இந்தியாவின் 57-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கூடு’ என்ற தமிழ்த் திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ஜோயல் விஜய், தயாரிப்பாளர்கள் ராஜேஷ் மேனன், கணேஷ் எம், நடிகர் வி. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று படத்தின் கதையையும் அதன் சுற்றுச்சூழல் கருத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் வாசாத்தியைப் பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டபோது, கிராமத்தில் உள்ள மின்மாற்றிக்குள் முட்டைகளுடன் சிட்டுக்குருவியின் கூடு இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, கிராமத் தலைவர் அகத்தியன் வழிகாட்டுதலின்படி, வேளாண்மைப் பட்டதாரியான கதிர் தலைமையில் கிராம மக்கள் அந்தப் பறவைகளைக் காப்பாற்ற 35 நாட்கள் மின்சாரம் இல்லாமல் வாழ முடிவு செய்கின்றனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும், கூட்டைப் பாதுகாக்கப் பல தியாகங்களைச் செய்கின்றனர்.
இயக்குநர் ஜோயல் விஜய் பேசுகையில், இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல எனவும் எண்ணற்ற உயிரினங்களுக்கும் சொந்தமானது என்பதை உணர்த்துவதே படத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். பிற உயிரினங்களுடன் இணைந்து வாழ்வதும், அவற்றைப் பாதுகாப்பதும் மனிதர்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் வி. ஜெயப்பிரகாஷ் பேசுகையில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் உடனடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
தயாரிப்பாளர் ராஜேஷ் மேனன் பேசுகையில், உணர்வுபூர்வமான கதையையும் எளிமையான வசனங்கள் மூலம் சுற்றுச்சூழல் கருத்தையும் இப்படம் எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டார். 35 நாட்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்வதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் சுவாரசியமாகப் படத்தில் எடுத்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பை பிரவீன் குமார் எஸ். ஒருங்கிணைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340487®=3&lang=1
(Release ID : 2340487)
****
SK/PLM/SH