப்பு) பணத்தை 22,000 பேர் மூலமாக வெள்ளைப் பணமாக கணக்கில் கொண்டுவர இந்த நிறுவனங்கள் உதவி புரிந்துள்ளன.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தைகளில் படிப்படியான கண்காணிப்பு ஏற்பாடுகளை செபி அமைப்பு அறிமுகம் செய்தது. பங்குச் சந்தைகள் 800க்கும் மேற்பட்ட பங்குகளில் இந்த ஏற்பாட்டை அறிமுகம் செய்தன. செயல்பாட்டில் இல்லாத, தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்கள் சூழ்ச்சியாளர்களின் வேட்டைக்காடாக பல நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பயனற்றுக் கிடப்பதை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டு, அந்த நிறுவனங்களைத் துவக்கியவர்களின் டிமாட் கணக்குகள் முடக்கப்பட்டன; பங்குச் சந்தையின் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் அவர்கள் இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பங்குச் சந்தைகளில் பட்டியலில் இருந்த சுமார் 800 நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் தெரியாத நிலையில், இவற்றை மறைந்து போன நிறுவனங்கள் என அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது நிதிசார்ந்த சேமிப்புகளில் முதலீடு செய்வது அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அதற்கு இணையாக ஜிஎஸ்டி அறிமுகத்தின் மூலம் சமீப காலத்தில் பொருளாதாரத்தை மேலும் முறைப்படுத்துவதற்கான முனைப்பும் துவங்கியுள்ளது. இத்தகைய மாற்றத்தைச் சுட்டிக்காட்டும் சில வரம்புகள் கீழே தரப்பட்டுள்ளன:
- நிதிசார்ந்த சேமிப்பு கூடுதலாவது, வட்டி விகிதக் குறைப்பின் பயன்கள் ஆகியவற்றால் பெருநிறுவன பத்திரங்களின் சந்தை பெரும்பலன்களை அறுவடை செய்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் பெருநிறுவன பங்கு சந்தை ரூ. 1.78 லட்சம் கோடிக்கு வளர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டை விட இது ரூ. 78,000 கோடி அதிகமாகும். மூலதனச் சந்தையில் பெறப்படும் இதர ஆதாரங்களையும் சேர்த்துப் பார்த்தால் இது 2016-17இல் ரூ. 2 லட்சம் கோடியாக இருக்கும். அதே நேரத்தில் 2015-16இல் இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி மட்டுமே ஆகும்.
- பொதுவான மற்றும் உரிமைகளுக்கான பங்குகளின் மூலம் துவக்க நிலை சந்தையின் செயல்பாடும் அதிகரித்துள்ளது என்பது இந்தப் போக்கை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைகிறது. 2015-16ஆம் ஆண்டில் ரூ. 24,054 கோடி மதிப்புள்ள பொது மற்றும் உரிமைப் பங்குகள் 87 வெளியிடப்பட்டன. எனினும் 2017-18இன் முதல் ஆறு மாதங்களிலே இவ்வாறு 99 பங்குகள் ரூ. 28,319 கோடி மதிப்பிற்கு வெளியாகியுள்ளன.
- 2016-17இல் பரஸ்பர நிதிகள் பெற்ற தொகை 2016-17ஆம் ஆண்டை விட 155% அதிகரித்துள்ளது. இது 3.43 லட்சம் கோடி என்ற அளவைத் தொட்டுள்ளது. 2016 நவம்பர் முதல் 2017 ஜூன் வரையிலான காலத்தில் பரஸ்பர நிதிகள் பெற்ற தொகையின் அளவு ரூ. 1.7 லட்சம் கோடி ஆகும். ஓராண்டிற்கு முன்பு இதே காலப்பகுதியின் இதன் அளவு ரூ. 9,160 கோடியாக இருந்தது.
- 2016 நவம்பரில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வசூலித்த பிரீமியத் தொகை இரண்டு மடங்குக்கு மேலாக இருந்தது. 2016 நவம்பர் முதல் 2017 ஜனவரி வரையிலான காலத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த தொகை அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலப்பகுதியில் வசூலித்த தொகையை விட 46 சதவீதம் அதிகமாகும். 2017 செப்டம்பருடன் முடிவடைந்த ஆண்டில் பிரீமிய தொகை வசூல் அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை ஒப்பிடும்போது 21 % வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரொக்கப் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய நகர்வைத் தொடர்ந்து 2016-17ஆம் ஆண்டில் டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்துவதில் இந்தியா பெரும் முன்னேற்றத்தைக் கண்டது. இதன் சில போக்குகள் கீழே தரப்பட்டுள்ளன:
- கிரெடிட் கார்டுகளின் மூலமாக 110 கோடி பரிவர்த்தனைகள் ரூ. 3.3 லட்சம் கோடி மதிப்பிற்கும், டெபிட் கார்டுகளின் மூலமாக 240 கோடி பரிவர்த்தனைகள் ரூ. 3.3 லட்சம் கோடி மதிப்பிற்கும் செய்யப்பட்டுள்ளன. 2015-16ஆம் ஆண்டில் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மூலமாக முறையே ரூ. 1.6 லட்சம் கோடி, ரூ. 2.4 லட்சம் கோடி அளவிற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது.
- 2015-16ஆம் ஆண்டில் முன்கூட்டியே பணம் செலுத்தும் முறையில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ. 48,800 கோடி என்பதில் இருந்து 2016-17ஆம் ஆண்டில் ரூ. 83,800 கோடியாக உயர்ந்தது. முன்கூட்டியே பணம் செலுத்தும் முறையில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் முறையே 75 கோடியிலிருந்து 196 கோடியாக அதிகரித்துள்ளது.
- 2016-17ஆம் ஆண்டில் தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை (நெஃப்ட்) ரூ. 120 லட்சம் கோடி மதிப்புடைய 160 கோடி பரிவர்த்தனைகளை கையாண்டது. அதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ. 83 லட்சம் கோடி மதிப்புள்ள 130 லட்சம் கோடி பரிவர்த்தனைகளாக இருந்தது.
பொருளாதாரமானது உயரிய அளவில் ஒழுங்கப்படுத்தப்பட்ட நிலையில், தொழிலாளர் ஈட்டுறுதி நிதி பங்களிப்பு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வசதிகளில் இணைந்து கொள்வது, தங்கள் வங்கிக் கணக்குகளிலேயே ஊதியத்தைப் பெறுவது போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகள் மறுக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் இதன் மூலம் பயன்பெற முடிந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு தொழிலாளர்களுக்கான வங்கிக் கணக்குகளை துவக்குவது, தொழிலாளர் ஈட்டுறுதி நிதி, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக வசதிகளில் சேர்வது ஆகியவற்றால் பயனடைந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது இவற்றில் பயனடைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30% ஆகும். ஊதியத்தை அவர்களின் வங்கி கணக்கிலேயே பெறும் வகையில் சுமார் 50 லட்சம் தொழிலாளர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. இதனை நடைமுறைப்படுத்த உதவும் வகையில் ஊதியம் வழங்குவது குறித்த சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் கல்வீசுவது, ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. அதே போன்று இடதுசாரி தீவிரவாதம் செயல்பட்டு வரும் பகுதிகளில் நக்சல்பாரிகளின் நடவடிக்கைகள் குறைந்தது. இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவாக ரொக்கப் பணம் பெற முடியாத நிலையில் அதன் தாக்கத்தாலேயே இந்தச் சம்பவங்கள் குறைந்திருக்கவும் வாய்ப்புண்டு என கருத்து தெரிவிக்கப்படுகிறது. போலி கரன்சி நோட்டுகளை அவர்கள் பெறுவதும் தடுக்கப்பட்டது. 2016-17ஆம் ஆண்டில் போலி கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டது ரூ. 1000 மதிப்புள்ள நோட்டுக்கள் 1.43 லட்சம் நோட்டுக்களில் இருந்து 2.56 லட்சம் நோட்டுகளாக இருந்தன. 2015-16ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் பண நோட்டு ஆய்வு முறையின் மூலம் போலி ரூ. 500 நோட்டுகள் 10 லட்சம் நோட்டுகளுக்கு 2.4 நோட்டுகளும், போலி ரூ. 1000 நோட்டுகள் 10 லட்சம் நோட்டுகளுக்கு 5.8 நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இது முறையே 5.5 நோட்டுகளாகவும், 12.4 நோட்டுகளாகவும் அதிகரித்தன. அதாவது போலி நோட்டுகளை கண்டறிவது இரண்டு மடங்காக உயர்ந்தது.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில் மேலும் தூய்மையான, வெளிப்படையான, நேர்மையான நிதி அமைப்பை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது என்று கூறுவது தவறாக இருக்காது. இவற்றின் பயன்கள் ஒரு சிலரின் கண்களில் உடனடியாகத் தென்படாமல் போகலாம். எனினும் தாங்கள் வாழ்வதற்கு நியாயமான, நேர்மையான அமைப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து வரும் தலைமுறையினர் 2016 நவம்பருக்குப் பிந்தைய தேசிய பொருளாதார வளர்ச்சியை பெருமையுடன் தான் நோக்குவார்கள்.
(Features ID: 150506)
आगंतुक पटल : 108
Provide suggestions / comments