இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 6:52PM by PIB Chennai
நேபாளப் பிரதமர் திரு பலேந்திர ஷா, இன்று (23.11.2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, 2026 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்துள்ள நேபாளப் பிரதமருக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அவரது முயற்சிகள் வெற்றிபெறவும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த திருமதி திரௌபதி முர்மு, இக்கட்டான நேரத்தில் இந்தியா, நேபாளத்திற்கு விரைவான மனிதாபிமான உதவிகளையும், தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கியதைக் குறிப்பிட்டார். மீட்பு, மறுசீரமைப்புப் பணிகளிலும் தொடர்ந்து இந்தியா துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார்.
பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளையும், பேரிடர் மேலாண்மையையும் இணைந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். பழைமையான நாகரிகப் பாரம்பரியம், மக்களிடையேயான ஆழமான நட்புறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா – நேபாளம் இடையிலான உறவு அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின்போது அறிவிக்கப்பட்ட கூட்டு தொலைநோக்குத் திட்டம், குறிப்பாக இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு, கலாச்சாரப் பரிமாற்றம், புத்தொழில் நிறுவனங்கள், டிஜிட்டல் சேவைகள், விண்வெளி, புத்தாக்கம் ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கு இது தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் என்றும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340498®=3&lang=1
(Release ID: 2340498)
****
SK/PLM/SH