இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 5:32PM by PIB Chennai
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்சுமியுடன் இணைந்து யோகோசுகாவில் உள்ள ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை கடற்படைத் தளத்தை இன்று (நவம்பர் 18, 2026) பார்வையிட்டார். முன்னதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சென்ற அவருக்குச் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மொகாமி ரகப் பல்துறை போர்க்கப்பலான ‘ஜேஎஸ் நடோரி’யை இரு அமைச்சர்களும் பார்வையிட்டனர். சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் ஆழமான நம்பிக்கையையும், பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் இந்தியா-ஜப்பான் இடையேயான வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பு பிரதிபலிப்பதாக திரு ராஜ்நாத் சிங் தமது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டோக்கியோவில் இந்தியத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அவர், மேற்கு ஆசியச் சூழலால் எழுந்த சவால்களுக்கு மத்தியிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.48,000 கோடியிலிருந்து ரூ.1.80 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி ரூ.600 கோடியிலிருந்து ரூ.38,000 கோடியாகவும் வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஊழலுக்கு எதிரான அரசின் சகிப்புத்தன்மையற்ற கொள்கையால் நலத்திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதையும் அவர் எடுத்துரைத்தார்.
நவம்பர் 19-ம் தேதி டோக்கியோவில் நடைபெறும் 4-வது இந்தியா-ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான (2+2) பேச்சுவார்த்தையில் திரு ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு தோஷிமிட்சு மொடெகி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்சுமியுடன் இணைந்து தலைமை தாங்கவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337997®=3&lang=1
****
SK/SE/RJ