சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1340 கோடி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார்
Posted On:
25 DEC 2022 5:20PM by PIB Chennai
மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு கடந்த ஆண்டு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையைப் பொறுத்து சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றை புதுச்சேரி அரசு வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 5 கோடியாகும். தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தல், மருந்தியல் பூங்கா உருவாக்குதல், போதை மறுவாழ்வு மையம் நிர்மாணித்தல், தொற்று நோய்களுக்காக 200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டுதல் மற்றும் புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவாரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.க. லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுச்சேரி அரசின் நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
**************
SM/DL
(Release ID: 1886530)
Visitor Counter : 129