இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 1:39PM by PIB Chennai
வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர், பாரம்பரிய பழங்குடியின மக்களின் நில உரிமைகளை அங்கீகரிப்பதற்காக 2006-ம் ஆண்டு வன உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. 2006 டிசம்பர் 29 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்ற இச்சட்டம், 2007 டிசம்பர் 31 முதல் நடைமுறைக்கு வந்தது. பல தலைமுறைகளாக வனங்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சமூகத்தினரின் தனிநபர், சமூக உரிமைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் இச்சட்டத்தைச் செயல்படுத்துகிறது. தற்போது 20 மாநிலங்கள் & ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இச்சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026 ஆகஸ்ட் 31 நிலவரப்படி, இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெறப்பட்ட சுமார் 54 லட்சம் கோரிக்கைகளில் 43.56 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 238 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான வன நிலங்களுக்கு 25.42 லட்சம் உரிமைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 24.18 லட்சம் தனிநபர் பட்டாக்களும், 1.24 லட்சம் சமூக வன உரிமைப் பட்டாக்களும் அடங்கும். இவற்றில், சத்தீஸ்கர் 5,34,068 பட்டாக்களுடனும், ஒடிசா 4,73,936 பட்டாக்களுடனும், மத்தியப் பிரதேசம் 2,89,461 பட்டாக்களுடனும் முன்னிலையில் உள்ளன. இப்பட்டாக்களை வருவாய்த் துறை ஆவணங்களில் பதிவு செய்வதன் மூலம், பிரதமரின் கௌரவ நிதித் திட்டம் உள்ளிட்ட வேளாண்மை, மீன்வளம், வாழ்வாதாரத் திட்டங்களின் பலன்களைப் பயனாளிகள் எளிதில் பெற முடிகிறது.
கிராம சபைகள் மூலமாக வன உரிமைகளுக்கான கோரிக்கைகளைச் சரிபார்த்து, துணைக் கோட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின் பேரில் மாவட்ட அளவிலான குழு இறுதி முடிவெடுக்கிறது. தனிநபர் குடியிருப்பு, சாகுபடி நிலங்களுக்கு அதிகபட்சம் 4 ஹெக்டேர் வரை பட்டா வழங்கப்படுகிறது. திருமணமான தம்பதியினருக்கு இருவரது பெயரிலும் கூட்டாகப் பட்டா பதிவு செய்யப்படுகிறது. இந்த வன உரிமைப் பட்டா நிலங்களை விற்கவோ, மாற்றவோ முடியாது; ஆனால் வாரிசுதாரர்களுக்குச் சென்றடையும். மேலும், வனங்களிலிருந்து பழங்குடியினர் பாரம்பரியமாகச் சேகரிக்கும் மூங்கில், தேன், மூலிகைகள் உள்ளிட்ட சிறு வன விளைபொருட்கள் மீது அவர்களுக்கு முழு உரிமை உண்டு. மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்விட உரிமைகளுக்காக 2026 ஜனவரி 5 அன்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு, ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 11 பழங்குடியினப் பிரிவினருக்கு வாழ்விட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினர் பெருமை இருவார விழாவின் போது தேசிய வன உரிமை டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கிராம சபையில் விண்ணப்பிப்பது முதல் டிஜிட்டல் கையொப்பமிட்ட பட்டா பெறுவது வரையிலான அனைத்துப் பணிகளும் ஒரே தளத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசின் தர்தி ஆபா பழங்குடியினர் கிராம மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், மாநில, மாவட்ட அளவில் வன உரிமைப் பிரிவுகளை அமைக்க 2 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. கிராம சபைகள் தயாரிக்கும் சமூக வன வள மேலாண்மைத் திட்டம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.15 லட்சமும், தொழில்நுட்ப உதவிக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. 2026 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெங்களூரு, கொல்கத்தா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட மண்டல ஆய்வு மாநாடுகள் மூலம், அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை வருவாய் ஆவணங்களில் விரைந்து பதிவு செய்யவும், பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336824®=3&lang=1&_gl=1
***
SS/PD/SH