• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Others

2017 அக்டோபர் 31-ம் தேதி, சர்தார் பட்டேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அவர் ஆற்றிய பங்கைக் குறிக்கும் வகையிலான பெரும் விழிப்புணர்வு இயக்கம்
Posted On: 24 OCT 2017 3:12PM

                                                                                                                                                                                                                                             தீபக் ராஸ்தான்

இந்திய விடுதலைப் போரின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேல், விடுதலைக்குப் பின்னர் தமது உருக்கு போன்ற வலிமையை நாட்டை ஒருங்கிணைப்பதற்கு முழுவீச்சில் பயன்படுத்தியவர். புதிய தேசம் பிறந்தது. அதன் ஒற்றுமையைப் பாதுகாக்கும் சவாலும் வெளிப்படையாக தெரிந்தது. தமது அளப்பரிய திறமையால், அந்தப் பணியை சர்தார் சிறப்பாக நிறைவேற்றினார். அதன் மூலம் ஒருங்கிணைந்த இந்தியாவின் சிற்பி ஆனார். அதனால்,அவர் பிறந்த அக்டோபர் 31-ம் தேதியை நாடு தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடி மகிழ்கிறது.

கடந்த ஆண்டுகளை விட ,இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளில்,நாட்டின் ஒற்றுமையக் காக்க உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்படும். துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு, ஒற்றுமை ஓட்டம், வினாடி வினா போட்டிகள், இந்திய வரலாற்றின் சிக்கலான காலகட்டத்தில் சர்தார் ஆற்றிய பங்கைக்குறிக்கும் வகையிலான கண்காட்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தக் கொண்டாட்டத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் அசைக்கமுடியாத ஆளுமை மிக்க தலைவருக்கு நாடு தனது நன்றியை தெரிவிக்கும் அதே வேளையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரைப்பற்றி எடுத்துரைப்பதும் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமாகும்.

இந்திய அரசியல் ஒருமைப்பாட்டின் தந்தையாக சர்தார் விளங்கினார். இந்திய யூனியனுடன் பல சிறிய சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சியை திறம்பட செய்து முடித்தார். அவரது வழிகாட்டுதல் மற்றும் கண்டிப்பான மத்தியஸ்தம் காரணமாக சிறிய சமஸ்தானங்கள் பல இந்திய யூனியனுடன் இணைந்தன. எண்ணத்தில் பெருமையும், வலிமையும் ஏற்பட மக்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மக்களிடம் பிராந்திய உணர்வு மறைந்து தேசியத்துக்கு வழிவிட்டதுவிடுதலை பெற்ற உடன் ,சர்தார் உழைத்த உழைப்பின் பயனை இன்று இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் பெற்று மகிழ்கிறது.

நாட்டின் தலைநகரில் ,சன்சத் மார்க்கில் உள்ள சர்தார் பட்டேல் சவுக்கில் அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்துவதுடன் தேசிய ஒற்றுமை தினம் தொடங்குகிறது. பின்னர், மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் ஒற்றுமை ஓட்டத்தை பிரதமர் கொடி அசைத்து துவக்கி வைப்பார். இதில் ,15,000 மாணவர்கள், அனைத்து தரப்பு மக்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரபல தடகள வீரர்கள், நாட்டு நலத்திட்ட ஆர்வலர்கள் கலந்து கொள்வர். பி.வி.சிந்து (பாட்மிண்டன்), மித்தலி ராஜ் (கிரிக்கெட்), சர்தார் சிங் ( ஹாக்கி) உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் துவக்க விழாவில் பங்கேற்பார்கள்.

ஒற்றுமை ஓட்டம் தயான் சந்த் மைதானத்தில் இருந்து ,சி-சவுக்கம் வழியாக, இந்தியா கேட் ஷாஜஹான் சாலை- இந்தியா கேட் என 1.5 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெறும். இந்திய விளையாட்டு ஆணையத்தின் அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் ஓட்டத்தை மேற்பார்வையிடுவர்.

ஒற்றுமை உணர்வைப் பரப்பும் வகையில், ரயில்வே, கலாச்சாரம், சுற்றுலா, செய்தி ஒலிபரப்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நலத்துறை அமைச்சகங்கள், மத்திய அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன. வலிமைக்கும், நெஞ்சுறுதிக்கும் பெயர்பெற்ற சர்தாரின் புகழைப்பரப்பும் வகையிலான கண்காட்சிகள், தலைநகரின் இதயப்பகுதியான கன்னோட் பிளேசின் மத்திய பூங்கா, சாணக்கியபுரியில் உள்ள சாந்தி பாதை ஆகிய இடங்களில் நடைபெறும். கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் ஷெனாய் இசை ஒலிக்கப்படும்.

அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்தார் என்ற பெயரில் சிறப்பு திரைப்படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும். சர்தார் பட்டேல் பற்றிய 6 புத்தகங்களின் புதிய பதிப்புகள் வெளியிடப்படும். அவை -புத்தகங்களாக கிடைக்கும்.

இந்தியக் குடியரசின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் பதவிகளை வகித்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுவதை அறிந்தோம். இதனையொட்டி, ,நாடு முழுவதும் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பை பேணிப்பாதுகாக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நடந்த ஒற்றுமை ஓட்டத்தின் போது ,’’ காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், அட்டாக் முதல் கட்டாக் வரையிலும், இமயமலை தொடங்கி பெருங்கடல் வரையிலும் இன்று மூவண்ணக்கொடி பட்டொளி வீசிப் பறப்பதை நாம் காண்கிறோம். நாட்டின் நீள, அகலம் முழுவதும் அதைப் பார்க்கிறோம். இந்தப் பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சாரும்’’ என்று பிரதமர் கூறினார். அதே நாளில் ,பிரகதி மைதான் அருகே சர்தாரின் வாழ்க்கையைக் குறிக்கும் நிரந்தர டிஜிடல் அருங்காட்சியகத்தையும் அவர் துவக்கி வைத்தார். ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த , இந்தியாவின் அனைத்து மாநில மக்களிடம் பிணைப்பை உருவாக்கும் ‘’ ஒரே பாரதம், உயர்ந்த பாரதம் ‘’ இயக்கத்தை பிரதமர் துவக்கினார். சர்தார் பட்டேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். சர்தாரின் அசாதாரமான தொலைநோக்கையும், சாதுர்யமான புத்திக் கூர்மையையும் கொண்டாடும் வகையில், 2015 ஒற்றுமை ஓட்டத்தின் போது, ‘’சாணக்கியருக்குப் பின்னர் சர்தார் பட்டேலால்தான் ஒன்றுபட்ட இந்தியா உருவானது’’ என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி ஆனந்த் அருகே கரம்சத் என்னும் கிராமத்தில் சிறு நிலக்கிழாரின் மகனாக பிறந்தார் வல்லபாய் ஜவேர்பாய் பட்டேல். இளம் வழக்கறிஞராக, அவரது அயராத கடின உழைப்பால், இங்கிலாந்தில் சட்ட மேற்படிப்பு படிக்க பணம் சேர்த்தார். சில ஆண்டுகளிலேயே, தமது கம்பீர தோற்றத்தாலும், பொது நலனுக்காக துணிந்து போராடியதாலும் ,அச்சமற்ற பாரிஸ்டர் என்ற பேரைப் பெற்றார்.

 

1928-ல் வரி உயர்வுக்கு எதிராக, பர்தோலியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய அவர், நீண்ட போராட்டத்துக்கு விவசாயிகள் தயாராக வேண்டும் என்று கூறினார். சர்தாரின் வெற்றிகரமான தலைமை காரணமாக, வரி உயர்வை திரும்பப் பெற அரசு முன்வந்தது. அப்போது நடந்த ஒரு கிராமக்கூட்டத்தில் ,விவசாயி ஒருவர் ,நீங்கள் தான் எங்கள் சர்தார் என்று புகழ்ந்துரைத்தார். பர்தோலி போராட்டம் பட்டேலை  தேசிய அரங்குக்கு கொண்டு சென்றது.

இந்திய ஒற்றுமையின் சிற்பியான அவருக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் ,குஜராத்தின் வதோதரா அருகே, நர்மதை அணையை நோக்கியவாறு 3.2 கி.மீ தொலைவில் உள்ள சாதுபெட் என்னும் தீவில் ,182 மீட்டர் (597 அடி) உயர ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற .சிற்பியான ராம் வி.சுதரின் வடிவமைப்பில், 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு நிலத்தில் உருவாகி வருகிறது. 12 கி.மீ பரப்பில் செயற்கை ஏரி ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டு வருகிறது. சிலையின் கட்டுமானப்பணி ,2014 அக்டோபர் 31-ம் தேதி துவங்கியது.பணிகள் நிறைவடையும்போது,உலகிலேயே மிக உயரமான சிலையாக இது இருக்கும்.

தீபக் ராஸ்தான் மூத்த பத்திரிகைய்யாளர். தற்போது புதுதில்லியில், ஸ்டேட்ஸ்மேன் ஏட்டின் செய்தி ஆலோசகராக உள்ளார். கட்டுரையில் இடம் பெற்றவை அவரது சொந்த கருத்தாகும்.

 

(Features ID: 150371) आगंतुक पटल : 64
Provide suggestions / comments
Link mygov.in
National Portal Of India
STQC Certificate