PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ஆரோக்கியமான இந்தியாவிற்கு இயற்கை மருத்துவ சிகிச்சை

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 10:03AM by PIB Chennai

மருந்துகளற்ற, குறைந்த செலவிலான மருத்துவ முறையான இயற்கை மருத்துவம், உணவு முறை, விரதம், நீர், மண், பிடித்துவிடுதல், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள உதவுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் துணையோடு உடலின் உயிர் சக்தியை மேம்படுத்தி நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் இது வழிவகை செய்கிறது. 1945 நவம்பர் 18 அன்று புனேவில் உள்ள அகில இந்திய இயற்கை சிகிச்சை அறக்கட்டளையின் வாழ்நாள் தலைவராக மகாத்மா காந்தி பொறுப்பேற்றதைப் போற்றும் வகையில், 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 அன்று தேசிய இயற்கை மருத்துவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் 9-வது பதிப்பு 2026 நவம்பர் 18 அன்று கர்நாடகாவின் நாகமங்கலாவில் உள்ள மத்திய யோகா & இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘இயற்கை சிகிச்சை, ஆரோக்கியமான இந்தியா’ என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.

இயற்கை மருத்துவத்தின் அறிவியல் அடித்தளத்தை நம்பகமான ஆராய்ச்சி, தரமான கல்வி, நவீன மருத்துவத்துடன் பொறுப்பான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்று மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் புதிய வளாகமான நிசர்க் கிராமத்தை 2024 பிப்ரவரி 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.213.55 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், 250 படுக்கைகள் கொண்ட நாட்டின் முதல் தேசிய இயற்கை மருத்துவ மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் & இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கும் மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன. 2026-27 கல்வியாண்டில் இங்கு இளநிலை இயற்கை மருத்துவம் & யோகா அறிவியல் படிப்பிற்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர அரசின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் உதவியுடன் புனே மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக 20 படுக்கைகள் கொண்ட நிசர்க் ஆரோக்கிய சாதனா மையம் என்ற முழுமையான யோகா, இயற்கை மருத்துவத்திற்கான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1978 முதல் செயல்பட்டு வரும் மத்திய யோகா & இயற்கை மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் 22 பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஹரியானாவின் ஜஜ்ஜார், கர்நாடகாவின் நாகமங்கலா ஆகிய இடங்களில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளும், ஒடிசாவின் கோர்டா, சத்தீஸ்கரின் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் புதிய ஆராய்ச்சி நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 2024 ஏப்ரல் 1 நிலவரப்படி, நாடு முழுவதும் 1,663 படுக்கைகளுடன் கூடிய 35 மருத்துவமனைகள், 95 மருந்தகங்களில் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றுக்காக வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 1,82,945 ஆக இருந்த நிலையில், 2024-ம் ஆண்டில் 6,44,387 ஆக அதிகரித்துள்ளது. ‘இந்தியாவில் குணமடைவோம்’ என்ற முன்முயற்சியின் கீழ் வெளிநாட்டினருக்காகப் பிரத்யேக ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 5 பிராந்திய மருத்துவ மதிப்பு சுற்றுலா மையங்களில் ஆயுஷ் மையங்களும் இடம்பெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337257®=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337666) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Bengali , Gujarati