வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய–பெலாரஸ் அரசுகளுக்கிடையிலான ஆணையத்தின் 12-வது அமர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 6:33PM by PIB Chennai

வணிகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார ஒத்துழைப்பு குறித்த இந்திய-பெலாரஸ் அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் 12-வது அமர்வு, இன்று புதுதில்லியில் நடைபெற்றது.  வர்த்தகம், தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தலைமையிலான இந்தியக் குழுவினரும், பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மாக்சிம் ரிஷென்கோவ் தலைமையிலான அந்நாட்டுக் குழுவினரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார, முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்தியா, பெலாரஸ் இடையிலான நீண்டகால நட்புறவை இரு தரப்பினரும் பாராட்டியதுடன், இந்த உறவை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தொடர்ச்சியான பரிமாற்றங்கள், நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான செயல்பாடு, வணிக நிறுவனங்களின் கூடுதல் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

கூட்டத்தில் பேசிய திரு ஜிதின் பிரசாதா, இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார, உற்பத்தித் திறன்களையும், அவை பெலாரஸ் நாட்டின்  வணிகங்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த வழங்கும் வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். மேலும், கூட்டு முயற்சிகள், தொழில்நுட்பக் கூட்டணிகள், முதலீட்டு வாய்ப்புகள், வணிகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயுமாறு அவர் வணிக நிறுவனங்களை ஊக்குவித்தார்.

அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் 12-வது அமர்வுக்கு இடையே, புதுதில்லியில் 'இந்திய–பெலாரஸ் வணிக, முதலீட்டு மன்றக்’ கூட்டமும் இன்று நடைபெற்றது. இரு நாடுகளின் வணிகப் பிரதிநிதிகள், தொழில் சங்கங்கள், அரசு நிறுவனங்களை ஒன்றிணைத்த இந்த நிகழ்வு, நேரடியாகக் கலந்துரையாடவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், வர்த்தகம், முதலீடு, வணிக ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் ஒரு களத்தை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337070&reg=3&lang=1  

***

SK/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2337330) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati