கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், கன்னடம் மற்றும் துளு மொழித் திரைப்படங்களின் பன்முகத்தன்மை சிறப்பிக்கப்படுகிறது. கன்னடப் பிரிவில், கடம்பர் காலத்துப் பின்னணியில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: எ லெஜண்ட் அத்தியாயம் 1’ திரைப்படம், இந்தியன் பனோரமாவின் பொதுத் திரைப்படப் பிரிவிலும் சர்வதேசப் போட்டிப் பிரிவிலும் இடம்பெற்றுள்ளது. பி. சேஷாத்ரி இயக்கிய ‘ரூபி-கியூப்’ திரைப்படம், மூன்று தலைமுறை குடும்ப உறவுகளின் உணர்வுப்பூர்வமான சிக்கல்களை எடுத்துரைக்கிறது.
மேலும், வங்கியால் சொத்து கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிநபர் நடத்தும் சட்டப் போராட்டத்தை டாக்டர் பிரதீப் கெஞ்சனூரு இயக்கிய ‘தி ஹக் ஆஃப் எம்டினஸ்’ ஆவணப்படமும், இழப்பு மற்றும் நினைவுகளை அபிஷேக் இயக்கிய ‘உளிதித்து சம்பிகே மாத்ரா’ குறும்படமும் சித்தரிக்கின்றன. துளு மொழிப் பிரிவில், பாரம்பரிய மூலிகை மருத்துவ அறிவைப் பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்ணின் கதையைக் கூறும் அனுபமா சாரதி இயக்கிய ‘பிலி சன்னே’ திரைப்படம் இவ்விழாவில் உலக அளவில் முதன்முறையாகத் திரையிடப்படவுள்ளது.
இத்துடன், புகழ்பெற்ற கன்னட இயக்குநர் திரு கிரீஷ் காசரவள்ளியின் 50 ஆண்டுகால திரைப்படப் பயணத்தைக் கௌரவிக்கும் வகையில், நவம்பர் 21-ம் தேதி சிறப்புக் கலந்துரையாடல் அமர்வு நடைபெறவுள்ளது. நமன் ராமச்சந்திரன் ஒருங்கிணைக்கும் இந்த அமர்வில், ‘கடஷ்ரத்தா’, ‘தபரன கதே’, ‘தாயி சாஹேபா’, ‘தீபா’ உள்ளிட்ட அவரது படைப்புகளில் பதிவான சமூக அநீதி மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337475®=3&lang=1
****
SK/SE/SH