இடுகை இடப்பட்ட நாள்:
21 AUG 2026 10:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.08.2026) எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் உரையாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்ற கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுக்குப் பிரதமர் வாழ்த்துக் கூறினார். இந்த மதிப்பிற்குரிய உச்சி மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். பகிரப்பட்ட எதிர்காலம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அவர் அண்மை ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக உருவாகும் பாதிப்புகளின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் எதிரொலிப்பதாக குறிப்பிட்டார். ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று இருந்த நிலையில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியதாக அவர் தெரிவித்தார். பகிரப்பட்ட எதிர்காலம் என்ற உணர்வு 21-ம் நூற்றாண்டில் உலக அளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவிடும் என்று அவர் கூறினார்.
வளர்ச்சி, வள ஆதாரங்களை ஆயுதமாக்கும் நடவடிக்கைகள், அதிகரித்து வரும் நம்பிக்கையின்மை போன்றவைகளுக்குத் தீர்வு காண உலக நாடுகள் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கு உகந்த நாடாக கருதுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உலக அளவில் விரைவான வளர்ச்சி கண்டு வரும் பொருளாதார நாடு என்ற இந்தியாவின் நிலை குறித்துச் சுட்டிக்காட்டிய பிரதமர் சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையின் போது அறிவிக்கப்பட்ட உற்பத்தி, தொழில்நுட்பம், பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு முக்கியத் துறைகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
கொள்கை அளவிலும், நிர்வாகத்திலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசுகளின் நிலைப்பாட்டிற்கு மாறாக உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார். மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக ரூ.2.5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார். இதன் காரணமாக ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் ஏற்றுமதி ரூ.15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், 14 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302213®=3&lang=1
***
SS/SV/GS/SH