பிரதமர் அலுவலகம்

வேளாண்மை மற்றும் கூட்டுறவுகள் குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 FEB 2023 12:20PM by PIB Chennai

பட்ஜெட் தொடர்பான இந்த முக்கியமான இணையக் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். கடந்த 8-9 ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும் பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பட்ஜெட்டின் அடுத்த நாளே நீங்கள் செய்தித்தாள்களைப் பார்த்தால், ஒவ்வொரு பட்ஜெட்டும் 'கிராமம், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான பட்ஜெட் என்று அழைக்கப்படுதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். 2014-ம் ஆண்டில், எங்கள் ஆட்சி தொடங்குவதற்கு முன், வேளாண் பட்ஜெட் ரூ. 25 ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்தது. இன்று நாட்டின் வேளாண் பட்ஜெட் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

நண்பர்களே,

சுதந்திரத்திற்குப் பின், நமது வேளாண் துறை நீண்ட காலமாக பற்றாக்குறையில் இருந்தது. மது உணவுப் பாதுகாப்புக்கு நாம் உலகத்தையே நம்பியிருந்தோம். ஆனால் நமது விவசாயிகள் நம்மை தற்சார்புடையவர்களாக ஆக்கியது மட்டுமின்றி, ஏற்றுமதியை இன்று சாத்தியமாக்கியுள்ளனர். அவர்களால்தான் இன்று இந்தியா பல்வேறு வகையான விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. நமது விவசாயிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுவதை எளிதாக்கியுள்ளோம். ஆனால் தற்சார்பு அல்லது ஏற்றுமதி என எதுவாக இருந்தாலும், நமது நோக்கம் அரிசி மற்றும் கோதுமையுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, 2021-22-ம் ஆண்டில், பருப்பு இறக்குமதிக்கு ரூ. 17 ஆயிரம் கோடி செலவிட வேண்டியிருந்தது. மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ரூ.25 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், 2021-22-ம் ஆண்டில், சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு ரூ.1.5 லட்சம் கோடி செலவிடப்பட்டது. இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய சுமார் ரூ. 2 லட்சம் கோடி செலவிடப்பட்டது, அதாவது இந்தப் பணம் நாட்டை விட்டு வெளியேறியது. எனினும், இந்த வேளாண் உற்பத்திப் பொருட்களிலும் நாம் தற்சார்பு அடைந்தால், இந்தப் பணம் நமது விவசாயிகளையும் சென்றடையும். கடந்த சில ஆண்டுகளாக, இந்தத் துறைகளை முன்னெடுத்துச் செல்ல பட்ஜெட்டில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தோம், பருப்பு வகைகளின் உற்பத்தியை ஊக்குவித்தோம், உணவு பதப்படுத்தும் உணவுப் பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.

நண்பர்களே,

வேளாண் துறை தொடர்பான சவால்களை நாம் எதிர்கொள்ளாதவரை, முழுமையான வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியாது. இன்று, இந்தியாவின் பல துறைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, நமது ஆர்வமுள்ள இளைஞர்கள் இதில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர், ஆனால் வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தாலும், வேளாண்மையில் அவர்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. தனியார் கண்டுபிடிப்பு மற்றும் முதலீடு இன்னும் இந்தத் துறையில் இருந்து விலகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப, இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

நண்பர்களே,

பாரதத்தின் முன்முயற்சியால் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சிறுதானியங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுவது என்பது நமது சிறு விவசாயிகளுக்கு ஒரு உலகளாவிய சந்தை தயாராகி வருகிறது என்பதாகும்.

நண்பர்களே,

இந்த பட்ஜெட்டில் கூட்டுறவுத் துறைக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உற்பத்தியில் ஈடுபட்டுள்ள புதிய கூட்டுறவு சங்கங்கள் குறைந்த வரி விகிதத்தின் பலனைப் பெறும்.

நண்பர்களே,

கூட்டுறவுகள் ஏற்கனவே இல்லாத பகுதிகளில், பால் மற்றும் மீன்வளம் தொடர்பான கூட்டுறவுகள் சிறு விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். குறிப்பாக, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கடந்த 8-9 ஆண்டுகளில் நாட்டின் மீன் உற்பத்தி சுமார் 70 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கும், ரசாயனம் சார்ந்த வேளாண்மையை குறைப்பதற்கும் நாங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறோம். இன்றைய இணைய கருத்தரங்கில் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனமார்ந்த நன்றிகள்!

***

(Release ID: 1901943)

SMB/IR/AG/RR



(Release ID: 2017421) Visitor Counter : 26