இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2026 10:47AM by PIB Chennai
இந்தியாவின் ரசாயனங்கள், பெட்ரோ ரசாயனங்கள் துறை, உற்பத்தி, முதலீடு, ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் வேகமாக முன்னேறி வருகிறது. இத்துறையை உலக அளவில் போட்டியிடும் வலிமையான தொழில் துறையாக உருவாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம்:
உலகின் 6-வது பெரிய ரசாயன உற்பத்தி நாடாகவும், ஆசியாவின் 4-வது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது. இத்துறையின் தற்போதைய மதிப்பு 220 பில்லியன் அமெரிக்க டாலர். இது 2030-ல் 300 பில்லியன் டாலராகவும், 2040-ல் ஒரு டிரில்லியன் டாலராகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாயங்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் 2-வது இடத்திலும், வேளாண் ரசாயனங்கள் ஏற்றுமதியில் 3-வது இடத்திலும் இந்தியா உள்ளது. இத்துறையில் 13,000 பெரிய நிறுவனங்களும், 4.45 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் உள்ளன.
முதலீடும் உற்பத்தியும்:
பெரும்பாலான ரசாயனத் துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2014–2026 காலகட்டத்தில் ரூ.1,04,895 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இது 2004–2014 காலகட்டத்தில் ஈர்க்கப்பட்ட ரூ.45,240 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகம். முக்கிய ரசாயனங்கள், பெட்ரோ ரசாயனங்கள் உற்பத்தி 2015–16-ல் 4.56 கோடி டன்னிலிருந்து 2024–25-ல் 5.86 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
தொழிற்பூங்காக்களும் வேலைவாய்ப்பும்:
குஜராத் தஹேஜ், ஆந்திராவின் விசாகப்பட்டினம்–காக்கிநாடா, ஒடிசாவின் பாரதீப் ஆகிய 3 சிறப்பு முதலீட்டுப் பகுதிகள் மூலம் ரூ.3.4 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 2,200-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சிறப்பு முதலீட்டுப் பகுதியும் சுமார் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 40 சதவீதம் உற்பத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
'பவ்யா ரசாயன்' திட்டத்தின் கீழ் குறைந்தது 2,000 ஏக்கர் பரப்பளவில் 3 ரசாயனப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பூங்காவுக்கும் மத்திய அரசு அதிகபட்சம் ரூ1,000 கோடி மானியம் வழங்கும். மாநில அரசு குறைந்தது ரூ. 500 கோடி பங்களிக்க வேண்டும். மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 3,030 கோடி. இதில் ரூ. 3,000 கோடி அடிப்படைக் கட்டமைப்புக்கும், ₹30 கோடி நிர்வாகச் செலவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2026–27 முதல் 2030–31 வரை 5 ஆண்டுகள் செயல்படுத்தப்படும்.
பிளாஸ்டிக் தொழில் வளர்ச்சிக்காக 10 பூங்காக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் 50 சதவீதம் வரை, அதிகபட்சம் ரூ. 40 கோடி மானியம் வழங்கப்படுகிறது. 4 பூங்காக்களின் கட்டமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அவற்றில் 3 பூங்காக்கள் 2025–26-ல் நிறைவடைந்தன.
ஆராய்ச்சி, திறன் மேம்பாடு:
ரூ. 1 லட்சம் கோடி நிதியுடன் 2025 நவம்பரில் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத் திட்டத்தில், மேம்பட்ட ரசாயனங்கள், பெட்ரோ ரசாயன தொழில்நுட்பங்களும் 2026 அக்டோபர் 8 முதல் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய நெகிழி தொழில் நுட்ப நிறுவனமான சிபெட் (CIPET) நாடு முழுவதும் 51 மையங்களைக் கொண்டுள்ளது. 2014-க்குப் பிறகு 19 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 3 மையங்கள் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு மேலாண்மைக்காகச் செயல்படுகின்றன. இவற்றில் இதுவரை 6.72 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2014–24 காலகட்டத்தில் மட்டும் 5.21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில் 8.53 லட்சம் தொழில்நுட்பச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்குப் பயிற்சியும் பாதுகாப்பும்:
2016-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்குப் பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 2022–23 முதல் ஐபிஎஃப்டி (IPFT) நிறுவனமும் இப்பணியில் ஈடுபட்டுள்ளது. 2026 ஆகஸ்ட் நிலவரப்படி 250-க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ரசாயனப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த 37 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் அமலில் உள்ளன. அபாயகரமான ரசாயனங்களைக் கையாளும் 2,393 தொழிற்சாலைகளில் 5 ஆண்டுகளில் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியிலும் 50 தொழிற்சாலைகளைச் சேர்ந்த தலா 2 பணியாளர்கள் என 100 பேர் பங்கேற்கின்றனர். 2026 ஆகஸ்ட் வரை 21 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு, 1,376 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 2,441 பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்தியா கெம் 2026
அக்டோபர் 22 முதல் 24 வரை மும்பையில் நடைபெற்ற 14-வது இந்தியா கெம் மாநாட்டில் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழில்துறையினர், முதலீட்டாளர்கள், சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்ற இம்மாநாடு, ரசாயனத் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பையும் புதிய முதலீடுகளையும் ஊக்குவித்தது.
உற்பத்தி, முதலீடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, தரம், பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்தியாவின் ரசாயனத் தொழிலை உலக அளவில் வலுப்படுத்துவதே இத்திட்டங்களின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333894®=3&lang=1
****
SK/PLM/RJ