பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெங்களூருவில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 4:17PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரூ.15,600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.11.2026) தொடங்கி வைத்தார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உள்கட்டமைப்பு வசதிகளும் சிறந்த போக்குவரத்து இணைப்புகளும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை என்றார். இவை வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் அதிகரிப்பதுடன், வறுமையை ஒழிக்கும் முயற்சிகளுக்கும் உதவுகின்றன என்று கூறினார். இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெங்களூரு மெட்ரோவின் புதிய பிங்க் வழித்தடத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், இதனால் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், பிற கல்வி நிறுவனங்கள், முக்கிய வர்த்தக, தொழில்நுட்ப மையங்களுக்கான பயணம் எளிதாகும் என்று தெரிவித்தார். 2014-ல் 17 ஆக இருந்த பெங்களூரு மெட்ரோ வழித்தட நீளம் தற்போது 100 கிலோ மீட்டரைக் கடந்துள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம் தில்லி, மும்பை பெருநகரப் பகுதிகளுக்கு அடுத்தபடியாக 100 கிலோ மீட்டர் மெட்ரோ சேவையைக் கொண்ட மூன்றாவது நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கர்நாடகத்தில் மங்களூரு, சாமராஜநகர், சிக்கமகளூரு, சக்லேஷ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், நான்கு அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள், இரட்டை ரயில் பாதை, மின்மயமாக்கல் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோவாவையும் கர்நாடகத்தையும் இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

எரிசக்திப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், மங்களூருவில் 80,000 மெட்ரிக் டன் கூடுதல் சேமிப்புத் திறன் கொண்ட எல்பிஜி திட்டம், தேவனகொண்டியில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் விநியோக முனையம், பெங்களூருவில் தினமும் 13 டன் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் ஆலை ஆகியவை தொடங்கப்படுவதாகக் கூறினார்.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 300 ஜிகாவாட்டைக் கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமரின் சூரியசக்தி வீடுகள் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும், கர்நாடகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் மேற்கூரை சூரிய மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிப் உற்பத்தி, கப்பல் கட்டுமானம், செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள், குவாண்டம் கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில்  முன்னிலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாக பிரதமர் கூறினார்.

கர்நாடகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தை மேலும் வேகப்படுத்தும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335840&reg=3&lang=1

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335986) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada