• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங்  துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு

Posted On: 28 SEP 2024 5:16PM by PIB Chennai

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர்  (ஏவிஜிசி) துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (28.09.2024) நடைபெற்ற வேகாஸ் (விஷுவல் எஃபெக்ட்ஸ்-கேமிங்-அனிமேஷன் சொசைட்டி) மாநாட்டில் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார்.

உலக அளவில் 100-க்கும் அதிகமான  ஹாலிவுட் படங்கள் முதலிய வெளிநாட்டு திரைப்படங்களுக்கான போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் சென்னையில் நடைபெற்றுள்ளன என்று குறிப்பிட்ட அமைச்சர், வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் அனிமேஷன், கேமிங் துறையில் திறமை வாய்ந்த இளைஞர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர்களுக்கு இத்துறை பலவகையான வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதாவும் அமைச்சர் கூறினார்.

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்  மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர்  திறன் மையத்தை மும்பையில் அமைக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை  நினைவு கூர்ந்த அமைச்சர், இத்துறை, இன்று திரைப்படத் தயாரிப்பு, ஓடிடி (ஓவர் தி டாப்) தளங்கள், கேமிங், விளம்பரங்கள், சுகாதாரம், கல்வி, பிற சமூகத் துறைகள் உள்ளிட்ட பல்துறை ஊடகங்கள்  மற்றும் பொழுதுபோக்கு துறையின் முழு சாம்ராஜ்யத்திலும் இன்றியமையாப்  பங்கைக் கொண்டுள்ளது என்றார்.

வேவ்ஸ் எனப்படும் உலக ஆடியோ, வீடியோ மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெறும் என்றார்.

இம்மாநாடு, தொழில்துறை நிபுணர்கள், மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்து, உள்ளடக்க உருவாக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும். குறிப்பாக, உலகளாவிய ஊடகச் சூழலில் இந்தியாவின் பங்கு பற்றி கவனம் செலுத்தும் என்று அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்தார்.

  

 

 

  

***

AD/SMB/PKV/ KV



(Release ID: 2059853) Visitor Counter : 17


Link mygov.in