சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மண்டபம் கடற்பகுதியில் இந்திய கடலோரக் காவல்படை, வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 17.74 கிலோ தங்கம் பிடிபட்டது
Posted On:
09 FEB 2023 7:19PM by PIB Chennai
மண்டபம் கடற்பகுதியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துடன் இந்திய கடலோரக் காவல்படை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கம் (நிகர மதிப்பு சுமார் ரூ.10.5 கோடி) பிடிபட்டது.
சென்னை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்தின் நுண்ணறிவு தகவலின் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல்படை, மண்டபத்தில் கூட்டுக்குழு ஒன்றை பணியில் ஈடுபடுத்தியது. இந்தக் குழு மன்னார் வளைகுடாவில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கை ஏதேனும் உள்ளதா என கடந்த இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தது. பிப்ரவரி 8-ம் தேதி இரவு இந்தக்குழு, சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்றை கண்டுபிடித்தது. விசாரணையிலிருந்து தப்புவதற்காக அந்தப் படகு அதிவேகத்தில் சென்றதை சந்தேகித்த கூட்டுக்குழு, அதனை விரட்டிச் சென்று பிடித்தது. படகில் சோதனையிட்ட போது, சட்டவிரோத கடத்தல் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணையில் அந்த பொருள் கடலில் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்திய கடலோரக் காவல்படைக் குழு, குறிப்பிட்ட ஒரு பகுதியில் கடலில் மூழ்கி சோதனை நடத்தியதில், 17.74 கிலோ தங்கம் கொண்ட மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, மீன்பிடி படகில் வந்த மூன்று பேர் பிடித்துச் செல்லப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கைக்காக மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
****
AP/PKV/UM/KPG
(Release ID: 1897793)
Visitor Counter : 124