57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் ‘ஹனுமன் அன்ஷ்’ திரைப்படம் திரையிடப்பட்டது. நீம் கரோலி பாபாவின் ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை தொடர்பான ஆழமான கேள்விகளுக்கான விடைகள், நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலேயே இருக்கலாம் என்ற கருத்தை இப்படம் எடுத்துரைக்கிறது.
இப்படத்தை இயக்கிய டாக்டர் விஷால் சதுர்வேதி, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், தமது தாயார் புதிய விஷயங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்ள ஊக்கம் அளித்ததாகக் குறிப்பிட்டார். மனிதர்கள் தங்களுக்குள்ளேயே ஆன்மிகத் தேடல் செய்ய வேண்டும் என்பதே இப்படத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு திரைப்படத்தின் கதை, உண்மையான வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போதுதான் மக்கள் அந்தக் கதையுடன் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
இப்படம், வழக்கமான ஒரு சாதாரண இந்தித் திரைப்படத்தின் செலவில் பத்தில் ஒரு பங்கு அளவிலேயே உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். எளிமையான தயாரிப்பு முறையே படத்தின் ஆன்மிகக் கருத்துக்கு ஏற்றதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
பாடகர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கும், நடிகர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் போதிய வாய்ப்பு வழங்கியதாக அவர் கூறினார்.
பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறிய பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்ய வேண்டும் என்ற கருத்து தமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இப்படம் மூன்று பாகங்களைக் கொண்ட திரைப்படத் தொடரின் முதல் பாகமாகும். லட்சுமிநாராயணன் என்ற மனிதரின் வாழ்க்கைப் பயணமே கதையின் அடிப்படை. அவரது ஆன்மிக வளர்ச்சியையும், நீம் கரோலி பாபாவாக அவர் உயர்ந்ததையும் படம் விவரிக்கிறது. உலகைப் புரிந்துகொள்வதற்கு முன்பு நம்மை நாமே புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இப்படத்தின் முக்கியச் செய்தியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343017®=3
****
SK/PLM/RJ