இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 9:41AM by PIB Chennai
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு, காசி இடையேயான பழம்பெரும் கலாச்சார, மொழி, நாகரிகப் பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமத்தின் 5-வது பதிப்பு 2026 நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது. 'திருக்குறள் பயில்வோம் - திருக்குறள் அப்யாஸ் கரேன்' என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், திருக்குறளின் காலத்தால் அழியாத போதனைகள் மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உத்தரப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள 1,000 உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய மாணவர் பங்கேற்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியின் அடிப்படையில் ஒரு மாணவரைப் பரிந்துரைக்கும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள், ஆங்கிலத்தில் இணையவழி கல்வி வழிகாட்டுதல் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து ஒரு மாத கால ஆராய்ச்சி மேற்கொள்ளும் தகுதியுள்ள மாணவர்களுக்கு ரூ. 10,000 உதவித்தொகை வழங்கப்படும். பேராசிரியர் வழிகாட்டுதலுடன், 4 முதல் 10 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து ஒவ்வொரு மாணவரும் 1 மணி நேரம் உரையாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள், திருக்குறள் அறிஞர்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்குத் திருக்குறள் கற்பிக்க உள்ளனர். தேசிய புத்தக அறக்கட்டளை சார்பில் வாரணாசி பள்ளிகளில் வாசிப்புப் பழக்கம் குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், கைவினைக்கலைஞர்கள், பெண்கள், ஆன்மீகத் தலைவர்கள் ஆகிய 7 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1,400 பிரதிநிதிகள் 7 குழுக்களாகப் பிரிந்து 8 நாள் பயணமாக வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்குச் செல்ல உள்ளனர். காசி விஸ்வநாதர் கோயில், சாரநாத், ராம்நகர் கோட்டை, திரிவேணி சங்கமம், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் ஆகிய இடங்களுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முன்னோர்கள் இல்லம், கேதார் படித்துறை, காசி மடம் ஆகிய தமிழ் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இடங்களையும் இவர்கள் பார்வையிட உள்ளனர்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் திருக்குறளை நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் விதமாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பன்மொழிச் செயலி, ஒலிப்புத்தகங்கள், அனிமேஷன் குறும்படங்கள் வெளியிடப்பட உள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் தகவல் பலகைகளிலும் மொழிபெயர்ப்புடன் கூடிய திருக்குறள் இடம்பெற உள்ளது. 2022 முதல் 2025 வரை நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் நான்கு பதிப்புகளின் தொடர்ச்சியாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் திருக்குறள் குறித்த தேசிய மாநாடும், கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளன.
கலந்துரையாடல்கள், கற்றல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மக்களை ஒன்றிணைத்து, தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான பரஸ்பரப் புரிதலை மேலும் வலுப்படுத்தவும், மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தவும் இந்த முன்னெடுப்பு உதவுகிறது.
திருக்குறளை மையமாகக் கொண்டு, நடத்தப்படும் 5-வது பதிப்பு, வழக்கமான நிகழ்வுகளைக் கடந்து, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், இளம் தலைமுறையினரிடையே இந்த ஒன்றிணைப்பை விரிவுபடுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341040®=48&lang=1&_gl=1
***
SS/PD/PS