மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

பகவான் பிர்சா முண்டா பிறந்தநாள் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 11:22AM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முக்கியத் தலைவர்கள் இன்று (15.11.2026) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மேலும், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பழங்குடியினர் கௌரவ தினமான இன்று, பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பிர்சா முண்டாவின் தியாகத்தையும் போராட்டத்தையும் நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர் இந்த நிகழ்வையொட்டி, குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"துணிச்சலுக்கும் போராட்டத்துக்கும் அடையாளமாகத் திகழ்ந்தவர் பகவான் பிர்சா முண்டா. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் பழங்குடியின மக்களை ஒன்றுதிரட்டி அவர் வழிநடத்தினார். அவர்களின் உரிமைகள், கண்ணியம், தனித்துவமான அடையாளம் ஆகியவற்றுக்காகப் போராடினார்.

அவர் விடுத்த 'உல்குலான்' என்ற எழுச்சிக்குரல், சுதந்திரம், நீதி ஆகியவற்றுக்கான போராட்டத்தின் வலிமையான குரலாக மாறியது.

பழங்குடியினர் பெருமை தினத்தில், அவரது அழியாத புகழையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் நாட்டின் வளர்ச்சியிலும் பழங்குடியின மக்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளையும் போற்றுகிறோம்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் பழங்குடியின மக்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளைக் காண்பது பெரும் ஊக்கமளித்தது." என்று கூறியுள்ளார்.

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15-ம் தேதி பழங்குடியினர் பெருமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் மிக முக்கியப் பங்கு வகித்தனர். பல்வேறு புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் நாட்டின் விடுதலைக்கு அவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கினர்.

பழங்குடியின மக்களின் வளமான வரலாறு, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டாடுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை மக்களிடையே ஒற்றுமை, பெருமித உணர்வு ஆகியவற்றை வளர்ப்பதோடு, இந்தியாவின் சுதந்திரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பழங்குடியின மக்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகளை அனைவரும் அறிந்துகொள்ளவும் உதவுகின்றன.

பழங்குடியினர் பெருமை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்ணா ஸ்தலுக்கு வருகை தந்த முக்கியப் பிரமுகர்களை வரவேற்கும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336442&_gl=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336489) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada