கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 பழமையான வெண்கலச் சிலைகளை தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்தது தொல்லியல் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 7:14PM by PIB Chennai

இந்தியாவின் பழமையான கலை, கலாச்சாரச் சொத்துகளை மீட்கும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக, வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 பழமையான வெண்கலச் சிலைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை, தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.

புதுதில்லியில் உள்ள தரோஹர் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தச் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில் 2 சிலைகள் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருந்தும், ஒரு சிலை நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இருந்தும் மீட்கப்பட்டவை.

மீட்கப்பட்ட சிலைகளின் விவரங்கள்:

1. சுந்தரர், பரவை நாச்சியார் சிலை: இது 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசு காலத்து வெண்கலச் சிலையாகும். கள்ளக்குறிச்சி வட்டம் விராச்சோலபுரம் சிவன் கோவிலைச் சேர்ந்த இந்தச் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

2. கண்ணப்ப நாயனார் சிலை: இது நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரசாமி கோவிலுக்குச் சொந்தமான சோழர் காலத்து வெண்கலச் சிலையாகும். மூன்று வளைவுகளுடன், நிற்கும் தோற்றத்தில், வலது கையைத் தனது கண்ணை நோக்கி உயர்த்திய நிலையில் கண்ணப்ப நாயனார் காட்சியளிக்கிறார். நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இருந்து இது மீட்கப்பட்டது.

3. சோமாஸ்கந்தர் சிலை: சிவன், உமையம்மை உருவங்களைக் கொண்ட இந்த 12-ம் நூற்றாண்டு சோழர் காலத்து வெண்கலச் சிலை, தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் ஆலத்தூர் ஸ்ரீ விஸ்வநாதர் சிவன் கோவிலைச் சேர்ந்தது. அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

இந்தச் சிலைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை தலைமை இயக்குநர் திரு யதுபீர் சிங் ராவத், துறையின் பிற பிரதிநிதிகளுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவின் கலாச்சாரச் சொத்துகளை மீட்டு, அவற்றை உரிய இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இது முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, இழந்த பாரம்பரியச் சொத்துகளைக் கண்டறிதல், மீட்டல், தாயகம் கொண்டு வருதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342181&reg=3&lang=1

(Release ID: 2342181)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342319) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese