வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எகிப்து சென்றடைந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 9:55AM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இருதரப்பு வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார். இந்தியா – எகிப்து இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவதும், தொழில்துறை ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் இப்பயணத்தின் நோக்கமாகும். அவருடன் 130-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இந்தியக் குழுவும் சென்றுள்ளது.

பயணத்தின் தொடக்கமாக, கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் போர் நினைவிடத்தில் இந்திய வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். அங்கு நினைவுகூரப்பட்டுள்ள 4,000 வீரர்களில் 3,727 பேர் இந்தியர்கள். அவர்களில் சுமார் 2,000 பேர் முதல் உலகப் போரிலும், 1,700 பேர் இரண்டாம் உலகப் போரிலும் உயிரிழந்தவர்கள்.

தொடர்ந்து, எகிப்தில் உள்ள இந்தியச் சமூகத்தினரைச் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாக அவர் கூறினார். எகிப்தில் செயல்படும் சுமார் 70 இந்திய நிறுவனங்கள், 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து, அந்நாட்டு மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பயணத்தின்போது, இந்தியா – எகிப்து கூட்டு வர்த்தகக் குழுவின் 7-வது கூட்டம், கூட்டு வர்த்தக கவுன்சில் கூட்டம், வர்த்தக மன்றம் ஆகியவை நடைபெற உள்ளன. எகிப்து வர்த்தக அமைச்சர் திரு முகமது ஃபரீத் சலேவுடன் திரு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும், எகிப்தின் மூத்த அமைச்சர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், ஆப்பிரிக்க ஏற்றுமதி – இறக்குமதி வங்கி, புத்தொழில் அமைப்புகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் மூலம் வர்த்தகம், முதலீடு, தொழில்துறை ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336423&reg=3

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336603) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati