பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இந்தியா உலகின் முன்னணி நாடாக மாற வேண்டும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 11:52AM by PIB Chennai

மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடாக மட்டுமின்றி, அவற்றைத் தானே உருவாக்கி, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு, உலக அளவில் முன்னிலை வகிக்கும் நாடாக இந்தியா வளர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற சேதம் இல்லாத சோதனைத் தொழில்நுட்பம் தொடர்பான 36-வது ஆண்டு மாநாட்டில் காணொலி வாயிலாகப் பேசிய அவர், பாதுகாப்புத் துறையின் தயார்நிலையையும் தற்சார்பையும் வலுப்படுத்த இத்தொழில்நுட்பங்கள் அவசியம் என்றார்.

பொருட்கள், உதிரிபாகங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தாமல் அவற்றின் குறைபாடுகளைக் கண்டறிவதே சேதம் இல்லாத சோதனை தொழில்நுட்பமாகும் என கூறிய அவர், இதற்கு அல்ட்ராசவுண்ட், எக்ஸ்-ரே பரிசோதனைகளை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

மேம்பட்ட ஆய்வுக் கருவிகள், சிறப்பு உணர்திறன் கருவிகள், மென்பொருள்கள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். சோதனை முடிவுகள் துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்றும், ஏவுகணைகள், விமானங்கள், கப்பல்கள், விண்வெளி வாகனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு தரம் மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது பொருளாதார இலக்கு மட்டுமல்ல எனவும் நாட்டின் பாதுகாப்புக்கான உத்திசார் தேவையும் ஆகும் என்றும் அவர் கூறினார். உள்நாட்டு விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், ஏவுகணைகள், ரேடார் தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்றுகள் என அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோட்டிக்ஸ், மேம்பட்ட உணர் திறன் கருவிகள் ஆகியவற்றை ஆய்வுத் தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கான ஆராய்ச்சியில் அதிக முதலீடுகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் அரசு, தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336449&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336490) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati