PIB Backgrounder
azadi ka amrit mahotsav

காமராஜர் துறைமுக விரிவாக்கம்: சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் மேலும் அதிகரிக்கும்

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 1:49PM by PIB Chennai

இந்தியாவின் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டின் காமராஜர் துறைமுகத்தில் இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 20 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாள முடியும்.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் கடல் சார் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த சரக்குப் போக்குவரத்து அளவில் சுமார் 95 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் சுமார் 70 சதவீதமும் கடல் வழியாக நடைபெறுகின்றன.

இந்தியத் துறைமுகங்களில் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து 2019-20 முதல் 2025-26 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 6.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் அளவு 2025-26-ஆம் ஆண்டில் 2.57 கோடி டிஇயு-ஆக உயர்ந்துள்ளது. டிஇயு என்பது 20 அடி நீளமுள்ள ஒரு சரக்குப் பெட்டகத்தைக் குறிக்கும் அளவீடாகும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தப் போக்குவரத்து 4 கோடி டிஇயு-ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களின் சரக்குகளைக் கையாளும் திறன் 2014-15-ம் ஆண்டில் ஆண்டுக்கு 87.3 கோடி டன்னாக இருந்தது. இது 2025-26-ம் ஆண்டில் 172.8 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சி:

சென்னைக்கு வடக்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ளது. முன்பு எண்ணூர் துறைமுகம் என அழைக்கப்பட்ட இது, இந்தியாவின் 12 முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாகும்.

நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், திரவ இயற்கை எரிவாயு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, சரக்குப் பெட்டகங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் இங்கு கையாளப்படுகின்றன.

இந்தத் துறைமுகத்தின் முதல் சரக்குப் பெட்டக முனையம் 2018 மார்ச் மாதத்தில் வணிகப் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் ஆண்டு கையாளும் திறன் 8 லட்சம் டிஇயு ஆகும். 2025-26-ஆம் ஆண்டில் சுமார் 7 லட்சம் டிஇயு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது அதன் மொத்தத் திறனில் சுமார் 88 சதவீதமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்துறைமுகத்தின் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து ஆண்டுக்கு சராசரியாக 9.9 சதவீதம் வளர்ந்துள்ளது.

2025-26-ம் ஆண்டில் காமராஜர் துறைமுக நிறுவனம் சுமார் ரூ.1,280 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.924 கோடியாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த சரக்குப் போக்குவரத்து ஆண்டுக்கு சராசரியாக 13.64 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

18 மீட்டர் ஆழம் கொண்ட கடல் வழிப்பாதை:

கப்பல்கள் பாதுகாப்பாகத் துறைமுகத்துக்குள் நுழையவும் வெளியேறவும் கடலின் ஆழத்தை அதிகரிக்கும் வகையில் மணல், வண்டல் மண் உள்ளிட்டவை அகற்றப்படுகின்றன.

காமராஜர் துறைமுகத்தில் ஆறாவது கட்ட ஆழப்படுத்தும் பணி 2026 ஜூலை மாதத்தில் முடிக்கப்பட்டது. இதன் மூலம் கடல் வழிப்பாதையின் செயல்பாட்டு ஆழம் 18 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 1,70,000 டன் சரக்குகளைச் சுமக்கும் திறன் கொண்ட கப்பல்களைக் கையாள முடியும். இந்த வசதியைப் பெற்ற இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் என்ற சிறப்பையும் காமராஜர் துறைமுகம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு விசாகப்பட்டினம் துறைமுகம் இந்த வசதியைப் பெற்றிருந்தது.

புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்:

புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் 111 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். இதன் நீளம் 900 மீட்டராகவும், கப்பல்கள் நிறுத்தப்படும் தளத்தின் அகலம் 30 மீட்டராகவும் இருக்கும். கடல் ஆழம் 18 மீட்டராகவும், கப்பல்கள் நிறுத்தப்படும் பகுதியில் நீரின் ஆழம் 20 மீட்டராகவும் இருக்கும்.

400 மீட்டர் நீளம் கொண்ட, அதிகபட்சம் 24,346 டிஇயு சரக்குப் பெட்டகங்களைச் சுமந்து செல்லும் பெரிய கப்பல்களையும் இந்த முனையத்தில் கையாள முடியும்.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தொழில் நிறுவனங்களுக்கு இந்த முனையம் பயனளிக்கும். சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஓசூர், பெங்களூரு, ஸ்ரீ சிட்டி, திருப்பதி ஆகிய தொழில் மையங்களுக்கு இது உதவியாக இருக்கும்.

ரூ.4,288 கோடியில் திட்டம்:

இந்தத் திட்டம் அரசு-தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்படும். இதற்கான மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு ஜிஎஸ்டி உட்பட ரூ.4,288.26 கோடியாகும். கடலை ஆழப்படுத்தும் பணிக்காக காமராஜர் துறைமுக நிறுவனம் தனியாக சுமார் ரூ.450 கோடி செலவிடும்.

திட்டத்தின் ஒப்பந்தக் காலம் 40 ஆண்டுகளாக இருக்கும். கட்டுமானப் பணிகள் 48 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு ஆண்டுகளுக்குள் முதல் கட்டப் பணிகள் முடிக்கப்படும். 25-வது மாதத்தில் வணிகச் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டப் பணிகள் நான்காவது ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும்.  முனையம் 49-வது மாதத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

கட்டுமானப் பணிகளின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முனையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு சுமார் 800 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய முனையம் இந்தியாவின் வளர்ந்து வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத்தைக் கையாள காமராஜர் துறைமுகத்தின் திறனை அதிகரிக்கும். துறைமுக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சரக்குப் போக்குவரத்தும் வர்த்தகத் தொடர்புகளும் வலுப்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342992&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343058) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Malayalam