இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2026 3:46PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று நடைபெற்ற விழாவில், காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பான காசி தமிழ் சங்கமம் 5.0-ஐத் தொடங்கி வைத்தார்.
ஐந்தாவது காசி தமிழ் சங்கமத்தில், குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்களை வெளியிட்டார்.
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ஆழமான பண்பாட்டு, மொழியியல் மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் போற்றும் வகையில் நடைபெறும் இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள், தொழில்துறையினர், ஆன்மிகப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1,400 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான காசி தமிழ் சங்கமம், தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்வதுடன், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டின் காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருளாக, ‘திருக்குறள் பயில்வோம் – திருக்குறள் அப்யாஸ் கரேன்’ (Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் திருக்குறளில் பொதிந்துள்ள காலத்தால் அழியாத அறநெறிகள், மனிதநேயச் சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் நெறிகளை குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, ஐஐடி மெட்ராஸ், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உத்தரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, உத்தரப் பிரதேச தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு அனில் ராஜ்பர், உத்தரப் பிரதேச முத்திரை மற்றும் பதிவுத் துறை இணைப் பொறுப்பிலான அமைச்சர் திரு ரவீந்திர ஜெய்ஸ்வால், ஆயுஷ் துறையின் இணை அமைச்சர் திரு தயா சங்கர் மிஸ்ரா, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் இணை அமைச்சர் திரு ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா, மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் திருமதி தீப்தி கர் முகர்ஜி, பாரதிய பாஷா சமிதியின் தலைவர் திரு சாமு கிருஷ்ண சாஸ்திரி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் திரு காமகோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி, ஆன்மிகப் பெரியோர்கள், அறிஞர்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களுடன் இணைந்து, வாரணாசியில் உள்ள புனித ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ கால பைரவர் திருக்கோயிலுக்குச் சென்று, பாபா விஸ்வநாதர் மற்றும் பாபா கால பைரவரைத் தரிசித்து வழிபட்டார்.
ஐந்தாவது காசி தமிழ் சங்கம நிகழ்வில் குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது:
நம்முடைய காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவில் மேடையில் அமர்ந்திருக்கும் என் பாசத்திற்கினிய யோகிஜி அவர்களுக்கும் எனக்கும் இடையிலான நட்பு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலானது என்பதை மகிழ்ச்சியோடு உங்கள் மத்தியில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன்.
1998ஆம் ஆண்டு, நானும் அவரும் மக்களவையில் அருகருகே அமர்ந்திருப்போம். அவருடைய பேச்சை நான் செவிமடுப்பேன். என்னுடைய பேச்சை அவர் கேட்பார். அப்போது அருகருகே அமர்ந்திருந்ததன் மூலம் மலர்ந்த அந்த நட்பு, அன்றைக்கு எப்படி இருந்ததோ, அதேபோல இன்றைக்கும் தொடர்கிறது; என்றென்றும் தொடரும்.
தமிழ்நாட்டிற்கு காமராஜர் அவர்கள் எப்படியோ, அதேபோல உத்தரப் பிரதேசத்திற்கு யோகி அவர்கள் திகழ்கிறார்.
வாழ்க்கையில் ஒருமுறையாவது காசியைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்திருக்கும் மகத்தான விருப்பமாகும்.
அந்த வகையில், இன்று தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருகை தந்துள்ள எனது அருமைச் சகோதர, சகோதரிகளே, மாணவச் செல்வங்களே, இங்கு பெருந்திரளாகக் கூடியிருக்கும் ஆன்மிகப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து எழும் அன்பு கலந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.
காசி தமிழ் சங்கமத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலும், தற்போது நடைபெறும் ஐந்தாவது ஆண்டு நிகழ்விலும் காசியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம நிகழ்வில் பங்கேற்றதையும் பெருமையாகக் கருதுகிறேன்.
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களின் அழைப்பின் பேரில், சோட்டி தீபாவளி நாளன்று அயோத்தியில் நடைபெற்ற பிரம்மாண்டமான தீபோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்றது, எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஒரு இனிய அனுபவமாகும்.
யோகிஜி அவர்களின் தலைமையில், அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமல்ல, ராம ராஜ்ஜியமே மலர்ந்திருக்கிறது. எந்த நேரத்திலும், இரவு வேளையில்கூட, ஒரு பெண் எவ்வித அச்சமோ, அச்சுறுத்தலோ இன்றி தனியாகச் சுதந்திரமாக நடந்து செல்லக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளது. அதுவே ராம ராஜ்ஜியத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
ஒருகாலத்தில் எத்தகைய சூழலில் இருந்த உத்தரப் பிரதேசம், இன்று யோகிஜி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பான மாநிலமாக உருமாறியிருக்கிறது. அதற்காக யோகிஜி அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவீதப் பங்களிப்பை வழங்கும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உயர்ந்து நிற்கிறது. நாட்டின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
உத்தரப் பிரதேச மக்களின் முழுமையான ஆதரவுடன், 2029ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை, யோகிஜி அவர்களின் தலைமையில் உத்தரப் பிரதேசம் எட்டும் என்பதில் நான் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்று போற்றப்பட வேண்டிய ஒரே ஒரு நகரம் உண்டென்றால், அது காசி மட்டும்தான். காசியின் ஒவ்வொரு அணுவிலும், இங்கு வீசும் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் சிவபெருமானின் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அத்தகைய தனித்துவம் வாய்ந்த புனித நகரம் காசி.
தமிழ் மக்களின் இதயத்தில் காசிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஏனென்றால், காசிக்கு வந்து பாபா விஸ்வநாதரைத் தரிசிக்கும்போதுதான் நமது ஆன்மிக உணர்வு முழுமை பெறுகிறது என்ற ஆழமான நம்பிக்கை தமிழர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நிறைந்திருக்கிறது.
காசி நகரத்திற்கும் தமிழர்களுக்கும் இடையே நிலவுகின்ற ஆழமான, தொன்மையான உறவைப் பற்றி நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார்கள்.
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டுக்கோட்டை நகரத்தார் இங்கு வந்து தங்கி, காசியின் பண்பாட்டு வாழ்வோடு தங்களை இணைத்துக்கொண்ட வரலாற்றை அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து வந்த நெசவாளர்கள், இங்கு கைத்தறி நெசவுத் தொழிலை வளர்த்து, புகழ்பெற்ற பனாரஸ் பட்டுத் துணிகளின் உற்பத்திப் பெருக்கத்திற்கும் ஏற்றுமதிக்கும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, உலகில் இனி இவரைப் போன்ற ஒரு மகத்தான கவிஞர் தோன்றுவாரா என்று நாம் வியந்து போற்றுகின்ற மகாகவி பாரதியார், தமது வாழ்நாளின் முக்கியமான ஒரு பகுதியைக் காசி மாநகரில்தான் கழித்திருக்கிறார்.
மகாகவி பாரதியார் தமது கவிதையில்,
“காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்”
என்று பாடியிருக்கிறார்.
காசியில் பேசப்படும் உரையை காஞ்சியிலேயே கேட்கும் வகையில் தொழில்நுட்பம் வளர வேண்டும் என்ற அவரது தொலைநோக்குப் பார்வை, இன்று பாரத தேசம் முழுவதும் நனவாகி, நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது.
காலத்தைக் கடந்து நிற்கும் பாரதியின் கனவு இன்று நனவாகி வருவது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கிறது.
இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்று சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்று நானும் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால், அது ஒருபோதும் உண்மையல்ல.
நாடு முழுவதும் பல்வேறு சிறிய சிறிய அரசுகளும், ராஜ்ஜியங்களும் இருந்திருக்கின்றன. தமிழகத்தையே எடுத்துக்கொண்டாலும், அது என்றைக்கும் ஒரே நாடாக இருந்ததில்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு எனப் பல்வேறு பகுதிகளாகவும், பல்லவ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பல்வேறு பிரதேசங்களாகவும் பிரிந்து இருந்திருக்கிறது. கொங்கு நாடு கூட ஒரே மன்னரின் கீழ் ஆளப்படாமல் 24 தனித்தனி நாடுகளாகப் பிரிந்து இருந்திருக்கிறது.
