சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் இந்தியா சாதனை: மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 2:04PM by PIB Chennai

இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 2015-ம் ஆண்டிலிருந்து 38 சதவீதம் குறைந்துள்ளன. உலக அளவிலான உயிரிழப்பு சரிவு 35 சதவீதமாக உள்ள நிலையில், அந்த சராசரியைவிட இந்தியாவில் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. இந்தச் சாதனையை உலக சுகாதார அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான உலக காசநோய் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும் காசநோய் உயிரிழப்பைக் குறைப்பதில் இந்தியாவின் பங்களிப்பை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா விடுத்துள்ள செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் காசநோய் ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று கூறினார். காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் இந்தியா 94 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் காசநோய் ஒழிப்பு இயக்கத்தின் மூலம் 25 கோடிக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 11 கோடிக்கும் மேற்பட்ட எக்ஸ்ரே பரிசோதனைகளும், 3 கோடி மூலக்கூறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் 48.64 லட்சம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் அறிகுறிகள் இல்லாத 14.97 லட்சம் பேருக்கும் நோய் கண்டறியப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் திரு நட்டா கூறினார்.

காசநோயைத் தடுப்பது, முன்கூட்டியே கண்டறிவது, உரிய சிகிச்சை, ஊட்டச்சத்து உதவி வழங்குவது ஆகியவை மூலம் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் திரு ஜெ பி நட்டா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335775&reg=3&lang=1  

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335984) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi