சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதே சான்றாகும்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்
Posted On:
09 JAN 2023 5:36PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதே சான்றாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய மக்கள் தகவல் தொடர்பகம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்து விழாப் பேருரையாற்றிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், “ஜி-20 உச்சிமாநாட்டிற்கு தலைமைத்துவத்தைப் பெற்றிருப்பதன் மூலம் உலக அளவில், இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைந்து வருகிறது என்றும் உலகிற்கே வழிகாட்டும் நிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம் தேசம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார். ஜி-20 தலைமைத்துவத்தின் தொடர் கூட்டங்களில் ஒன்றிரண்டு சென்னையில் விரைவில் நடைபெறவுள்ளது.
விடுதலை இந்தியாவின் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள நாம், விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலர் அறியப்படாமல் இருந்து வருவதை அறிந்து அவர்களைக் கண்டறிந்து போற்றும் விதமாக இந்தப் புகைப்படக் கண்காட்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 75 நாட்களில் 75 அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்பு நிகழ்வான ‘ஸ்வராஜ்’ ஒளிபரப்பப்பட்டது. அதில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஒண்டிவீரன் சிறப்புத் தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு பல்வேறு துறைகளில் உத்வேகத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது. பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ - பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தையை படிக்க வைப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்புடன், கல்வி அறிவும் அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்காக வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு மத்திய அரசின் நலத் திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி அளவிலான மக்கள் பணம் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்பட்டது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தற்போது இந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டிற்கு முந்தைய காலக்கட்டத்தில் பேசத் தயங்கிய பல்வேறு விஷயங்கள் இன்று பேசப்பட வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக தற்போது அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மருந்தகம் மூலம் ஒரு ரூபாய்க்கு சானடரி நாப்கின் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் இணைந்து படிப்பதற்கு தயங்கிய நிலையில், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் அதிக அளவில் பெண்கள் அங்கு கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது. மகளிர் சக்தியை மேம்படுத்த முத்ரா திட்டத்தின் மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரும் 2047-ஆம் ஆண்டில் நம் நாடு சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் உலகிற்கே வழிநடத்தும் வல்லரசாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விழாவில் தலைமை உரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா.அண்ணாதுரை, மாணவர் சமுதாயத்தினருக்கு மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக தெரிவிக்க வேண்டிய பொறுப்புணர்வு உள்ளது என்றார். சென்னை அகில இந்திய வானொலி மாநில செய்திப் பிரிவு தயாரித்துள்ள ஜி-20 இந்திய தலைமைத்துவம் பொருளடக்கம் கொண்ட புத்தகத்தை மத்திய இணை அமைச்சர் வெளியிட்டார்.
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிக்கான பரிசுகளை மத்திய அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர் திரு ஜெ காமராஜ் வரவேற்புரையாற்றினார். விழா நிறைவில் கள விளம்பர அலுவலர் திரு முரளி நன்றியுரை ஆற்றினார்.
------
(Release ID: 1889805)
Visitor Counter : 129