இவ்வாறு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு பிரிவுகள் இருந்தபோதிலும், இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஓர் அடிப்படையான பண்பாட்டு, ஆன்மிகப் பிணைப்பு நம்மிடையே இருந்து வந்திருக்கிறது.
அதனால்தான், இத்தனை வேறுபாடுகளைக் கடந்து, நாம் அனைவரும் ஒரே பாரத தேசம் என்று பெருமையுடன் கூறுகிறோம். நாம் அனைவரும் ஒரே தர்மத்தைப் பின்பற்றுகின்றவர்கள்; ஒரே தர்மத்தின் அடிப்படையில் வாழ்கின்றவர்கள். அதுவே நமது பாரதத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது.
இந்த அற்புதமான வரலாற்றுத் தொடர்ச்சியும், பாரதத்தின் ஒற்றுமை உணர்வும் இன்றும் என்றும் நிலைத்துத் தொடர வேண்டும் என்பதற்காகத்தான், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் காசி தமிழ் சங்கமம் உருவாக்கப்பட்டது.
பாரதத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை மேலும் வலுப்படுத்தவும், தமிழுக்கும் காசிக்கும் இடையிலான தொன்மையான பண்பாட்டுப் பிணைப்பை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவுமே இந்த உன்னதமான காசி தமிழ் சங்கமம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காசி தமிழ் சங்கமம் இன்று ஒரு மகத்தான தேசிய இயக்கமாகவே வளர்ந்திருக்கிறது.
இந்த ஐந்தாவது காசி தமிழ் சங்கமத்தின் தனிச்சிறப்பு என்னவென்று கேட்டால், திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் உரிய முதன்மையையும் பெருமையையும் வழங்கி, அவற்றை தேசிய அளவில் முன்னிறுத்தியிருப்பதுதான். இதுவே இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் மகத்தான வெற்றியும் பெருமையுமாகும்.
தமிழர்களின் பண்பாடு, தமிழ் மொழியின் தொன்மை, அதன் இலக்கிய வளம், அதன் உயரிய சிந்தனைகள் ஆகியவற்றை உலகறியச் செய்திட நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் என்பதை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்தவர் நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
நமது உயரிய விருந்தோம்பல் பண்பையும், உலகளாவிய சகோதரத்துவ உணர்வையும் உலகமே அறிந்துகொள்ளும் வகையில், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
கணியன் பூங்குன்றனார் இயற்றிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற இரண்டு வரிகளை அவர் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தபோதுதான், தமிழர்களின் உயரிய விருந்தோம்பல் பண்பையும், உலகளாவிய மனிதநேயச் சிந்தனையையும் உலகம் மீண்டும் உணர்ந்தது.
அப்போது பிரதமர் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை எடுத்துரைத்தார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நமது பாரத தேசத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகளாவிய சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் பறைசாற்றியிருக்கிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
இதுவே தமிழின் பெருமை; பாரதத்தின் பண்பாட்டுப் பெருமை!
காசி தமிழ் சங்கமத்தின் முதல் பதிப்பு, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் வரலாற்று, பண்பாட்டு மற்றும் ஆன்மிக உறவுகளை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. மறைந்துபோயிருந்த அந்தத் தொன்மையான பிணைப்பையும் சகோதரத்துவ உணர்வையும் மீண்டும் புதுப்பித்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றது.
இந்த ஐந்தாவது பதிப்பு, நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, ஒரு சிறப்பான இலக்கை நம் முன்னால் வைத்திருக்கிறது. அதுதான் “திருக்குறள் பயில்வோம்” என்ற உன்னதமான கருத்தாக்கம்.
இந்த ஆண்டின் காசி தமிழ் சங்கமத்தின் தனிச்சிறப்பே திருக்குறளையும், திருவள்ளுவரையும் தேசிய அளவில் மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான். திருக்குறளைப் படிப்போம், பயில்வோம், அதன் உயரிய அறநெறிகளை நமது வாழ்க்கையில் கடைப்பிடிப்போம் என்பதே இந்தப் பதிப்பின் மையச் செய்தியாகும்.
