பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

அசாமின் டோலூவில் ரூ. 2,014 கோடி மதிப்பீட்டில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 3:27PM by PIB Chennai

அசாம் மாநிலம் டோலூவில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தால் ரூ. 2,014 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அசாமின் கச்சார் மாவட்டத்தில் அமைந்துள்ள டோலூ, பராக் பள்ளத்தாக்கின் முக்கியப் பகுதியாகத் உள்ளது. தேயிலைத் தோட்டங்கள், வேளாண் சார்ந்த தொழில்கள், சுற்றுச்சூழல், கலாச்சார சுற்றுலாவிற்கு இப்பகுதி புகழ்பெற்றதாகும்.

புதிய விமான நிலையத்தில் 12,351 சதுர மீட்டர் பரப்பளவில் முனையக் கட்டிடம் அமைய உள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் 800 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகவும், பயணிகளுக்கான நவீன வசதிகள், நிலையான பசுமைக் கட்டிடக் கோட்பாடுகளின் படியும், எதிர்கால விரிவாக்கத் திறனுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ-320 ரக விமானங்கள் இயக்கத்திற்கு ஏற்ற வகையில் 2,705 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்ட கோட்-4சி தரத்திலான ஓடுபாதை அமைக்கப்பட உள்ளது. 6 ஏ-320 ரக விமானங்களை நிறுத்தும் திறன் கொண்ட புதிய விமான நிறுத்துமிடம், பிரத்யேக நிறுத்துமிடம் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தின் மூலம், தெற்கு அசாம், அண்டை மாநிலங்களின் அருகிலுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவைகளை டோலூ பசுமை விமான நிலையம் பூர்த்தி செய்யும். இந்தத் திட்டம் தற்போதைய விமான நிலையக் கட்டமைப்பில் உள்ள நெரிசலைக் கணிசமாகக் குறைப்பதுடன், வர்த்தகம், சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, வடகிழக்கு இந்தியாவை தேசிய, சர்வதேச வளர்ச்சிப் பாதைகளுடன் இணைக்கும் உலகத் தரம் வாய்ந்த நுழைவாயிலாக மாற்றும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341175&reg=3&lang=1

***

TV/PD/PS

 


(வெளியீட்டு அடையாள எண்: 2341229) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Assamese , Gujarati , Telugu , Kannada