இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 7:13PM by PIB Chennai
மண்வளத்தைப் பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் சமச்சீரான உரப் பயன்பாடு அவசியமாகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் 2010 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பாஸ்பேட் & பொட்டாஷ் (பி&கே) உரங்களின் 28 வகைகளுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர் ஆகிய ஊட்டச்சத்துகளின் அளவிற்கு ஏற்ப காரீப், ரபி பருவங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மானிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்களது மண்வளம், பயிர்த் தேவைகளுக்கு ஏற்ப குறைந்த விலையில் உரங்களைப் பெற முடிகிறது.
சர்வதேச அளவில் உரம், மூலப்பொருட்களின் விலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, 2026-27 ரபி பருவத்திற்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அரசு 2026 நவம்பர் 11 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2026 அக்டோபர் 1 முதல் 2027 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் இத்திட்டத்திற்காக சுமார் ரூ.62,370.02 கோடி நிதி (உத்தேசமாக) ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-26 ரபி பருவத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.37,952.29 கோடியை விட 64% அதிகமாகும். இதன்படி கிலோ ஒன்றிற்கு நைட்ரஜனுக்கு ரூ.94.21, பாஸ்பரஸுக்கு ரூ.66.11, பொட்டாசியத்திற்கு ரூ.2.38, சல்ஃபருக்கு ரூ.10.42 என மானிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முக்கிய உரங்களின் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி வழக்கமான மானியத்திற்கும் மேலாக, ஒரு மூட்டை டிஏபி உரம் ரூ.1,350 என்ற நிலையான விலையில் கிடைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட், இறக்குமதி செய்யப்படும் மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கும் இச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஏபி உரத்திற்கு மாற்றாக சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க சரக்குப் போக்குவரத்து மானியமும், அம்மோனியம் சல்பேட் உரத்திற்கான மானியமும் ரபி பருவத்தில் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டில் சல்பர், சல்பியூரிக் அமில உற்பத்தியாளர்களுக்கு உண்மையான கொள்முதல் செலவில் 20% மானியம் வழங்கும் சிறப்புத் தொகுப்பும் செயல்படுத்தப்படுகிறது.
2022-23 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், ரூ.2.79 லட்சம் கோடிக்கும் அதிகமான மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய உரங்களின் மொத்த இருப்பு 2025 நவம்பர் 10 அன்று 173.46 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2026 நவம்பர் 10 நிலவரப்படி சுமார் 35.6% அதிகரித்து 235.21 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதில் யூரியா 103.12 லட்சம் டன்னாகவும், டிஏபி 28.65 லட்சம் டன்னாகவும், என்பிகே 60.87 லட்சம் டன்னாகவும், எம்ஓபி 20.08 லட்சம் டன்னாகவும், எஸ்எஸ்பி 22.49 லட்சம் டன்னாகவும் இருப்பில் உள்ளன. உர மானிய நடவடிக்கைகள் மூலம் இடுபொருள் செலவைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335577®=3&lang=1
***
TV/PD/SH