திருக்குறள் என்பது தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் மட்டுமே சொந்தமான நூல் அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உரிய ஓர் உயரிய வாழ்வியல் பொக்கிஷம். மொழி, இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து, உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய உலகப் பொதுமறையாகத் திருக்குறள் திகழ்கிறது.
அதன் அறநெறிகளையும், வாழ்வியல் சிந்தனைகளையும் ஒவ்வொருவரும் கற்று, உணர்ந்து, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதுவே திருக்குறள் பயில்வோம் என்ற இந்த முயற்சியின் உயரிய நோக்கமாகும்.
திருவள்ளுவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறுகிறார். அதாவது, பிறப்பால் எல்லா உயிர்களும் சமமானவர்களே; பிறப்பின் அடிப்படையில் எவருக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்ற உயரிய சமத்துவச் சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்குப் பறைசாற்றியிருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாத ஒரு திருக்குறள் உண்டு. அது,
**“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.”**
என்ற குறளாகும்.
யார் எதைச் சொன்னாலும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதில் பொதிந்துள்ள உண்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே உண்மையான அறிவு என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
இந்த உயரிய சிந்தனையை நாம் மறந்துவிடக் கூடாது. பிறர் கூறுவதை எல்லாம் ஆராயாமல் ஏற்றுக்கொள்வதால்தான் பலரும் நம்மைத் தவறாக வழிநடத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, எதையும் பகுத்தறிந்து, உண்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழினம் தனது அறிவாற்றலாலும், உயரிய சிந்தனைகளாலும் காலத்தைக் கடந்து சிறந்து விளங்க முடியும்.
தமிழ்நாட்டில்கூட திருக்குறளை இவ்வளவு பரவலாகக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமா என்றால், அனேகமாக இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
காசி தமிழ் சங்கமத்தின் முதல் பதிப்பிலேயே திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டாவது பதிப்பில் மேலும் 16 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இன்று, வெளிநாட்டு மொழிகள் உட்பட மொத்தம் 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.
தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், திருவள்ளுவரின் உலகப் பொதுமறைக்கும் இதைவிடப் பெரிய பெருமையை வேறு என்ன வழங்க முடியும்?
மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் இணைந்து தமிழுக்குச் செய்துள்ள இந்த மகத்தான பணியை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இதில் இரண்டு கர்மயோகிகளின் பங்களிப்பு மகத்தானது. ஒருவர் நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்; மற்றொருவர், மக்கள் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள். இவர்கள் இருவரும் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் ஆற்றியுள்ள பணி என்றும் போற்றத்தக்கது.
இன்று அனைவருக்கும் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. 2047-ஆம் ஆண்டில் பாரதம் உலகின் உன்னத நாடாகவும், வல்லரசாகவும், உலகிற்கே முன்னோடியாகவும் உயர்வதைத் தடுக்கின்ற சக்தி உலகில் இனி எதுவும் இல்லை என்பது அனைவருக்கும் புரிந்திருக்கிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த இலக்கை அடைவதைத் தடுக்க எந்த நாட்டாலும் முடியாது.
வளர்ச்சியடைந்த நாடாக நாம் உயரும்போது, வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே நமது இலக்காகக் கொண்டிருக்கக் கூடாது. நமது பாரம்பரியப் பண்பாட்டுப் பெருமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லி, நமது மாண்புமிக்க நாகரிக மரபுகளைப் பாதுகாத்து, உயர்ந்த நாகரிகத்தைக் கொண்ட நாடாகப் பாரதம் தொடர்ந்து திகழ வேண்டும். அதற்கு நமது தொன்மையான பாரம்பரியப் பெருமைகளை நாம் ஒருபோதும் கைவிடக் கூடாது.
அந்த வகையில், நமது காசி தமிழ் சங்கமம் ஒரு மகத்தான பணியைத் தொடங்கியிருக்கிறது. அந்தப் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று உலகம் முழுவதும் பல்வேறு நிச்சயமற்ற சூழல்கள் நிலவி வருகின்றன. சில சுயநல நாடுகளின் செயல்பாடுகளால் உலகில் போர்கள், மோதல்கள், பொருளாதார நெருக்கடிகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் எனப் பல்வேறு சவால்களை மனித இனம் இன்று எதிர்கொண்டு வருகிறது.
சித்தாந்தங்களால் உலகம் பிளவுபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், உழைக்கும் இந்தியா உலகிற்கு ஒரு மகத்தான செய்தியை வழங்கியிருக்கிறது. அதுதான், ‘வசுதைவ குடும்பகம்’ – உலகமே ஒரு குடும்பம் என்ற உன்னதச் சிந்தனை. ‘சர்வே பவந்து சுகினः’ – அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய விருப்பமும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய கணியன் பூங்குன்றனாரின் உன்னதமான உலகளாவிய மனிதநேயச் சிந்தனையும் உலகெங்கும் பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த உயரிய சிந்தனைகளை மனிதநேயத்தோடு நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்.
அந்த வகையில், நமது காசி தமிழ் சங்கமத்தின் மகத்தான பணியும் இந்த உயரிய நோக்கத்துடன் இணைகிறது.
யோகம், ஆயுர்வேதம், சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்வியல் முறை, ஆன்மீகச் சிந்தனைகள் உள்ளிட்ட பாரதத்தின் அறிவுக் களஞ்சியம் இந்த உலகிற்குப் பெரும் நன்மைகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில் தமிழ்நாட்டிலிருந்து 1,400 பேர் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள், ஆன்மீகப் பணியாளர்கள் எனச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்பது இந்த நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
இந்த இளைய பெருமக்களிடத்தில் நான் ஒன்றை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாருக்குப் பிறகும், தமிழகம் மீண்டும் தேசியத்தின் பக்கம் வர வேண்டும் என்ற வேட்கையை உங்கள் மனங்களில் ஏந்தி, காசி விஸ்வநாதப் பெருமானின் சந்நிதியில் அந்த உறுதியை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
தமிழகம் என்றென்றும் தேசியத்தின் பக்கம்தான் என்பதை மீண்டும் நாம் நிரூபிக்க வேண்டும். இந்தப் பணிவான வேண்டுகோளை உங்கள் முன் வைப்பதில் நான் மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதை நீங்கள் நிச்சயம் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பிரியமுள்ள சகோதர, சகோதரிகளே!
ஒருவரது தாய்மொழி, தாய், தாய் மதம் ஆகிய மூன்றும் மாற்றத்தக்கவை அல்ல. ஒவ்வொருவருக்கும் தாயின் மீதும், தாய்மொழியின் மீதும், தாய் மதத்தின் மீதும் மகத்தான பற்று இருப்பது இயல்பானது. அதுவே இயற்கை. அதுவே உண்மை.
ஆனால், என் தாயின் மீது எனக்குப் பற்று இருக்கிறது என்பதற்காக, மற்றவர்களின் தாயைப் பழித்துப் பேசுவது நாகரிகமாகுமா? அது மனிதப் பண்பாகுமா? அல்லது சிறந்த கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்குமா? நிச்சயமாக இல்லை.
அதேபோல, நமது தாய்மொழியை நாம் போற்ற வேண்டும்; பெருமையுடன் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில், பிறருடைய தாய்மொழிகளை ஒருபோதும் பழிக்காமலும், தூற்றாமலும், அனைத்து மொழிகளையும் மதிக்கும் பெருந்தன்மை கொண்டவர்களாக நாம் திகழ வேண்டும்.
நான் சந்திக்கின்ற பல்வேறு வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் ஒரு கேள்வி எழுப்பப்படுவது உண்டு.
எங்கள் நாட்டில் இரண்டு மொழிகள்தான் பேசப்படுகின்றன; மூன்று மொழிகள்தான் பேசப்படுகின்றன. ஆனாலும், எங்களால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. ஆனால், பாரதத்தில் இத்தனை மொழிகள் பேசப்பட்டாலும், எப்படி ஒரே நாடு என்ற உணர்வுடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்? என்று அவர்கள் கேட்பார்கள்.
அவர்களுக்கு நான் அளிக்கும் ஒரே பதில், மகாகவி பாரதியாரின் வரிகள்தான்:
“செப்புமொழி பதினெட்டுடையாள் – எனில்
சிந்தனை ஒன்றுடையாள்.”
இதுதான் பாரதத்தின் சிறப்பு. நாம் பல்வேறு மொழிகளைப் பேசினாலும், அனைத்து மொழிகளும் நமக்கு ஒரே உயரிய சிந்தனையைத்தான் போதிக்கின்றன. அதுதான் இந்த மண்ணின், பாரதத் திருநாட்டின் மகத்தான தர்மம். அந்த அறநெறியும், உயரிய பண்பாடும் நமது எல்லா மொழிகளிலும் பொதிந்துள்ளன.
அதனால்தான் பாரதம் இன்று ஒரே நாடாக, ஒற்றுமையுடன் திகழ்கிறது. என்றும் பாரதம் ஒன்றுதான்!
கங்கை நதிக்கரையிலிருந்து நான் உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர விரும்புகிறேன்.
இமயம் முதல் குமரி வரை, கங்கை முதல் காவிரி வரை, குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை நமது பயணம் ஒன்றே; நமது இலக்கு ஒன்றே. அதுதான் ஒன்றே பாரதம், உன்னத பாரதம்!
நமது மொழிகள் பலவாக இருக்கலாம்; ஆனால் நமது சிந்தனைகள் அனைத்தும் ஒன்றே. நமது கலாச்சாரங்கள் பலவாக இருக்கலாம்; ஆனால் நமது நாகரிகம் ஒன்றே. நமது வழிபாட்டு முறைகள் பலவாக இருக்கலாம்; ஆனால் நமது தேசிய உணர்வு ஒன்றே.
இன்று சேது முதல் இமயம் வரை, கங்கை முதல் காவிரி வரை, குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை நமது பயணம் ஒன்றே; நமது இலக்கு ஒன்றே. அந்த இலக்கு ஒன்றே பாரதம், உன்னத பாரதம் என்பதுதான்.
இந்தக் கங்கை நதிக்கரையிலிருந்து நான் உங்களிடம் மற்றொரு செய்தியையும் பகிர விரும்புகிறேன்.
ஒரு மாதத்திற்கு முன்பாக, நமது மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளுடன் நான் ஒரு கலந்துரையாடலை நடத்தினேன். அந்தக் கலந்துரையாடலின் மூலம் ஒரு விஷயம் எனக்குத் தெளிவானது. பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் சிந்தனையிலும் இந்த இலக்கு இருந்து வருகிறது.
கரைபுரண்டு ஓடும் கங்கையின் நீர் நமது காவிரியை வந்தடையும் நாளை பாரத தேசம் நிச்சயம் உருவாக்கும். இந்த நாட்டின் புண்ணிய நதிகள் அனைத்தையும் நாம் இணைக்கும் காலம் வரும்.
அந்த முயற்சியின் முதற்கட்டமாக, கோதாவரி நதியின் நீரைக் காவிரிக்குக் கொண்டுவரும் திட்டம் அமையும்.
கங்கையின் காவிரி நதியுடனான இந்தச் சங்கமத்தைத்தான் நான் இன்று காசி தமிழ் சங்கமமாகப் பார்க்கிறேன். இந்த உயரிய கனவு விரைவில் நனவாகும். நாடெங்கும் பசுமை செழிக்கும் நிலை உருவாகும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற மகத்தான சிந்தனை நம்மைவிட்டு ஒருபோதும் அகலாமல் நிலைத்திருக்க வேண்டும். அந்த உயரிய எண்ணம் என்றும் நம் உள்ளங்களில் நிலைத்திருக்க வேண்டும் என்று காசி விஸ்வநாதப் பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்கி, அனைவரும் வாழ்க! வளமுடன் வளர்க!
நன்றி! வணக்கம்!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343027®=3&lang=1
***
TV/RJ